வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (12:32 IST)

மாட்டிறைச்சி ஏற்றுமதி வருவாய், தீவிரவாதத்துக்குத் துணை போகிறது - மேனகா காந்தி

இந்தியாவில் மாட்டிறைச்சி வர்த்தகத்தில் ஈட்டப்படும் வருமானம், தீவிரவாத மற்றும் பயங்கரவாத செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
 
உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிப்பதாகவும், சட்ட விரோதமாக நடத்தப்படும் இறைச்சி வர்த்தகத்தினால் தீவிரவாதிகள்தான் பயனடைவதாகவும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளுக்குப் பயனளிக்கும் இந்தச் சட்ட விரோதச் செயல்களைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
 
ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற 'இந்தியா ஃபார் அனிமல்ஸ்' (India for Animals) என்கிற மாநாட்டில் கலந்துகொண்ட அவர், சீனாவை விட இந்தியாவில் தான் விலங்குகளின் இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் அவை அதிகமாகக் கொல்லப்படுவதாகவும் கூறினார். தொடர்ந்து சட்ட விரோதமாகச் செய்யப்படும் விலங்குகளின் கொலை மற்றும் ஏற்றுமதி தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற தகவல்களைப் பகிர்ந்து கொண்ட அவர், இவை இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை விளைவிக்கும் தீவிரவாத செயல்களுக்கு மூலதனமாகச் சென்றடைவதாகவும் குறிப்பிட்டார். இதனால் இந்தியாவில் விலங்குகளைக் கொலை செய்யவும், இறைச்சிகளை ஏற்றுமதி செய்யவும் வகுக்கப்பட்டுள்ள சட்டங்களை முழுமையாக அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்றார். இந்தச் சட்ட நுணுக்கங்களை, விலங்கினப் பாதுகாப்பு ஆர்வலர்கள் அனைவரும் நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்றும், இதை செயல்படுத்த அதிகாரிகளுக்கு உதவ வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.
 
மேனகா காந்தி வெளியிட்டுள்ள இந்தக் கருத்துகளுக்கு இந்தியாவில் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். அடிப்படை ஆதாரமற்ற சர்ச்சைகளின் மூலம், சுயலாபம் அடைய மேனகா காந்தி முயன்று வருவதாகவும் விமர்சித்திருக்கிறார்கள்.
 
இது தொடர்பாக இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் மனிஷ் திவாரி கூறுகையில், சட்ட விரோதமாக மாட்டிறைச்சி ஏற்றுமதி நடைபெற்று அதன் மூலம் ஈட்டப்படும் வருமானம் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுகிறது என்றால், அதற்கான ஆதாரத்தை அவர் பொதுமக்கள் மத்தியில் வெளியிட வேண்டும் என்றார்.
 
மேலும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அவர் பதிலளிக்கையில், இது போன்ற பேச்சுகளால் மக்களின் அமைதிக்கு இடைஞ்சல் உண்டாகக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். அரசியல் லாபத்திற்காக, தவறான பிரசாரங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கூறினார்.