1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : சனி, 5 ஏப்ரல் 2014 (13:25 IST)

காட்டு ராஜாவின் வம்சாவளியை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்

இன்று உலகின் சில காடுகளில் மட்டும் வாழும் சிங்கங்கள் எங்கே, எப்போது உருவாகின, இந்தச் சிங்கங்களின் மூதாதையர்கள் யார் என்ற கேள்விகளுக்கு விஞ்ஞானிகள் விடை கண்டுள்ளனர்.

இன்றைய சிங்கங்களையும் அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ள சிங்கங்களின் உடல் படிமங்களையும் மரபணு ஆராய்ச்சிக்கு உட்படுத்திய விஞ்ஞானிகள், கடைசியாக ஒரு லட்சத்து 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய சிங்கங்களின் பொதுவான மூதாதை மிருகங்கள் வாழ்ந்துள்ளதாக உறுதிசெய்துள்ளனர்.
 
இன்றைய நவீனச் சிங்கங்கள் இரண்டு குழுக்களாக பரிணாமம் அடைந்துள்ளன.
 
கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்கப் பிராந்தியங்களில் ஒருவகைச் சிங்கங்கள் வாழ்கின்றன. மற்றைய சிங்கக்கூட்டம் மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்கப் பிராந்தியத்திலும் இந்தியாவிலும் உள்ளது.
இரண்டாவது வகை இன்று அழியக்கூடிய அபாயத்தில் இருக்கின்றது.அதாவது, இந்தச் சிங்கங்களின் மரபணு பல்வகைத் தன்மைகள் அரைவாசியாக அருகிவிடும் அபாயம் நிலவுகிறது.
 
பொதுவாக வெப்ப மண்டலக் காடுகளில் வாழும் மிருகங்களின் பழைய வரலாறுகளைக் கண்டுபிடிப்பது இலகுவானது அல்ல. மரபணுக்கள் கிடைக்கக்கூடிய படிமங்களை அந்த மிருகங்கள் விட்டுச் செல்வதும் குறைவு.
 
இதனால் உலகெங்கிலும் அருங்காட்சியங்களில் பேணிப்பாதுகாக்கப்படும் சிங்க உடல் படிமங்களின் டிஎன்ஏ மரபணுத் தகவல்களை சர்வதேச விஞ்ஞானிகள் குழுவொன்று ஆராய்ந்துள்ளது.
 
இதன்படி இன்றுள்ள பேன்தேரா லியோ-(Panthera leo) என்ற பொதுவான சிங்கக் குடும்பம், கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்கப் பிராந்தியங்களில் முதலில் உருவாகியுள்ளது.

ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்வு

அதன்பின்னர், அதாவது ஒரு லட்சத்து 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இந்தச் சிங்கக் குடும்பத்தின் மற்ற உப குழுக்கள் பரிணாமம் அடையத் தொடங்கியுள்ளன.
ஆப்பிரிக்காவின் பூமத்திய ரேகைப் பகுதிகளில் வெப்ப மண்டல மழைக்காடுகளும் சஹாராப் பகுதியில் சமதள புல்வெளிகளும் விரிவடைந்த காலம் அது.
 
அப்போது தான் ஆபிரிக்கா கண்டத்தின் பொதுவான சிங்கக் குடும்பம், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதி-மேற்கு மற்றும் வடக்குப் பகுதி என்று தனித்தனி குடும்பங்களாக பிரியத் தொடங்கியது.
 
இந்த இரண்டு சிங்கக் குழுக்களுக்கும் இடையிலான மரபணு வித்தியாசங்களும் இன்றளவும் உள்ளன.
சுமார் 51 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்கக் கண்டம் வறண்டு, சஹாரா பாலைவனம் விரிவடைந்தபோது இரண்டு குடும்பங்களும் நிரந்தரமாகவே பிரிந்துவிட்டன.
 
அதே காலப் பகுதியிலேயே, மேற்கு ஆப்பிரிக்கச் சிங்கங்கள் மத்திய ஆபிரிக்காவுக்குள்ளும் சென்று தங்களின் வம்சத்தை விருத்தி செய்துள்ளன.
 
ஆபிரிக்காவின் நைல், நைஜர் ஆகிய பெரிய நதிகளும் இந்த இரண்டு சிங்கக் குடும்பங்களும் நிரந்தரமாகப் பிரிந்திருக்க காரணமாகிவிட்டன.
 
சுமார் 21 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஆப்பிரிக்காவிலிருந்து சிங்கங்கள் தங்களின் குடிபெயர்வைத் தொடங்கியிருக்கின்ற என்ற விபரமும் இன்னொரு மரபணு ஆய்வில் உறுதியாகியுள்ளது.


அதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தான் வடக்கு ஆப்பிரிக்காவை விட்டு சிங்கங்கள் வெளியேறி இந்தியா வரை தொலைதூரம் வந்துசேர்ந்துள்ளன.
 
இன்னும் தாமதமாக, 5000 ஆண்டுகளுக்கு முன்னர், இன்னொரு சிங்கக் கூட்டம் ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து வெளியேறி இன்று மத்திய கிழக்கில் இரான் உள்ள பகுதிக்கு வந்துசேர்ந்துள்ளது.
 
இன்று இந்தியாவின் குஜராத் மாநிலம் கத்தியாவார் தீபகற்பத்தில் வெறும் 400 சிங்கங்கள் தான் உள்ளன.
 
ஆப்பிரிக்கச் சிங்கங்களின் மூன்றில் ஒரு பங்கு கடந்த 20 ஆண்டுகளில் காணாமல்போய்விட்டது.
மேற்கு ஆப்பிரிக்காவில் 400 முதல் 800 வரையும்-மத்திய ஆபிரிக்காவில் 900 சிங்கங்களும் இன்று உள்ளதாக கணக்கிடப்படுகிறது.
 
இந்தச் சிங்கங்கள் இன்னும் ஒழிந்துவிடாமல் பாதுகாப்பதற்கு இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் பெரிதும் உதவும் என்று ஆய்வை நடத்திய பிரிட்டனின் டுர்ஹாம் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ரோஸ் பார்னெட் கூறுகிறார்.