வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 27 மே 2015 (19:43 IST)

கடல் நீர் சுத்திகரிப்பால் மருதங்கேணியில் மீன்பிடிக்கு பாதிப்பு இல்லை

யாழ் குடாநாட்டுக்கான குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் மருதங்கேணி கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


 
மாறாக இத்திட்டத்தின் காரணமாக மீன் இனம் பெருகுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும் என்றும் என்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடல் நீரை எடுத்து மருதங்கேணியில் அதனைக் குடிநீராக்குவதற்கான ஆலையை அமைப்பதன் மூலம் அங்கு மீன்வளம் பாதிக்கப்படும் என்று கவலைகள் வெளியாயின.
 
கிளிநொச்சி மாவட்டத்தின் பெரிய குளமாகிய இரணைமடு குளத்தில் இருந்து யாழ் குடாநாட்டுக்குக் குடிநீர் வழங்குவதில் எழுந்திருந்த பல்வேறு பிரச்சினைகளையடுத்து, இதற்கான மாற்றுத் திட்டமாகக் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை வடமாகாண சபை முன்வைத்திருந்தது.
 
இந்தத் திட்டத்தை ஆசிய அபிவிருத்தி வங்கியும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையும் ஏற்றுக்கொண்டதையடுத்து, அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
 
ஆயினும் இவ்வாறு கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தினால் மருதங்கேணி கடற்பரப்பில் மீன்பிடி தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படும் என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்ததையடுத்து, அதன் உண்மை நிலைமையைத் தெளிவுபடுத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமமையில் இன்று யாழ் நூலக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
 
இந்தக் கூட்டத்தை அடுத்தே மருதங்கேணிப் பகுதியில் மீன்பிடித் தொழிலுக்கு பாதிப்புகள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது