செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (14:18 IST)

கூவாகம் அழகிப் போட்டியில் வென்ற மெஹந்தி: "பெற்றோர்கள் கைவிடாமல் எங்களை ஏற்க வேண்டும்"

BBC
விழுப்புரத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் அழகிப்போட்டியில் சென்னையை சேர்ந்த திருநங்கை முதலிடத்தையும், திருச்சியை சேர்ந்த திருநங்கை இரண்டாம் இடத்தையும், சேலத்தை சேர்ந்த திருநங்கை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் இத்திருவிழாவை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று சூழல் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் கடந்த 5ஆம் தேதி சாகை வார்த்தல்‌ நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

கூத்தாண்டவர் கோயிலின் முக்கிய நிகழ்வான மிஸ் கூவாகம், தாலி கட்டிகொள்ளும் நிகழ்வு, தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.

திருநங்கைகளை மகிழ்வித்து உற்சாகப்படுத்தும் விதமாக கடந்த 2 நாட்களாக விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான பல்வேறு நடனப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், அழகிப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு சார்பில் திருநங்கைகளுக்கான நடனப்போட்டிகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான திருநங்கைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பாடலுக்கேற்ப நடனமாடி அசத்தினார்கள்.

அதனை தொடர்ந்து மிஸ் கூவாகம்-2022 அழகிப்போட்டிக்கான முதல் சுற்று கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றதில் விழுப்புரம், கடலூர், சென்னை, திருச்சி, சேலம், கோவை, ஈரோடு, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, மற்றும் தமிழகத்தின் பிற‌ மாவட்டத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி நடந்து வந்தனர்.

முதல் சுற்றில் நடை, உடை, பாவணை ஆகியவற்றின் அடிப்படையில் திறமையாக செயல்பட்ட திருநங்கைகள் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இறுதிச்சுற்று விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் வைகை சந்திரசேகர், சின்னதிரை நடிகைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அழகிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பேரும் இறுதி சுற்றில் தமிழ் கலாசார உடை அணிந்து நடை, உடை, பாவணை ஆகியவற்றின் அடிப்படையில் 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொது அறிவுத்திறன் போட்டியில் மூன்று பேர் இறுதியாக தேர்வு செய்யப்பட்டு மிஸ் கூவாகம் அழகி பட்டம் வழங்கப்பட்டது.

விமானப் பணிப்பெண் பயிற்சி

மிஸ் கூவாகம் போட்டியில் சென்னையை சார்ந்த மெஹந்தி முதல் இடத்தையும், திருச்சியை சார்ந்த ரியானா சூரி இரண்டாம் இடத்தையும், சேலத்தை சேர்ந்த சாக்‌ஷி ஸ்வீட்டி மூன்றாம் இடத்தினை பிடித்து மிஸ் கூவாகம் பட்டத்தினை வென்றனர்.

முதலிடம் பிடித்த மெஹந்தி தான் விமானப் பணிப் பெண் பயிற்சி முடித்து தற்போதுதான் முதல் முதலாக அழகிப் போட்டியில் பங்கேற்றுள்ளதாகவும் பங்கேற்ற முதல் போட்டியிலேயே மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டிருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

"தற்போது திருநங்கைகளின் வளர்ச்சியால் எங்களை ஒதுக்கி வைத்திருந்த பெற்றோர்கள் இனிமேல் எங்களை ஏற்பார்கள் என்று நம்புகிறேன். திருநங்கைகள் அனைவருமே வாழ்க்கையில் முன்னேற நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும். சட்ட அங்கீகாரத்துடன் பெற்றோர் அனைவரும் எங்களை ஏற்க வேண்டும். அவ்வாறு செய்தால் திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் மேலும் மேலும் நிறைய சாதிக்க முடியும்," என மிஸ் கூவாகம் பட்டம் வென்ற மெஹந்தி தெரிவித்தார்.