செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 29 ஜூலை 2020 (09:31 IST)

திருப்பதியில் கொரோனா அதிகரிக்கத் திருமலை கோயில் காரணமா?

128 வருடங்களுக்குப் பிறகு கடந்த மார்ச் 20-ம் தேதி திருப்பதி கோயிலில், பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

திருப்பதி எனக் கூறினாலே, நீண்ட வரிசையும், மக்கள் கூட்டமும், தரிசனத்திற்காகப் பல மணி நேரம் காத்திருப்பதும்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், இப்போது திருப்பதி அப்படி இல்லை. கொரோனா வைரஸின் தாக்கம் திருப்பதி கோயிலில் கண்கூடாகத் தெரிகிறது.

திருப்பதிக்குப் பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்கள், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை பயன்படுத்தத் திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. அலிபிரி நடைபாதை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே திறக்கப்படுகிறது.

கோவிந்தா எனும் கோஷம் இன்னும் மலையில் எதிரொலிக்கிறது. ஆனால், மாட வீதியில் பக்தர்கள் குறைவாகவே காணப்படுகிறார்கள். வெங்கமாம்பா உணவு மையம், லட்டு வழங்குமிடம், திருப்பதிக்கு வந்து செல்லும் பேருந்துகள் என அனைத்திலும் சில மாற்றங்கள் நடந்து வருகின்றன.

உலகின் மற்ற பகுதிகளைப் போலவே திருப்பதியிலும் மாஸ்க், சானிடைசர் மற்றும் சமூக இடைவெளியைப் பார்க்க முடிகிறது. இதனுடன், கொரோனா தொற்று எண்ணிக்கையும் இங்கு மோசமாக அதிகரித்து வருகிறது.


128 வருடங்களுக்குப் பிறகு
கொரோனா காரணமாக 128 வருடங்களுக்குப் பிறகு கடந்த மார்ச் 20-ம் தேதி திருப்பதி கோயிலில், பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஜூன் 11-ம் தேதி மீண்டும் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு முன்னதாக 1892-ம் ஆண்டு கோயில் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டது என்கிறார் திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி அனில் சிங்கால்.

வழக்கமான நாட்களில் தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள். கொரோனா காலத்தில் இவ்வளவு கூட்டம் வருவது ஆபத்து என உணர்ந்த அதிகாரிகள் தரிசனத்தை ரத்து செய்தனர்.

கோயிலை மீண்டும் திறக்க நினைத்த அதிகாரிகள், சோதனை அடிப்படையில் ஜூன் 8 மற்றும் 9 தேதிகளில் ஊழியர்களை மட்டும் தரிசனம் செய்ய அனுமதித்தனர். ஜூன் 11-ம் தேதி முதல் பொது மக்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டாலும், ஜூன் 15-ம் தேதி தேவஸ்தான ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது.

அச்சகர்களுக்கு கொரோனா

ஜூலை 15-ம் தேதி வரை தேவஸ்தான ஊழியர்கள் 176 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதில் 15 பேர் அச்சகர்கள் என தேவஸ்தான மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட அச்சகர்களில் 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒருவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



திருப்பதி தேவஸ்தானத்தில் கொரோனா தொற்று நிலவரம் குறித்த தகவல்களைக் கேட்டு தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி அனில் சிங்காலுக்கு பிபிசி சார்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. ஆனால், மூன்று நாட்களாகியும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

''தற்போது ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகிறார்கள். அதில் ஒருவருக்கு கூட கொரோனா இருக்காது என எப்படி உறுதியாகக் கூற முடியும்'' என்கிறார் திருப்பதியைச் சேர்ந்த பெயர் கூற விரும்பாத மூத்த பத்திரிகையாளர்.

திருப்பதி கோயிலைச் சேர்ந்த முன்னாள் தலைமை அச்சகர் கொரோனாவால் சமீபத்தில் இறந்துள்ள நிலையில், கடந்த ஜூலை 24-ம் தேதி ஒரு தேவஸ்தான ஊழியரும் கொரோனாவால் இறந்தார். கோயில் அச்சகர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலையில் ஆழ்ந்துள்ளனர் என்கிறார் அந்த மூத்த பத்திரிகையாளர்.

''திருமலையின் கருவறை மிகவும் நெருக்கடியான இடம். பக்தர்களுக்கும், அச்சர்களுக்கும் இடையே சமூக இடைவெளியைப் பின்பற்றினாலும், கருவறைக்கு வந்தவுடன் பக்தர்கள் மாஸ்கை கழட்டி 'கோவிந்தா.. கோவிந்தா' என கோஷம் போடுகின்றனர். இதனால், பக்தர்கள் யாருக்காவது கொரோனா இருந்தால், அவர்களது எச்சில் துளிகள் மூலம் மற்றவர்களுக்கும் கொரோனா பரவுகிறது'' என்கிறார் அவர்.

''தரிசனத்தை நிறுத்துவது நல்லது''

''திருப்பதியில் சாமியைப் பார்த்தவுடன் பக்தியில் கோவிந்தா எனப் பக்தர்கள் கோஷம் போடுவார்கள். இதனால் சுலபமாக கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளது. இதை நம்மால் தடுக்க முடியாது. எனவே உடனடியாக இதுபோன்ற பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்'' என்கிறார் திருப்பதியின் முன்னாள் மூத்த அச்சகர் ரமணா தீக்‌ஷட்லு.

