ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 ஜூலை 2024 (17:59 IST)

ரஷ்ய ராணுவத்தில் ஏமாற்றிச் சேர்க்கப்பட்ட இந்தியர்கள்! விடுவிக்க உறுதியளித்த ரஷ்ய அரசு

Ukraine War
ரஷ்யா தனது ராணுவத்தில் இணைந்து, போரில் ஈடுபட்டுள்ள அனைத்து இந்தியக் குடிமக்களையும் முன்கூட்டியே விடுதலை செய்வதாக உறுதியளித்துள்ளது என, இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.



இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தனது ரஷ்யப் பயணத்தின் போது, ரஷ்ய விளாடிமிர் புதினிடம் இந்தப் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தினார். மோதியின் ரஷ்யப் பயணம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஷ்ய ராணுவத்தில் போர் சாராத வேலைகள் வழங்கப்படும் என்ற பெயரில் இந்தியர்கள் ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் யுக்ரேனுக்கு எதிரான தீவிரப் போரில் அவர்கள் தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படிச் சிக்கிக்கொண்ட இந்தியர்களை விடுவிக்க மத்திய அரசு முயன்று வருகிறது.

இந்தப் போரில் இதுவரை குறைந்தது நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ரஷ்யப் படையில் உள்ள இந்தியர்கள்

கடந்த செவ்வாயன்று (ஜூலை 9) நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் குவாத்ரா, "ரஷ்ய ராணுவத்தின் சேவையில் தவறாக வழிநடத்தப்பட்டு, சேர்க்கப்பட்ட இந்தியர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பிரதமர் மோதி வலுவாக குரல் எழுப்பினார்," என்று கூறினார்.

ரஷ்ய ராணுவத்தில் உள்ள அனைத்து இந்தியர்களையும் விரைவில் விடுவிப்பதாக ரஷ்ய தரப்பும் உறுதியளித்ததுள்ளதாக வினய் குவாத்ரா கூறினார்.

ரஷ்யப் படைகளில் சுமார் 35-50 இந்தியர்கள் இருப்பதாகவும், அவர்களில் 10 பேர் ஏற்கனவே இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும், எஞ்சியுள்ள இந்தியர்களை அழைத்துச் வர இரு நாடுகளும் இப்போது இணைந்து செயல்படும் என்றார்.

அதிகச் சம்பளம் மற்றும் ரஷ்யக் குடியுரிமை கிடைக்கும் எனக்கூறி முகவர்கள் தங்களை ஏமாற்றியதாக ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்தியர்கள் கூறுகின்றனர்.

Modi Putin


இந்த இந்திய ஆண்களில் பெரும்பாலோர் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் ரஷ்ய ராணுவத்தில் போர் சாராத, 'உதவியாளர்கள்' பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதாகக் கூறி ரஷ்யாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்களை மீட்டுத்தர இந்தியாவில் உள்ள இவர்களது குடும்பத்தினர் மத்திய அரசிடம் உதவி கோரியுள்ளனர்.

இந்தியா- ரஷ்யா இடையிலான வர்த்தகம்

இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம், இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று கூறியது. இந்தியக் குடிமக்களை மீட்டுக் கொண்டுவர ரஷ்ய அதிகாரிகளுக்கு இந்தியத் தரப்பில் இருந்து அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்றும் வெளியுறவு அமைச்சகம் கூறியது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், "ரஷ்யாவில் உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும் உரிய எச்சரிக்கையுடன் செயல்படவும், யுக்ரேனுடனான போரில் இருந்து விலகி இருக்கவும்," அமைச்சகம் வலியுறுத்தியது.

மார்ச் மாதம், இந்தியர்களுக்கு வேலை கொடுப்பதாகக் கூறி, ரஷ்யாவுக்காகப் போரில் சண்டையிட ஆட்களை அனுப்பும் முகவர்களின் வலையமைப்பைக் கண்டுபிடித்து, அவர்களின் முயற்சிகளை முறியடித்ததாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியப் பிரதமர் மோதி தனது இரண்டு நாள் ரஷ்யப் பயணத்தின் போது, செவ்வாய்க்கிழமை அன்று புதினிடம் இந்தப் பிரச்னையை எடுத்துக் கூறினார். 2019-க்குப் பிறகு மோதியின் முதல் ரஷ்யப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இரு தலைவர்களின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியான இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு அறிக்கையில், அணுசக்தி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட ஒன்பது முக்கியத் துறைகளில் இரு தரப்பும் இணைந்து பணியாற்றுவது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2030-ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை பாதிக்கும் மேல், அதாவது 100 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 8.3 லட்சம் கோடி ரூபாய்) அளவுக்கு உயர்த்துவதை இலக்காகக் கொண்டிருப்பதாகவும் இரு நாட்டுத் தலைவர்கள் தெரிவித்தனர்.