புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 16 ஜனவரி 2021 (09:19 IST)

அலங்காநல்லூரில் சீறிப்பாயும் காளைகள்; அசராமல் எதிர்கொள்ளும் மாடுபிடி வீரர்கள்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிகட்டு போட்டி இன்று (ஜனவரி 16) காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
 
இந்த போட்டியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
 
முதல் காளையாக அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் காளைக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
இதில் 655 மாடுபிடி வீரர்களும், 800 காளைகளும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முதல் பரிசாக அதிகமாடுகளை பிடிக்கும் வீரருக்கு தமிழக முதல்வர் சார்பில் பரிசாக கார் ஒன்றும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு துணை முதல்வர் சார்பில் கார் ஒன்றும் என மொத்தம் இரண்டு கார்கள் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளன.
 
மேலும், தங்ககாசு, தொலைக்காட்சிப் பெட்டி, பிரிட்ஜ், மிக்சி, இருசக்கர வாகனம், மிதிவண்டி, கட்டில், மெத்தை, ஆடைகள் போன்ற எண்ணற்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
 
முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வருகை தர உள்ளதால் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
மருத்துவ பரிசோதனைக்களுக்காகவும், காயங்கள் ஏதும் ஏற்பட்டால் உடனடியாக வீரர்களை அழைத்து செல்லவும்108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
முன்னதாக, முதல் சுற்றுக்கான மாடுபிடி வீரர்கள் போட்டி துவங்குவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்பாகவே களத்திற்குள் வந்தனர். இதைத்தொடர்ந்து பூஜைக்காக கோவில் காளைகள் வரவழைக்கப்பட்டிருந்தன.
 
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி துவங்குவதற்கு சற்று நேரம் முன்பு, வாடிவாசலுக்கு பின்புறம் காளைகள் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதியில் காளை உரிமையாளர் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக அழைத்துச்சென்ற ரெட் கிராஸ் அமைப்பினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
பாலமேடு ஜல்லிக்கட்டு
 
பொங்கல் விழாவின் இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கல் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகளுடனும் உற்சாகத்துடனும் நடந்து முடிந்தது.
 
விறுவிறுப்பாக நடந்த போட்டியில் மாடுபிடி வீரர்களை களத்திலேயே காளைகள் பந்தாடிய காட்சிகள் காண்போருக்கு மெய்சிலிர்க்கும் அனுபவத்தை கொடுத்தன. இந்த போட்டியில் 18 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரரும் பொறியியல் கல்லூரி மாணவருமான கார்த்திக்கு கார் பரிசாகவும், சிறந்த காளைக்கு காங்கேயம் கன்றுடன் கூடிய பசுவும் வழங்கப்பட்டன.
 
முன்னதாக, மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிகட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
 
வீரர்களின் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கிய ஜல்லிகட்டு போட்டியில் பாலமேடு கிராம கோயில்களுக்கு சொந்தமான காளைகள் அவிழ்க்கப்பட்டு பின்னர் வரிசையாக காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.