1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 மார்ச் 2023 (13:26 IST)

கர்ப்பிணிகளுக்காக இந்து அமைப்பு நடத்தும் 'கர்ப் சன்ஸ்கார்' அறிவியல் பூர்வமானதா?

Pregnant
ராஷ்ட்ர சேவிகா சமிதியுடன் தொடர்புடைய சம்வர்த்தினி நியாஸ் என்ற அமைப்பு கர்ப்பிணிகளுக்காக 'கர்ப் சன்ஸ்கார்' என்ற பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது.

ராஷ்டிர சேவிகா சமிதி என்பது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்(ஆர்எஸ்எஸ்) அமைப்பின் பெண்கள் பிரிவாகும்.

சம்வர்த்தினி நியாஸின் தேசிய அமைப்புச் செயலாளர் மாதுரி மராத்தே, "கர்ப்பிணிப் பெண்களுக்காக கர்ப் சன்ஸ்கார் என்ற பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைக்கு கருவிலேயே கலாசாரம் மற்றும் ஒழுக்கம் கற்பிக்கப்படும்’’ எனக் கூறியதாக பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

மகப்பேறு மருத்துவர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் யோகா பயிற்சியாளர்களின் உதவியுடன் கர்ப்ப காலத்தில் கீதை, ராமாயணம் படிப்பது மற்றும் யோகா செய்வது ஆகியவற்றின் மூலம் கருவில் உள்ள குழந்தைகளுக்கு நல்ஒழுக்கங்களைப் பயிற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டு ஒரு திட்டத்தை சம்வர்த்தினி நியாஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் ராஷ்ட்ர சேவிகா சமிதியால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சிப் பட்டறையில், 12 மாநிலங்களைச் சேர்ந்த 80 மகளிர் மருத்துவ நிபுணர்களும் பங்கேற்றனர்.

"குழந்தையின் இரண்டு வயது வரை கர்ப்பிணி பெண்களுக்கு இந்தத் திட்டம் தொடரும். இதில் கீதை, சௌபாய் ராமாயண வசனங்கள் படிப்பது இருக்கும். கருப்பையில் வளரும் குழந்தை 500 வார்த்தைகள்வரை கற்றுக்கொள்ளும்’’ என மாதுரி மராத்தே பிடிஐ செய்தி முகமையிடம் கூறினார்.

உண்மையில் கருப்பையில் வளரும் குழந்தையால் வார்த்தைகளையோ அல்லது மொழியையோ புரிந்துகொள்ள முடியுமா?

இது தொடர்பாக அறிவியல் உலகில் இரு மாறுபட்ட கருத்துகள் உள்ளன.

’’கருவில் இருக்கும் குழந்தையால் ஒலிகளைக் கேட்க முடியும், ஆனால் எந்த மொழியையும் புரிந்துகொள்ள முடியாது’’ என்கிறார் மும்பையைச் சேர்ந்த பெண் ஆர்வலரும் மகளிர் மருத்துவ நிபுணருமான சுசித்ரா டெல்வி.

“கருவில் வளரும் குழந்தையின் உடல் வளர்ச்சியுடன், அதன் காதுகளும் வளரும். எனவே ஒலி அலைகள் காதுகளைச் சென்றடையும். ஆனால் அந்த ஒலியின் அர்த்தம் குழந்தைக்குப் புரியாது. இப்படியான சூழலில், சமஸ்கிருத அல்லது வேறு ஏதேனும் மந்திரத்தை தாய் சொன்னால் அது எப்படி குழந்தைக்குப் புரியும்?’’ என்றும் அவர் கூறினார்.

மாறுபட்ட கருத்துகள்

இதற்கு எந்த ஆதாரமும் இல்லை, இது வெறும் கட்டக்கதை என்பது சுசித்ரா டெல்வியின் வாதம்.

இது பற்றி சிந்திக்காமல், இந்த உலகத்திற்கு ஏற்கனவே வந்து உணவு, கல்வி போன்ற அடிப்படை விஷயங்களைப் பெறாமல் இருக்கும் குழந்தைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்கிறார் சுசித்ரா டெல்வி.

ஆனால், கருவில் வளரும் குழந்தையால் கனவு காணவும், உணரவும் முடியும் என ஆராய்ச்சிகள் கூறுவதாகக் கூறுகிறார் மகளிர் மருத்துவ நிபுணர் எஸ்.என்.பாசு.

