செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 24 ஜூலை 2021 (11:26 IST)

மகாராஷ்டிராவில் கன மழை காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இதுவரை குறைந்தது 110 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
நூற்றுக்கணக்கான கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல வீடுகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
 
மீட்புப் பணியினர் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்கள் மீட்டு வருகின்றனர். இருப்பினும் பலரைக் காணவில்லை.

மீட்புப் பணியில் இந்திய ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர். அதிகப்படியான மழைக்கு பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும் அதிகரிக்கும் புவி வெப்ப மயமாதல் அதீத வானிலை சூழலுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இரு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக வெள்ளியன்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
 
மும்பையின் தென் கிழக்கு பகுதியில் உள்ள சிறிய கிராமம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 38 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
 
மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
 
அணைகளிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
மக்கள் உயிரிழந்திருப்பது குறித்து `தாம் பெருந்துயர் அடைந்துள்ளதாக` இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
 
கடலோர பகுதிகளில் இந்தியக் கடற்படை மற்றும் பேரழிவு மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
கடலோர மாவட்டம் ஒன்று, பாலங்கள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளதாலும், அலைப்பேசி டவர்கள் சேதமடைந்ததாலும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
 
பாதிக்கப்பட்டவர்களை ஹெலிகாப்டரில் மீட்க வசதியாக மக்கள் மொட்டை மாடிகளுக்கு செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
வெள்ளியன்று மும்பை நகரில் கட்டடம் ஒன்று சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் காயமடைந்துள்ளனர்.
 
ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
 
அடுத்த சில தினங்களுக்கு மும்பையில் கனமழை பெய்யும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மழை என்பது மும்பைக்கு புதியதல்ல. ஒவ்வொரு மழைக்காலத்திலும் நகரில் வெள்ளம் வருவதும் புதியதல்ல. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பெய்யும் மழையின் அளவு அதிகரித்துள்ளது என்பதுதான் கவனிக்கத்தக்கது.
 
பலர் தங்களுக்கான வேலை வாய்ப்பை தேடி மும்பை நகருக்கு வருகின்றனர் இதனால் அதிகப்படியான கட்டுமானங்கள் மற்றும் சீரற்ற கட்டமைப்பு அதிகரிக்கின்றன. இதனால் பலர் மோசமான கட்டடங்களில் வாழும் நிலையும் ஏற்பட்டுள்ளது.