கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் ஒரு வழக்கமான காதல் கதை என்றுதான் பலருக்கும் தோன்றும். படம் துவங்கி சிறிது நேரத்திற்கு அந்த நினைப்பு சரிதான் என்ற வகையில்தான் படம் நகர்கிறது. ஆனால், "படம் இப்படித்தான் நகரும்னு நீங்க என்ன நினைக்கிறது?" என்று படம் நெடுக ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
சித்தார்த்தும் (துல்கர் சல்மான்), காளீஸும் (ரக்ஷன்) ஜாலியான நண்பர்கள். பார்ட்டி, குடி, ஸ்போர்ட்ஸ் கார் என்று ஜாலியாக பொழுதைக் கழிப்பவர்கள். ஒரு ஆசிரமத்தில் வளர்ந்த, அழகுக் கலை நிபுணரான மீரா (ரிது வர்மா) மீது சித்தார்த்துக்கு காதல். மீராவின் தோழி (நிரஞ்சனி) மீது காளீசுக்கு காதல். மீராவும் சித்தார்த்தை காதலிக்க ஆரம்பிக்கிறாள். ஆனால், சித்தார்த்துக்கும் காளீசுக்கும் ஒரு மறுபக்கம் இருக்கிறது. இருவரும் கணிணித் துறையில் பணியாற்றுபவர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டாலும், உண்மையில் திருடர்கள்.
இது தெரியாமல் மீரா சித்தார்த்தை திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறாள். மீராவின் தோழி காளீஸை ஏற்கிறாள். நால்வரும் வேறு நகரத்திற்குப் போய் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க நினைக்கிறார்கள். அப்போது நடக்கும் ஒரு சம்பவம் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிடுகிறது. இதற்கு நடுவில் காவல்துறை அதிகாரி பிரதாப் சக்கரவர்த்தி (கௌதம் வாசுதேவ் மேனன்), சித்தார்த்தையும் காளீஸையும் தேடிக்கொண்டிருக்கிறார்.
சந்தேகமே இல்லாமல் படத்தின் ஹீரோ, திரைக்கதைதான். ஒவ்வொரு 20-25 நிமிடங்களுக்கு ஒரு முறை ஏதோ ஒரு திருப்பம் படத்தை சுவாரஸ்யமாக்கிக்கொண்டே போகிறது. படம் இப்படித்தான் செல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ஒவ்வொரு முறையும் பொய்யாக்கிக் கொண்டே போவதில்தான் இந்த படத்தின் வெற்றி இருக்கிறது.
துல்கர் சல்மான், ரிது வார்மா ஆகிய இருவரது நடிப்பும் சிறப்பு. நிரஞ்சனி சற்று அடக்கி வாசிப்பதைபோல நடித்திருக்கிறார். காளீஸாக வரும் ரக்ஷன், வசனங்களை மிக வேகமாகப் பேசுவதால் பல சமயங்களில் அவர் பேசுவதைப் புரிந்துகொள்ள சிரமப்பட வேண்டியிருக்கிறது. ஆனால், படத்தில் அட்டகாசம் செய்திருப்பது காவல்துறை அதிகாரியாக வரும் கௌதம் மேனன்தான். புத்திசாலித்தனமும் தீரமும்மிக்க காவல்துறை அதிகாரியாக அறிமுகமாகி, வேறு ஒரு பரிமாணத்தோடு முடிகிறது அவரது பாத்திரம். அந்தப் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்திருக்கிறார் கௌதம்.
கே.எம். பாஸ்கரனின் ஒளிப்பதிவு, படத்திற்குக் கூடுதல் பலம். பாடல்கள் சில நன்றாக இருந்தாலும் அவை இல்லாமல் இருந்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். பின்னணி இசை பல சமயங்களில் தொந்தரவாக இருக்கிறது. குறிப்பாக, கௌதம் மேனன் பேசும் காட்சிகளில் அவர் பேசுவதே புரியாத அளவுக்கு இசையின் தொந்தரவு இருக்கிறது.
இந்த ஆண்டு துவங்கி எட்டு வாரங்கள் கழிந்துவிட்ட நிலையில், எல்லோரும் ரசிக்கும் வகையில் வெளியான முதல் படமாக, இந்தப் படத்தைச் சொல்லலாம்.