வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 மே 2022 (13:28 IST)

இலங்கையில் அலுவல்பூர்வ ராணுவ ஆட்சி வரும் சூழ்நிலை இருக்கிறதா?

Srilanka Military
பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போரை கண்டால், துப்பாக்கி சூடு நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த உத்தரவானது, ராணுவ ஆட்சியை நோக்கி நகரும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்வி குறித்து ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான .நிக்சன் கருத்துத் தெரிவிக்கின்றார்.

பிபிசி தமிழ் ஃபேஸ்புக் நேரலைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

''இலங்கையைப் பொருத்த வரை ராணுவ ஆட்சிக்கான வாய்ப்பு மிகக் குறைவு. ஏனென்றால், இலங்கை சிறிய நாடு. அதோடு இந்தியாவிற்கு பக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு நாடு. இந்தோ - பசிபிக் வட்டார விவகாரத்தில் இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்ற ஒரு சூழ்நிலையிலே, இலங்கையில் ராணுவ ஆட்சிக்கான வாய்ப்பு இல்லை. ஆனால், அதையும் தாண்டி ஒரு ராணுவ ஆட்சிக்கு கோட்டாபய ராஜபக்ஷ வருவாராக இருந்தால், நிச்சயமாக அது குறைந்த நாட்களுக்குள்ளேயே முடிவுக்கு வரக்கூடிய சந்தர்ப்பம் இருக்கும்," என நிக்சன் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் ராணுவ ஆட்சிக்கான வாய்ப்பு இருக்கின்றது என்பது ஆபத்தானது என்றாலும், அந்த ராணுவ ஆட்சி நீடிப்பதற்கான வாய்ப்பும் இல்லை என்றும் நிக்சன் கூறினார்.

இலங்கையில் ஏற்கனவே ராணுவ ஆட்சி நடப்பதாக கூறப்படுகின்றது. அமைச்சு பொறுப்புக்களில் ராணுவத்தினர், முக்கியமான பொறுப்புக்களில் ராணுவத்தினர் என ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது. ஏற்கனவே ராணுவ ஆட்சி இருப்பதாக கூறுகிற நிலையில், எப்படி மீண்டுமொரு ராணுவ ஆட்சி வரும் என்று நிலவும் கேள்விக்கும் அவர் பதில் அளித்தார்.

''போராட்டக்காரர்களுடைய குற்றச்சாட்டே அதுதான். அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டே ராணுவ ரீதியிலான அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. அமைச்சுக்களுடைய செயலாளர்கள் ராணுவத்தினராக இருக்கின்றார்கள். அமைச்சிலே தேநீர் போடுபவர் கூட ராணுவத்தினராக இருக்கிறார் என்று எல்லாம் குற்றச்சாட்டுகள் வந்தன. ஆகவே, ராணுவ ரீதியிலான ஆட்சி முறையொன்று இருந்ததுதான்" என அவர் பதிலளித்தார்.

வடக்கு கிழக்கு மாகாணத்திலே 30 ஆண்டு கால போர் நடைபெற்றது. அதன் பின்னராக 13 ஆண்டுகளிலும் அங்கு ராணுவ ரீதியிலான கண்காணிப்புகள் இடம்பெற்றன. இதை அப்போது தமிழ் மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் சொன்ன போது, அதை சரியாக புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு இருந்த சிங்கள மக்கள், தற்போது அந்த ஆபத்தைக் கண்டுக்கொண்டுள்ளனர்.

ஆகவே, ராணுவத்தின் செல்வாக்கு அதிகம் உள்ள ஆட்சி ஒன்று ஏற்கெனவே நடந்துக்கொண்டிருக்கின்றது. ஆனால், இப்போது வரக்கூடிய சூழ்நிலையிலே அது உத்தியோகப்பூர்வமாக ராணுவ ஆட்சியை பிரகடனப்படுத்தக்கூடிய நிலைமை ஏற்படுகின்றது. அதற்கான சமிக்ஞைதான் தற்போது தெரிகின்றது" என அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் தெரிவிக்கின்றார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தற்போது தீவிரமடைந்துள்ள இந்த தருணத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.

பெரும்பாலான சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போலீஸார், ராணுவத்தினர், விசேட அதிரடி படையினர், கடற்படையினர், விமானப்படையினர் என அனைத்து தரப்பினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போர் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கான ஆணையை, பாதுகாப்பு அமைச்சு நேற்றைய தினம் பிறப்பித்துள்ளது.
இவ்வாறான நிலையில், போலீஸார் நேற்றைய தினம் சில சந்தர்ப்பங்களில் வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியிருந்தனர்.

இந்த பின்னணியிலேயே, நாட்டில் ராணுவ ஆட்சியொன்று வருவதற்கான சூழ்நிலை எழுந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் தெரிவிக்கின்றார்.