வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (17:42 IST)

மதுபானத்தை தடைசெய்ய கேரள அரசு நடவடிக்கை

தென்னிந்திய மாநிலமான கேரளாவில் மது விற்பனையையும், குடித்தலையும் தடைசெய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இன்னும் 10 ஆண்டுகளில் முழுமையான மதுபானத் தடையைக் கொண்டுவருவதே அரசின் திட்டம்.
இந்தியாவில் கேரளா தான் மதுபாவனையில் உச்சத்தில் உள்ள மாநிலமாக கருதப்படுகின்றது. அங்கு, ஆண்டுக்கு நபர் ஒருவரின் சராசரி மது அருந்தும் அளவு 8 லீட்டருக்கும் அதிகமாக காணப்படுகின்றது.
 
எழுநூறுக்கும் அதிகமான மதுபானசலைகளை (பார்) மூடிவிடத் திட்டமிட்டுள்ள அரசாங்கம், ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்திலுள்ள மதுபானக் கடைகளில் பத்தில் ஒன்று மூடப்படும் என்றும் அறிவித்துள்ளது.
 
2015 ஆம் ஆண்டிலிருந்து ஆடம்பர ஹோட்டல்களுக்கு மட்டுமே மதுபான அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் உம்மன் சாண்டி பிபிசியிடம் தெரிவித்தார்.
 
தடை கொண்டுவரப்படும்போது, விஸ்கி போன்ற ஆல்கஹால் வீதம் அதிகமுள்ள 'ஹார்ட்' மதுபானங்களுக்கும் பீர் போன்ற ஆல்கஹால் வீதம் குறைவாகவுள்ள 'சாஃப்ட்' மதுபானங்களுக்கும் வித்தியாசம் பார்க்கப்படாது என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
 
ஆனால் இப்படியான நடவடிக்கைகள் சட்டவிரோத மது விற்பனைக்கு வழிவகுக்கும் என்றும் கேரளாவின் சுற்றுலாத் துறையை கடுமையாகப் பாதிக்கும் என்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
குஜராத் மாநிலத்திலும் பின்தங்கிய வடகிழக்குப் பிராந்தியத்தின் சில பகுதிகளிலும் ஏற்கனவே மதுபானத் தடை நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.