வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2022 (13:13 IST)

உலகக்கோப்பையை உச்சி முகர்ந்த மெஸ்ஸி – அர்ஜென்டினாவின் வெற்றி சாத்தியமானது எப்படி?

Argentina
ஒரு போட்டி ரசிகர்களை என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதற்குச் சிறந்த சான்று, நேற்றிரவு நடந்த கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி. அர்ஜென்டினாவும் பிரான்சும் அப்படியோர் அபாரமான ஆட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கினார்கள்.

முஷ்டிகளை மடக்கி, கை முட்டிகளை உந்தி, அர்ஜென்டினா வீரர்களும் ரசிகர்களும் காற்றில் பறந்தனர். இறுதியாக அனைத்தும் முடிந்தது. வெற்றி கிடைத்தது. உலகக்கோப்பையைச் சுமக்கும் பாக்கியம் அர்ஜென்டினாவுக்குக் கிடைத்துவிட்டது.

இறுதிப்போட்டி, இரு அணிகளுக்கும் இடையிலானது, எனச் சொல்வதைவிட, மெஸ்ஸிக்கும் எம்பாப்பேவுக்கும் இடையிலானது என விவரிப்பது சரியாக இருக்கும். ஆட்டம் முடிய ஒன்பது நிமிடங்கள் இருந்த நிலையில், ஒரு பெனால்டி ஷாட் மூலம் கோல் அடித்து, அணியினருக்கு உயிர் கொடுத்தார் பிரான்ஸ் அணியின் எம்பாப்பே.

பிரான்சுக்கு 19 வயதில் உலகக்கோப்பையைப் பெற்றுத்தந்த, 23 வயதான அந்த வீரர் அதோடு நிறுத்திவிடவில்லை. அதற்கு அடுத்த நிமிடத்திலேயே மற்றுமொரு கோல் அடித்து அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

75வது நிமிடம் வரை வீறுகொண்டு தாக்கிக் கொண்டிருந்த அர்ஜென்டினா, அதற்குப் பிறகு கொஞ்சம் சாவகாசமாக விளையாடத் தொடங்கியது. ஆனால், கடைசி பத்து நிமிடங்கள் வரையல்ல, கடைசி நொடி வரை தனக்கு எதிராகப் போராடியாக வேண்டும் என்று எம்பாப்பே, அந்த இரண்டு கோல்களின் மூலம் எதிரணிக்கு உணர்த்தினார்.

அவருடைய அனைத்து ஆட்டத்தில் கொஞ்சம் திணறிய எதிரணி, மீண்டும் தங்களுடைய தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கி, போராடி வெற்றியைப் பெற்றது.

1986ஆம் ஆண்டு கோப்பையை மாரடோனா வென்றுகொடுத்தபோது, அவர் கோப்பையைச் சுமந்தார். அணியின் வீரர்களும் ரசிகர்களும் அவரைச் சுமந்தார்கள்.

36 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று, அதேபோல் மெஸ்ஸி அணிக்கு வெற்றியைப் பரிசளித்து கோப்பையைச் சுமந்தார். அணி வீரர்களும் ரசிகர்களும் அவரைச் சுமந்தார்கள். வரலாறு மீண்டும் நிகழ்ந்துள்ளது.
Messi

கத்தாரில் நடந்த உலகக்கோப்பையின் வியத்தகு இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியைத் தோற்கடித்து, தங்களது 36 ஆண்டுக்கால கனவை அவர்கள் சாத்தியமாக்கியுள்ளார்கள். கடைசியாக மெக்சிகோவில் மாரடோனா கோப்பையைச் சுமந்தபோது ருசித்த மகிழ்ச்சியை, இப்போது மீண்டும் ருசிக்கிறார்கள்.

பெனால்டி ஷூட் அவுட் வரை சென்ற இந்த ஆட்டத்தில், இறுதியாக கொன்சாலோ மோன்டியெல் அடித்த நான்காவது பெனால்டியில் பந்து கோல் போஸ்டுக்குள் போனபோது, அங்கிருந்த ஒருவராலும் நிலைகொள்ள முடியவில்லை. அளவில்லா மகிழ்ச்சி அனைவரையும் ஆட்கொண்டிருந்தது.

லுசைல் மைதான அரங்கில், முழுவதும் வெள்ளையும் நீலமும் ஆட்கொண்டிருந்தது. அனைவர் மனதிலும் ஓர் ஆறுதல். மகிழ்ச்சி வெடிப்பில் கத்திக் கொண்டிருந்தனர். 120 நிமிடங்களுக்கு நடந்த இறுதிப்போட்டியில், அவ்வளவுதான் ஆட்டம் முடிந்தது என நினைத்த போதெல்லாம், இல்லை நாங்கள் விட்டுவிட மாட்டோம் என்று, எம்பாப்பே சவால் விட்டுக் கொண்டேயிருந்தார்.

இறுதியில் போட்டி பெனால்டி ஷூட் அவுட்டாக சென்றது. நிகோலஸ் ஒட்டமெண்டி, கொன்சாலோ மோன்டியெல் இருவரும் இரண்டு தருணங்களில் செய்த சிறுபிழை, பிரான்ஸ் அணிக்குச் சாதகமாகவே, ஆட்டம் மிகவும் சூடு பிடித்தது.

போட்டியின் 80வது நிமிடம் வரை பிரான்ஸ் அணியை ஆட விடவே இல்லை அர்ஜென்டினா.
ஆனால், ஒட்டமெண்டியின் பிழையால் கிடைத்த பெனால்டியை எம்பாப்பே கோலாக்கியதும் பிரான்ஸ் அணிக்குக் கிடைத்த வீரியம் கொஞ்ச நஞ்சமல்ல.