''சில விஐபி பக்தர்கள், அச்சகர்களுக்கு மிக நெருக்கமாக நின்று தரிசனம் செய்வார்கள். அவர்கள் எந்த மாநிலத்திலிருந்து வருகிறார்கள் என்பது அச்சகர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு கொரோனா உள்ளதா, இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், டிக்கெட் வாங்கியிருப்பதால், விஐபி தரிசனத்திற்கு அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதன் மூலம், கொரோனா பரவுவதற்கான வாய்ப்பை உருவாக்கித்தருகிறார்கள்''என்கிறார் அவர்.

''பொது முடக்கக் காலத்தில் தேவஸ்தானத்தில் ஒரு கொரோனா தொற்று கூட இல்லை. ஆனால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தரிசனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பிறகு தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தரிசனம் நிறுத்தப்பட்டால் கோயிலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அனைத்து பூஜைகளைத் தொடர்ந்து நடத்திக்கொள்ளலாம். இப்போதைய சூழ்நிலையில் பொது மக்கள் தரிசனத்தை ரத்து செய்யப்படுவதே நல்லது'' என்கிறார் ரமணா.

கோயில் அச்சர்கள் பெரும்பாலோனோர் திருப்பதி நகர்ப் பகுதியில் வாழ்கின்றனர். நகர்ப் பகுதியில் தொற்று எண்ணிக்கை அதிகரித்ததால், அச்சகர்கள் 15 நாட்களுக்குக் கோயிலிலேயே தங்குவதற்கு தேவஸ்தானம் ஏற்பாடு செய்தது.

வழக்கமான நாட்களில் தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள்

அர்ச்சக் பவனில் அச்சகர்கள் தங்க வைக்கப்பட்ட நிலையில், சிலருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அர்ச்சக் பவனில் பொதுவான தங்குமிடம் மற்றும் உணவகமும் இருந்தது. அதனால் அச்சகர்கள் விகுலா பவனுக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தேவஸ்தான செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது,

குறைந்த பக்தர்கள் எண்ணிக்கை

பிரம்மோத்சவ நேரத்தில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டும். வழக்கமான நாட்களில் 60 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள்.

பொது முடக்கத்திற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் தரிசனத்திற்கு 9000 ஆன்லைன் டோக்கன்களும், 3000 நேரடி டோக்கன்களும் திருப்பதியில் வழங்கப்பட்டன. ஜூலை 20க்கு பிறகு ஆன்லைன் டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தினமும் 5 முதல் 6 பக்தர்களே திருமலைக்கு வருகிறார்கள் என மக்கள் தொடர்பு பிரிவு கூறுகிறது.

திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதோ அல்லது குறைகிறதோ, ஆனால், வரும் பக்தர்களின் பெரும்பாலோனோர் மொட்டை அடித்துக்கொள்வது வழக்கம். இதனால், மொட்டை அடிக்கும் தொழிலாளர்களுக்கு பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உடை வழங்கப்பட்டுள்ளது.

தரிசன நேரம்

பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தால், அரை மணி நேரத்தில் தரிசனத்தை முடித்துவிடலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு இடையே 2 மீட்டர் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தால், அரை மணி நேரத்தில் தரிசனத்தை முடித்துவிடலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

லட்டு வழங்கும் இடங்களிலும் இதே நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது என கூறும் அதிகாரிகள், 67 லட்டு வழங்கும் இடங்களில் தற்போது 27 மட்டுமே செயல்படுகிறது என்கின்றனர்.

அதே போல அன்னதான கூடத்தில் முன்பு நான்கு பேர் அமர்ந்த மேஜைகளில் தற்போது இரண்டு பேர் மட்டுமே அமர அனுமதிக்கப்படுகின்றனர்.

திருப்பதியில் திருமலை கோயிலின் தாக்கம்
ஜூன் 10-ம் தேதி வரை திருப்பதியில் 40 பேருக்கு மட்டுமே கொரோனா இருந்தது. ஆனால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் துவங்கப்பட்ட பிறகு, அதாவது ஜூன் 11 முதல் 30 வரை 276 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

ஜூலை 25 வரையில் , திருப்பதியில் 2,237 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

திருப்பதியில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், கோயில் தரிசனம் மட்டுமே இதற்குக் காரணம் என கூறமுடியாது என்கிறார் சித்தூர் மாவட்ட ஆட்சியர் பரத் குப்தா.

''திருமலைக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் வரக்கூடும் என்ற உண்மையை நாங்கள் நிராகரிக்கவில்லை. அதே நேரத்தில், கோயிலுக்கு வருகை தரும் 6 முதல் 7 ஆயிரம் பக்தர்களுக்கு கோவிட்-19 சோதனைகளை நடத்த முடியாது''என்கிறார் அவர்.

''திருமலை கோயிலின் தாக்கம் திருப்பதியில் இருக்கலாம். ஆனால், கோயில் தரிசனம் மட்டுமே முழு காரணம் எனக் கூறிவிட முடியாது. திருப்பதியில் மட்டும் கொரோனா தொற்று அதிகரிக்கவில்லை. மற்ற மாவட்டங்களில் கூட அதிகரிக்கிறது'' என்கிறார் பரத்.

''இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2.5 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இந்தநிலையில் திருப்பதிக்கு வரும் 7 ஆயிரம் பக்தர்களைப் பரிசோதனை செய்தால், இந்திய அளவில் செய்யப்படும் பரிசோதனைகளில் 3 சதவீதத்தைத் திருப்பதியில் மட்டும் செய்ய வேண்டியதாக இருக்கும். இது சாத்தியமற்றது. அதே போல கொரோனா வைரஸ் தொற்று இல்லாதவர்கள் மட்டுமே திருப்பதிக்கு வர வேண்டும் என உத்தரவு போடவும் முடியாது''என்கிறார் அவர்.