1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 26 நவம்பர் 2022 (14:48 IST)

சாக்கடையில் தங்கம் கிடைக்கும் இந்திய நகரம் - எங்கிருக்கிறது தெரியுமா?

Bangles
இந்தியாவின் கண்ணாடி நகரமான ஃபிரோசாபாத், பாரம்பரியமான கண்ணாடி வளையல்கள் தயாரிப்புக்கு புகழ்பெற்றதாகும். ஆனால், இந்த நகரம் மறைந்திருக்கும் மற்றும் கண்டறிவதற்கு கடினமான இன்னொரு பொக்கிஷத்துக்கும் ஆதாரமாக திகழ்கிறது.

"சேலையை எரித்து, அதில் இருந்து சுத்தமான மெல்லிய துண்டு போன்ற வெள்ளியை எடுத்து அவர் தந்தார்," என 30 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய வீடு இருந்த ஃபிரோசாபாத் நகரில் நடந்த நிகழ்வின் தருணத்தை என் தாய் என்னிடம் கூறினார்.  

அவருடைய கதையில் கூறப்பட்ட மனிதர் மேஜிக் செய்பவர் அல்ல. அவர் உலோகங்களை பிரித்தெடுக்கும் நபர். இதேபோல பல கைவினைக்கலைஞர்கள் என் தாயின் பிறந்த ஊரில் உள்ளனர். என் தாய் குறிப்பிட்ட அந்த நபர், வீடு வீடாகச் சென்று பழைய சேலைகளை சேகரித்து அவற்றில் இருந்து விலைமதிப்பற்ற உலோகங்களைப் பிரித்தெடுக்கும் பணியை செய்தார்.

1990ஆம் ஆண்டு வரை சேலைகள் சுத்தமான வெள்ளி, தங்கம் ஆகியவற்றைக் கொண்ட நூல்களால் நெய்யப்பட்டன. என் அம்மாவின் அலமாரியில்  பொக்கிஷம் போன்ற அவரது பளபளக்கும் ஆடைகளை தேடியது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், துணிகளை விடவும் மிகவும் விலைமதிப்புள்ள ஒன்று அதில் இருப்பதை உலோகங்களை பிரித்தெடுப்போர் பார்ப்பதாக என் தாயார் கூறியிருந்தார். அவர்கள் இந்த நகரத்திற்கான குறிப்பிட்ட ஒரு வகையான குப்பையை அந்த சேலைகளில் தேடிக்கொண்டிருந்தனர்.

தங்க சுரங்கத்துக்கு இணையான நகரம் 

ஆகவே, வெளித்தோற்றத்துக்கு மாய உருமாற்றம் போலத் தெரியும் பிரித்தெடுத்தல் குறித்து மேலும் சிலவற்றை அறியலாம் என்பதற்காக நான் ஃபிரோசாபாத் நகருக்குச் சென்றேன். அந்நகரம், விலை மதிப்பற்ற உலோகங்களை விடவும் கண்ணாடி வளையல்களுக்காக அதிகம் அறியப்படுகிறது. அந்நகரின் அருகில் இருக்கும் தாஜ்மஹால் (மேற்கே 45 கி.மீ தொலைவில்) இந்த நகரத்தின் முக்கியத்துவத்தை விஞ்சி இருக்கிறது.

ஆனால், நான் கண்டுபிடித்த வகையில், இந்த பகுதியில் ஒரு காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த உலோகம் சாக்கடைகள் வழியே வழிந்தோடியதன் காரணமாக சில உழைக்கும் கைவினைக் கலைஞர்களுக்கு, இந்த நகரம் ஒரு தங்க சுரங்கத்துக்கு இணையாகவே இருந்தது.

டெல்லி சுல்தான் ஃபிரோஸ் ஷா துக்ளக் என்பவர் கி.பி.1354ஆம் ஆண்டு ஃபிரோசாபாத் பகுதியை அரண்மனை நகராக நிர்மாணித்தார். நீதிமன்ற வரலாற்று ஆசிரியர் ஷம்ஸ்-இ-சிராஜின் என்பவரின் புத்தகங்கள் வாயிலாக, ஷாஜஹான்பாத் நகரை (இப்போதைய பழைய டெல்லி, தாஜ்மஹாலைக் கட்டிய அதே ஆட்சியாளரால் வடிவமைக்கப்பட்டது) போல இரண்டு மடங்காக இருந்தது ஃபிரோசாபாத்.

