புதன், 5 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2016 (18:05 IST)

ஹிந்து பூசாரி வெட்டிக் கொலை - வங்கதேசத்தில் வெறிச்செயல்

வங்கதேசத்தில், ஹிந்து கோயில் பூசாரி ஒருவர் இன்று காலை ஆயுததாரிகளால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
 


ஜூன் 10-ம் தேதி கொல்லப்பட்ட ஹிந்து பூசாரி (கோப்புப்படம்)
 
 
ஜினைதா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலையில், மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர், மொனிந்தா தாஸ் என்ற அந்த பூசாரியை கூர்மையான ஆயுதத்தால் வெட்டிக் கொன்றதாக கூறப்படுகிறது.
 
அவர் கோயிலில், காலை பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோது, வெட்டிக் கொல்லப்பட்டதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
 
அதே நேரத்தில், கோயிலுக்கு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த நேரத்தில் வெட்டிக் கொல்லப்பட்டதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவருக்கு சுமார் 45 வயது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
இந்தக் கொலையின் பின்னணியில், இஸ்லாமிய கடும்போக்காளர்கள் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் ஜினைதா மாவட்ட காவல்துறை தலைவர் கோபிநாத் காஞ்சிலால் தெரிவித்துள்ளார்.
 
சமீபகாலமாக, வங்கதேசத்தில் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள்.
 
இதற்கு முன்பு நடந்த இதுபோன்ற சம்பவங்களுக்கு தாங்கள்தான் பொறுப்பு என வங்கதேசத்தில் உள்ள இஸ்லாமிய நாடு என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்வோர் உரிமை கோரி வருவது குறிப்பிடத்தக்கது.