பிறகு, அடுத்தடுத்து அவர்கள் களமிறக்கிய வீரர்களான கோமன், கிங்ஸ்லி கோமன், இப்ராஹிம் கொனாடே, எட்வர்டோ காமவிங்கா ஆகியோர், ஆட்டத்தின் பாதையையே மாற்றிவிட்டார்கள்.

மார்கஸ் துரம், யெல்லோ கார்ட் வாங்கினாலும் சரி என்ற நிலையில் இறங்கி ஆடினார். ஆனால், அர்ஜென்டினா அணி முதன்முதலாக மாற்றாக களமிறக்கிய மார்கோஸ் அகுனா, கொஞ்சமும் சளைக்காமல் பிரான்ஸ் அணியின் பலவீனமான இடது பக்கத்திலிருந்து தாக்குதலைத் தொடர்ந்தார்.
Mbappe

அவரைத் தொடர்ந்து, மெஸ்ஸி, டி பால், ஆல்வாரெஸ் ஆகியோர் கொஞ்சம் விடாது வாய்ப்பை மூர்க்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

முதல் பாதியில் டி மரியாவின் பங்களிப்பைச் சொல்லியே ஆக வேண்டும். களத்தில் சற்று இடைவெளி விழுந்திருந்த அவரை ஸ்கலோனி ஏன் இறுதிப்போட்டியில் இறக்கினார் என்ற கேள்வி ஆரம்பத்தில் எழுந்தது.

ஆனால், “அவரை இதற்காகத்தான் நான் ஒளித்து வைத்திருந்தேன்” என்னும் அளவுக்கு இருந்தது டி மரியாவின் அதிரடி. ஆம், அர்ஜென்டினா அணியின் இறுதிக்கோப்பைக்கான துருப்புச்சீட்டாக திகழ்ந்தார் டி மரியா.

பெனால்டி மூலம் முதல் கோல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, சாகசம் நிரம்பிய இரண்டாவது கோலை தானே அடித்துவிட்டு அவர் மைதானத்தில் துள்ளிக் குதித்தபோது, அவரால் அழாமல் இருக்க முடியவில்லை.

120 நிமிடங்களுக்கு நடந்த அந்தப் போரில் வெற்றியைச் சுவைத்து, அணியின் கேப்டன் லியோனெல் மெஸ்ஸி கோப்பையை உயர்த்திய சிறிது நேரத்திலேயே அரங்கம் முழுவதும் ஆனந்தக் கண்ணீர் நிரம்பி வழிந்தது.

நான்கு வாரங்கள், 64 போட்டிகள், 172 கோல்களுக்கு பிறகு கத்தார் உலகக்கோப்பை போட்டி சாகசங்களையும் திருப்புமுனைகளையும் அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் ஒருங்கே அளித்து முடிவுக்கு வந்துள்ளது.

பிரான்ஸ் அணியின் முதல் 60 நிமிடங்கள் சற்று தடுமாற்றங்களுடன் தான் இருந்தது. முதல் 70 நிமிடங்கள் வரையிலுமே, அங்கு ஆடிக்கொண்டிருப்பது பிரான்ஸ் அணி தானா என்ற சந்தேகம் எழும் அளவுக்கு அவர்களுடைய செயல்பாடு இருந்தது.

அது அவர்களுடைய தோல்விக்கு ஒரு முக்கியக் காரணம் எனக் கூறலாம். “நாங்கள் முதல் 60 நிமிடங்களில் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. அளவுக்கு அதிகமான ஆற்றலோடு இருந்த எதிரணிக்கு ஈடுகொடுக்கவில்லை.

ஆனால், நாங்கள் மீண்டு வந்தோம். ஆட்டத்தை மிகவும் கடினமான சூழலுக்குத் திசை திருப்பினோம். இந்தப் போட்டி, நிறைய உணர்ச்சிகரமான தருணங்கள் நிறைந்தது. இறுதியில் மிகவும் கடுமையாகத் தோற்றுவிட்டோம்,” எனக் கூறியுள்ளார் பிரான்ஸ் பயிற்சியாளர் டிடியெர் டெஸ்ஷாம்ப்ஸ்.
Mbappe 1

அவர் கூறியதைப் போலவே, 80, 81வது நிமிடங்களில் இரண்டாம் பாதியில் பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே அடித்த மூன்று கோல்களும் அர்ஜென்டினா ரசிகர்களின் இதயங்களை நொறுக்கிவிட்டது என்றே சொல்லலாம்.

கால்பந்து வரலாற்றில் மிகவும் சிறப்பான ஆட்டங்களில், வரலாற்றில் இடம் பிடிக்கக்கூடிய வகையில் இந்த இறுதிப்போட்டியை மாற்றிய தருணம் அது.

இரண்டாவது கூடுதல் நேரத்தின் இறுதியில் எம்பாப்பே உருவாக்கிய கோல் வாய்ப்பு மூலம், அங்கேயே ஆட்டம் முடிந்திருக்க வேண்டியது. கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸ் அதைத் தடுத்து காப்பாற்றினார். அங்கு மட்டுமின்றி, அவருடைய செயல்பாடு பெனால்டி ஷூட் அவுட்டிலும் அபாரமாக இருந்தது.

அர்ஜென்டினா விடவில்லை. இறுதிவரை அவர்களுடைய அனைத்து திறனையும் செலுத்தினார்கள்.

இந்த வெற்றி அவர்களுடைய 36 ஆண்டுக்கால கனவு, அதைத் தவறவிட மாட்டோம் என்ற உறுதியை, அணியிலிருந்த ஒவ்வொருவரின் ஆட்டமும் காட்டியது. அதற்கான பரிசுதான் இந்தக் கோப்பை.