'டெல்லியின் மறந்து போன நகரங்கள்' எனும் புத்தகத்தின் எழுத்தாளரும் வரலாற்று அறிஞருமான ராணா சஃப்வியின் கூற்றுப்படி, பின்னர் இது முகலாய கால கோட்டைகளுக்கு முன்மாதிரியாக பயன்படுத்தப்பட்டது. பொதுமக்களுக்கான திவான்-இ-ஆம் (பார்வையாளர் கூடம்) மற்றும் பிரபுக்களுக்கான திவான்-இ-காஸ் (தனியார் பார்வையாளர்கள் கூடம்) என்ற முறை முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது."

200 ஆண்டுகளுக்கு முந்தையது 

சஃப்வியின் குறிப்புகளின்படி ஃபிரோசாபாத்தில் பழைய நகரத்தின் சில தடயங்கள் எஞ்சியிருந்தன. இப்போதைய ஃபிரோசாபாத்தில் அந்த நகருக்கே உரிய பிரமாண்டத்தை நான் பார்த்தேன். நகருக்குள் வாகனத்தில் சென்றபோது ஏறக்குறைய ஒவ்வொரு தெருவும் வண்ண, வண்ண கண்ணாடி வளையல்களுடன் கூடிய தள்ளுவண்டிகள் , பல வண்ண காட்சிக் கருவியாகவும் சரக்கு வாகனங்களில் ஏற்றப்பட்டிருந்த வண்ணமயமான கண்ணாடி வளையல்களின் ஒவ்வொரு நிறபேதமும் காலை வெயிலின் ஒளிபட்டு மின்னின.
BBC

இந்த கைவளையல்கள் இந்திய பாரம்பர்யத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கின்றன. திருமணமான பெண்கள் மற்றும் புதிதாக திருமணமான பெண்கள் தங்களின் செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை அடையாளப்படுத்தும் வகையில் ஒவ்வொரு கையிலும் அடுக்கடுக்கான வளையல்களை அணிகின்றனர். தோராயமாக இன்றைக்கு 150 கண்ணாடி வளையல்கள் தொழிற்சாலைகள் இங்கே இருக்கின்றன. ஆகவே, 'கண்ணாடி நகரம்', 'வளையல்கள் நகரம்' என்ற பெயர்களை ஃபிரோசாபாத் பெற்றதில் வியப்பேதும் இல்லை.

இந்த கைவினைத்திறன் 200 ஆண்டுகளுக்கு முந்தையதாகும். ஃபிரோசாபாத்தை சேர்ந்த பெரும்பாலானோர் ராஜஸ்தானில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களாவர். இந்த வகையான நகைகளை வடிவமைப்பதில் அவர்கள் சிறந்து விளங்கினர் என்பது ஒரு கூற்று. அவர்கள் இதனை உள்ளூர் கைவினைக்கலைஞர்களுக்கு கற்றுக் கொடுத்தனர். காலப்போக்கில், இந்த தொழில் கண்ணாடி பாட்டில்கள், சாண்டிலியர் விளக்குகள் ஆகியவற்றின் தயாரிப்பை நோக்கி விரிவடைந்தது. அப்போதைய ராஜ்யத்தின் அரச மன்றங்கள் மற்றும் பிரபுக்களின் வீடுகளில் அதிக அளவில் சாண்டிலியர் விளக்குகள் பொருத்தப்பட்டன.

முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் ஆகியவற்றின் போது வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டபோது ஃபிரோசாபாத்தில் உள்ள கண்ணாடி தொழிற்சாலைகள் தீவிரமான வளர்ச்சி பெற்றன. 1947ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர், இந்தியாவின் முன்னணி கண்ணாடி, வளையல்கள் உற்பத்தித் தலமாக மாறியது ஃபிரோசாபாத். இன்றைக்கு இந்தியாவின் 70 சதவிகித கண்ணாடி உற்பத்தியை இந்த நகரம் பூர்த்தி செய்கின்றது.

