வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 16 மே 2015 (09:37 IST)

நோய்எதிர்ப்பு மருந்துக்கான உலக நிதியம் தேவை

Antibiotics என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளை கண்டுபிடித்து உருவாக்குவதற்கான மானியத்தை அளிக்க, உலக நிதியம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசின் ஆலோசகர் பரிந்துரை செய்திருக்கிறார்.
 
பொதுவாக நோய் எதிர்ப்பு மருந்து/மாத்திரைகள், அவற்றை கண்டுபிடித்து உற்பத்தி செய்யும் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் அதிக லாபத்தை கொடுப்பதில்லை என்று கருதப்படுகிறது.
 
எனவே மருந்து உற்பத்தி நிறுவனங்கள் புதிய நோய் எதிர்ப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதற்கு போதுமான நிதியை ஒதுக்கி பெருமளவிலான ஆய்வுகளை மேற்கொள்வதில்லை என்று பார்க்கப்படுகிறது.
 
இந்த விவகாரம் குறித்து பிரிட்டிஷ் அரசுக்கு அறிக்கை அளித்திருக்கும் கோல்ட்மேன் சாச் வங்கியின் முன்னாள் தலைமை அதிகாரி ஜிம் ஓ நீல், குறைவான காலத்துக்கு மட்டும் பயன்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள், அவற்றை தயாரிக்கும் மருந்து நிறுவனங்களுக்கு லாபம் அளிப்பதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
 
நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள், அவற்றை அழிக்கக்கூடிய தற்போதைய மருந்துகளை தாக்குப்பிடிக்கும் தன்மையை படிப்படியாக வளர்த்துக்கொண்டு வருகின்றன. அப்படியான பாக்டீரியாக்கள் ஆங்கிலத்தில் superbugs என்று அழைக்கப்படுகின்றன. அதாவது, மருந்துகளால் அழிக்கமுடியாத நோய்க்கிருமிகள் என்று இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. அப்படியான அழிக்கவே முடியாத நோய்க்கிருமிகளை அழிக்கவல்ல புதுவகையான நோய் எதிர்ப்பு மருந்துகள் பலவற்றை கண்டுபிடித்து தயாராக வைத்திருக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தடுகிறது.
 
தற்போது இருக்கும் மருந்துகளால் அழிக்கவோ குணப்படுத்தவோ முடியாத நோய்க்கிருமிகள் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் அதனால் லட்சக்கணக்கான மனித உயிர்கள் பலியாகும் என்றும் பல்லாயிரக்கணக்கான கோடி நிதி இழப்பு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.