சைக்காலஜி டுடே என்ற அமெரிக்க இணையதளத்தில் வெளியிடப்பட்ட கரு உளவியல் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையைக் குறிப்பிடும் அவர், அதில் கருவில் உள்ள ஒன்பது வார குழந்தை, விக்கல் மற்றும் கடினமான சத்தங்களுக்கு எதிர்வினையாற்றலாம். 13ஆவது வாரத்தில் குழந்தையால் கேட்க முடியும். மேலும், தாயின் குரலையும் மற்றவர்களின் குரலையும் வேறுபடுத்தி பார்க்க முடியும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லும்போது அதற்கு குழந்தை எதிர்வினையாற்றுவதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

கருவில் உள்ள குழந்தைக்கு உணர்தல், கேட்டல் மற்றும் பார்த்தல் திறனுடன் கற்றுக்கொள்ளும் திறனும், நினைவில் வைத்துக்கொள்ளும் திறனும் வளர்வதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

கருவில் குழந்தை வளரும் போது தாய் நேர்மறையான விஷயங்களைச் செய்தால் அது குழந்தையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறுகிறார்.

ஹார்மோன்கள்

கர்ப்பிணிப் பெண் மன அழுத்தத்தில் இருக்கும் போது, ராமாயணம், கீதை அல்லது பாடல்கள் கேட்டு மன அமைதி அடைந்தால், அந்த நேரத்தில் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் கருவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்கிறார் சுசித்ரா டெல்வி.

ஹார்மோன்களின் தாக்கம் தாய் மூலமாக குழந்தைகளைச் சென்றடையும். அதாவது மன அழுத்த ஹார்மோனாக இருந்தாலும், மகிழ்ச்சி ஹார்மோனாக இருந்தாலும் அது குழந்தையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறுகிறார்.

அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதியின் செயல்பாட்டாளரான முக்தா தபோல்கர், கர்ப்பிணிப் பெண்களுக்கான நிகழ்ச்சியில் சத்தான உணவு, நல்ல எண்ணங்கள், மனதை அமைதிப்படுத்துதல் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும் என்கிறார்.

’’கருப்பையில் இருக்கும் குழந்தையால் மொழியைப் புரிந்துகொள்ள முடியாது எனும் போது தாய் மந்திரம் சொல்லுகிறார் என்பது எப்படி குழந்தைக்குத் தெரியும்’’ என்றும் அவர் கூறுகிறார்.

"தாய் மகிழ்ச்சியாக இருப்பது முக்கியம், அவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பது குடும்பத்தின் பொறுப்பாக இருக்க வேண்டும். அவருடைய உணவு முறைகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் முக்தா தபோல்கர் கூறுகிறார்.

"சித்தாந்தத்தை வளர்க்க முயற்சி"

கருவில் உள்ள குழந்தை மீது ஒலி மற்றும் இசை என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கண்டறியும் நோக்கில் உத்தரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஓர் ஆராய்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆயுர்வேத துறையைச் சேர்ந்தவரும், மகப்பேறு துறை மருத்துவருமான சுனிதா சுமன் கூறும்போது, "கர்ப் சன்ஸ்கார் தெரபி என்ற இந்த ஆராய்ச்சி இப்போதுதான் தொடங்கியுள்ளது. இது குறித்து கூடுதல் தகவல்கள் பெற நேரம் எடுக்கும். தாய் மன அழுத்தத்தில் இருக்கும் போது ஒலி மற்றும் இசை என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் இதன் நோக்கம்’’ என்றார்.

ஆனால், சில அரசியல் ஆய்வாளர்கள் இது சித்தாந்தத்தைப் பரப்புவதற்கான முயற்சி என்று கருதுகின்றனர்.

’’அடிப்படை ஆதாரமற்ற இந்த விஷயங்கள் இந்து உணர்வுகளை அதிகரிக்கவே முன்வைக்கப்படுகின்றன. பஞ்சாங்கம் மற்றும் வாஸ்து மீது சிறப்பு நம்பிக்கை கொண்ட இந்தியாவில் மக்கள் மூடநம்பிக்கையால் நிறைந்துள்ளனர். இத்தகைய விஷயங்கள் அவர்களின் அரசியல் மற்றும் கலாசார அடித்தளத்தை அதிகரிக்கின்றன’’ என்கிறார் ஆய்வாளர் ராஜேஷ் சின்ஹா.

இதற்கு முன்பே, ஆர்எஸ்எஸ்ஸின் சுகாதாரப் பிரிவான ஆரோக்ய பாரதியால் கர்ப் விக்யான் சன்ஸ்கார் தொடங்குவதாகச் செய்திகள் வந்தன.

குஜராத்தில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு 2015ஆம் ஆண்டு தேசிய அளவில் கொண்டு செல்லப்பட்டது. மேலும், ஆர்எஸ்எஸின் வித்யாபாரதி அமைப்புடன் இணைந்து மற்ற மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.