பல்வேறுமுறை இந்த நகருக்கு சென்றபோது கண்ணாடி தொழிலில் ஈடுபட்டிருக்கும் உள்ளூர் நபர்கள், அங்கு வசிப்போர்களிடம் பேசினேன். ஃபிரோசாபாத் நகரில் வளையல்கள் செய்யும் போது மேற்கொள்ளப்படும் தங்கமுலாம் பூசும் செயலின்போது தங்கம் என்ற விலைமதிப்பற்ற பொருள் உருவாக்கப்படுகிறது என்பதை அறிந்து கொண்டேன்.இது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

பாரம்பர்யமாக, இந்த நகரில் கண்ணாடி வளையல்கள், சுத்தமான தங்கத்தைக் கொண்டு பாலிஷ் முறையில் அலங்கரிக்கப்படுகின்றன. இந்த பாலிஷ் பூசும் முறையில் விலைமதிப்பற்ற (தங்கம்) உலோகத்துடன் தொடர்புடைய இதர பொருட்கள் உபயோகிக்கப்படுகின்றன. பாலிஷ் நிரப்பப்பட்ட பாட்டில்கள் மற்றும் கொள்கலன்கள், பாலிஷ் செய்யப் பயன்படுத்தப்படும் பழைய துணிகள், பாலிஷ் செய்யப்பட்ட வளையல்கள் வைத்திருக்கும் கூடைகள் மற்றும் உடைந்த வளையல்களின் துண்டுகள் ஆகியவற்றில் ஏதோ ஒரு வகையில் மிகச்சிறிதளவேனும் தங்கத்துகள்கள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

வளையல் தொழிற்சாலைகள், பாலிஷ் செய்யும் பட்டறைகள், கைவினைக் கலைஞர்களின் வீடுகள் ஆகியவற்றில் இருந்து இந்த கழிவுப்பொருட்கள் சாக்கடைகளில் கொட்டப்படுகின்றன. அப்போது தங்க துகள்கள் கழிவு நீரோட்டத்தில் சேருகின்றன. இது சேகரிக்கப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டு  கழிவில் இருந்து உலோகமாக பிரித்தெடுக்கப்படுகிறது.  

'குப்பை'யின் மதிப்பு 

"இது குறித்து தெரியாதவர்களுக்கு, இந்த பொருட்கள் வெறும் குப்பை" என்கிறார் முகமது சுல்தான். இவர் ஃபிரோசாபாத் நகரில் நகைக்கடை நடத்தி வருகிறார். "ஆனால், இந்த உலோகத்தை அறிந்தவர்களுக்கு, இந்த 'குப்பை'யின் உண்மையான மதிப்பு தெரியும்," என்றார்.

சுல்தானே இதுபோல 25 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கம் பிரித்தெடுப்பவராக பணியாற்றி வந்தவர்தான்.

"தங்கம் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு அது வைக்கப்பட்டிருந்த பாட்டில்கள் கரைப்பான் அல்லது மர எண்ணைய் கொண்ட வாளியில் தங்க எச்சங்களை அகற்றுவதற்காக சில மணிநேரங்களுக்கு ஊற வைக்கப்படுகின்றன," என்று சுல்தான் விவரித்தார். தங்க எச்சமானது கரைப்பானின் மேற்பகுதியில் சேரும். பின்னர் அது ஒரு துண்டு துணியால் துடைக்கப்படும். அந்த துணி காயவைக்கப்படும், இறுதியில் அது சாம்பலாக எரிக்கப்படும்.

இதன் பின்னர் இந்த சாம்பலில் சில ரசாயனங்கள் சேர்க்கப்படும். பின்னர் அது மணலில் ஒரு தடிமனான அடுக்காக ஒரு அடுப்பு அல்லது ஹீட்டரின் மேலே வைக்கப்படும். அப்போது அந்த சாம்பல் திரவமாக மாறும் வரை சூடுபடுத்தப்படும். இந்த திரவம் குளிர்ந்த பின்னர், அது குவளையில் மாற்றப்படும். அப்போது மணலுக்குக் கீழே தங்க எச்சங்கள் சேர்ந்திருக்கும்," என்று விரிவாக கூறினார்.

"இதற்கு நிறைய பொறுமை தேவைப்படும். இந்த கலையை கற்று தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், நிச்சயமாக இது ஒரு வாரத்துக்குள் கற்றுக்கொள்ளும் ஒன்றாக இருக்காது," என்றார் சுல்தான். தொடர்ந்து பேசிய அவர், தான் சொந்தமாக தங்கத்தை பிரித்து எடுப்பதற்கு சில ஆண்டுகள் ஆனதாக கூறுகிறார்.

