வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 31 ஜனவரி 2015 (14:42 IST)

இலங்கை தலைமை நீதியரசராக கே.ஸ்ரீபவன் பதவியேற்றார்

இலங்கையின் 44வது தலைமை நீதியரசராக கே.ஸ்ரீபவன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஒய்வு பெற்றுள்ள நிலையிலேயே கே.ஸ்ரீபவன் புதிய தலைமை நீதியரசராக நியமனம் பெற்றுள்ளார்.
 
யாழ் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற கே.ஸ்ரீபவன் 1974ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியில் இணைந்து கொண்டார்.
 
அதன் பின்னர் 1978ஆம் ஆண்டு சட்டத்தரணியாக சத்தியபிரமாணம் செய்துகொண்ட ஸ்ரீபவன், 1979ஆம் ஆண்டில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரசதரப்பு வழக்கறிஞராக இணைந்துகொண்டார்.
 
24 ஆண்டுகள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் கடமையாற்றிய ஸ்ரீபவன், 2002ஆம் ஆண்டு மேன்முறையிட்டு நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
2008ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதியரசராக பதவியேற்ற கே.ஸ்ரீபவன் 2013ஆம் ஆண்டு பதில் தலைமை நீதியரசராகவும் பணியாற்றியிருந்தார்.
 
இலங்கையில் 1991ஆம் ஆண்டில் 39வது தலைமை நீதியரசராக ஹேர்பட் தம்பையா பணியாற்றியிருந்தார்.
 
அதற்கு முன்னதாக, 1984ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தலைமை நீதியரசராக பணியாற்றிய சுப்பையா சர்வானந்தா இந்தப் பதவியில் இருந்த முதல் தமிழர் ஆவார்.
 
43வது தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பதவியகற்றும் தீர்மானம் சட்டமுரணானது என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தீர்ப்பு வழங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவில் நீதியரசர் கே.ஸ்ரீபவன் அங்கம் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.