தங்கம் பிரித்தெடுக்கப்பட்டவுடன், நகைக்கடை உரிமையாளர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது. பிரித்தெடுப்பவர்கள், பல ஆண்டுகளாக இந்த நகரில் மிகவும் கீழான நிலையில் இருந்து வந்தவர்களாக இருக்கின்றனர். கைவினை திறன்களில் இது ஒரு விதிவிலக்கான தொழிலாகும். கடின உழைப்பு, அதிர்ஷ்டத்தால், அவர்களின் தலைவிதி மாற்றி எழுதப்படுகிறது. "இந்த கைவினைத்தொழில், பலரை லட்சாதிபதி ஆக்கியுள்ளது," என்றார் ஃபிரோசாபாத்தில் தங்கம் பிரித்தெடுக்கும் முகமது காசிம் ஷாபி.

மறைந்துவரும் திறமை

இந்த கைவினைதொழில் வரலாற்றுக்கு எந்த ஒரு ஆவணப்பதிவும் இல்லை. உள்ளூர்வாசிகள் இதனை, தங்களது பெற்றோர் அல்லது அவர்களது முன்னோர்களிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கின்றனர். தேராயமாக கடந்த 80 ஆண்டுகளாகவோ அல்லது அதற்கும் அப்பாலோ இந்த நடைமுறை இருக்கலாம் என்று தெரிகிறது. எனினும், தங்கத்தின் விலை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் குறைந்த விலையுள்ள இரசாயனங்களால் பாலிஷ் மேற்கொள்ளப்படுகிறது. எனினும், இந்த திறமை தலைமுறைகளாக கடத்தப்பட்டு வந்தாலும் இது மெதுவாக மறைந்து வருகிறது.

"தங்கத்தைப் பிரித்தெடுப்பது துல்லியமான மற்றும் விதிவிலக்கான திறமை என்பதால், பாலிஷ் செய்வதற்கு பிற ரசாயனங்களுக்கு மாற்றுவதற்கு முன்பே, இந்த நடைமுறை வரையறுக்கப்பட்ட மக்களால் மட்டுமே அறியப்பட்டிருந்தது" என்றார் ஷாஃபி. மேலும் பேசிய அவர், இதர ரசாயனங்கள் மூலம் வளையல்கள் பாலிஷ் செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டபோது, தங்கத்தின் பற்றாக்குறை காரணமாக இந்த கைவினைத் திறன் மறைவை நோக்கி இட்டுச்செல்லப்படுகிறது," என்றும் குறிப்பிட்டார்.

இந்த தொழிலில் குறிப்பிடத்தக்கவகையில் தங்கம் உபயோகிப்பது குறைந்து வருகிறது. சிலர் இன்னும் தங்களது கைவளையலில் அதனை சேர்க்கின்றனர். ஃபிரோசாபாத்தின் சந்தை தெருக்களில் நடக்கும்போது பல பாலிஷ் செய்யும் பட்டறைகளை கடந்து சென்றேன். அங்கு பணியாளர்கள் வளையல்களை தயாரிப்பதில் அல்லது அலங்கரிப்பதில் ஈடுபட்டுள்ளனர், சிலர் தூய தங்கத்தை பாலிஷ் செய்யப் பயன்படுத்தினர்.

அடுத்த நாள், நான் வீட்டுக்கு திரும்புவதற்காக காரில் அமர்ந்திருந்தேன். இந்த நகரின் ரகசியம் தெரிந்த எனக்கு இப்போது இந்த நகரம் எவ்வளவு வித்தியாசமாக தெரிகிறது என்பதை உணர்ந்தேன். வீசி எறியப்படும் பொருட்கள், மதிப்பு வாய்ந்த உலோகமாக மாறுகிறது என்ற என் தாயின் நினைவுகளுடன் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் ஃபிரோசாபாத் நகரின் புதையல் வேட்டையாடும் தங்கம் பிரித்தெடுப்பவர்களின் கதைகளை நான் அறிந்தது புதிய ஆழத்தை பெற்றிருக்கிறது. எனக்கு தெரியும் என்று நினைத்திருந்ததற்கு மாறாக, மாற்றமடைந்த நகரைப் பற்றிய வரலாற்றில் அதிகம் அறியப்படாத ஒரு அடுக்காக புவிப்பரப்பின் அடியில் ஓடும் ஒரு முழுமையான கதையை அவர்கள் என்னிடம் கூறினர்.