ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2024 (16:10 IST)

டைனோசருக்கு 4 கோடி ஆண்டுக்கு முன் பூமியில் நடமாடிய ராட்சத உயிரினம் - விஞ்ஞானிகளை வியக்கவைத்த புதிய கண்டுபிடிப்பு

Dionosaur
பூமியில் முதல் டைனோசர்கள் தோன்றுவதற்கு 4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தீவிர வேட்டையாடும் விலங்கு சதுப்பு நிலங்களில் வாழ்ந்திருக்கிறது.



இரண்டு மீட்டர் நீளம் கொண்ட இந்த விலங்கின் மண்டை ஓடு மட்டுமே அரை மீட்டர் நீளம் கொண்டது. இரையை விழுங்குவதற்காக இரு கோப்பைகள் போன்ற தாடைகளுடன் கூடிய கோரைப் பற்கள் கொண்ட வாய் இந்த விலங்குக்கு இருந்திருக்கிறது. இவை தனது இரையைக் கவ்வி உறிஞ்சிக் கொள்வதற்குப் பயன்பட்டிருக்கின்றன.

கய்சியா ஜெனியே (Gaiasia jennyae) என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த விலங்கின் புதைபடிவம் சமீபத்தில் நமீபியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. நேச்சர் இதழில் இது பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தட்டையான, கழிப்பறை வடிவ தலை கொண்டசாலமாண்டர் எனும் இனத்தைச் சேர்ந்தது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாலமண்டர் என்பது பல்லி போன்ற தோற்றம் கொண்ட இருவாழ்வி ஆகும். எனினும் இவை பல்லிகள் அல்ல. நீரிலும் நிலத்திலும் வசிக்கும் திறன் கொண்டவை.

"இந்த உயிரினத்தை 'நரக சாலமண்டர்' என்று அழைக்கலாம்," என்று அறிவியல் பத்திரிகையாளர் பால் ஸ்மாக்லிக் டிஸ்கவர் இதழில் இந்த கண்டுபிடிப்பு பற்றி எழுதியுள்ளார்.

முற்றிலும் வித்தியாசமானது'

நமீபியாவில் உள்ள கய்-ஆஸ் புவியியல் அமைப்பின் பெயர் இதற்குச் சூட்டப்பட்டுள்ளது. இங்குதான் இந்த உயிரினத்தின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவாழ்விகள் மற்றும் அவற்றின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆய்வு செய்த விஞ்ஞானி ஜென்னி கிளாக்கின் பெயரும் இந்த விலங்கின் பெயருடன் இணைக்கப்பட்டுள்ளது.

"இந்த பெரிய புதைபடிவமானது ஒரு பாறை வெளியில் கெட்டியான ஒரு ராட்சத உருவத்தைப் போலக் கிடப்பதைக் கண்டோம். எங்களுக்கு உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தது,” என்று இதைக் கண்டுபிடித்த ஆராய்ச்சிக் குழுவின் இணைத் தலைவரான கிளாடியா ஏ. மார்சிகானோ கூறினார்.

"அதைப் பார்த்தவுடன், அது முற்றிலும் வித்தியாசமானது என்று எனக்குத் தோன்றியது. நாங்கள் அனைவரும் மிகவும் உற்சாகமானோம்,” என்று அவர் கூறினார்.
இந்தக் குழு, பல புதைபடிவ மாதிரிகளைக் கண்டறிந்தது. இதில் ஒன்றுக்கு முதுகுத் தண்டுடன் நன்கு பாதுகாக்கப்பட்ட மண்டையோடு இருந்தது.

“மண்டையோட்டைப் பரிசோதித்த பிறகு, அதன் முன்பக்க அமைப்பு என் கவனத்தை ஈர்த்தது. அந்த நேரத்தில் எங்களால் பார்க்க முடிந்த ஒரே பகுதி அதுதான். அது மிகவும் அசாதாரணமான, ஒன்றுக்கொன்று இணைந்த தந்தம் போன்ற பெரிய உறுப்பைக் கொண்டிருந்தது. இது பழங்கால நான்கு கால் உயிரினங்களில் இருந்து மாறுபட்டிருந்தது,” என்று அவர் கூறினார்.

முக்கியமான தகவல்கள்

இந்த உயிரினத்தின் தலை மற்றும் தாடையின் வடிவம் அதன் வாயைத் திறந்து அதன் இரையை உறிஞ்சுவதற்கு உதவியது என்று கூறுகிறார் முதுநிலை ஆராய்ச்சியாளரும், கட்டுரையின் இணை ஆசிரியருமான ஜேசன் பார்டோ.

"எங்களிடம் ஒரு முழுமையான மண்டை ஓடு உட்பட சில அருமையான பொருட்கள் உள்ளன. அதை மற்ற விலங்குகளுடன் ஒப்பிடவும், இந்த விலங்கு எப்படித் தனித்துவமானது என்பதைப் புரிந்துகொள்ளவும் பயன்படுத்தலாம்," என்கிறார் அவர்.

மார்சிகானோ மேலும் கூறுகையில், "கோண்ட்வானாவின் (பண்டைய சூப்பர் கண்டம்) மேல் அட்சரேகைப் பகுதிகளில் வசித்த நான்கு கால் உயிரினங்கள் பற்றிய முக்கியமான தகவல்களை இது வழங்குகிறது," என்று குறிப்பிட்டார்.

மிகவும் மூத்த மூதாதை விலங்கு

நமீபியா இன்று தென்னாப்பிரிக்காவின் வடக்கே இருந்தாலும், 30 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அது தெற்கே வெகு தொலைவில், கிட்டத்தட்ட இன்றைய அண்டார்டிகாவின் வடக்குப் புள்ளியில் இருந்தது. அந்த நேரத்தில், பூமி ஒரு பனி யுகத்தின் முடிவை நெருங்கிக் கொண்டிருந்தது.

நிலநடுக்கோட்டுக்கு அருகேயுள்ள சதுப்பு நிலங்கள் வறண்டு போயிருந்தன. ஆனால் ஆனால் துருவங்களுக்கு அருகில், சதுப்பு நிலங்கள் இருந்தன. அவை பனிக்கட்டிகள் மற்றும் பனிப்பாறைகள் ஆகியவற்றுடன் இணைந்து இருந்திருக்கலாம்.

உலகின் வெப்பமான, வறண்ட பகுதிகளில், விலங்குகள் புதிய வடிவங்களில் உருவாகின. டெட்ராபோட்கள் என்று அழைக்கப்படும் ஆரம்பகால நான்கு கால் முதுகெலும்பு விலங்குகள் பாலூட்டிகளாகவும் ஊர்வன மற்றும் இருவாழ்விகளாகவும் மாறின. ஆயினும் பூமியின் விளிம்புகளில், அதாவது இப்போதைய நமீபியா போன்ற இடங்களில், அதற்கு முந்தைய வடிவங்களில் விலங்குகள் வாழ்ந்திருக்கின்றன.

"நமீபியாவின் கய்-ஆஸ் புவியியல் அமைப்பு மிகவும் பழமையானது என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது," என்று பார்டோ கூறினார்.

"இது 4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன உயிரினங்களுடன் தொடர்புடையது. வேட்டையாடும் ராட்சத விலங்குகளைக் கொண்ட ஒரு செழிப்பானச் சுற்றுச்சூழல் அமைப்பு இருந்தது என்பதை இந்தக் கண்டுபிடிப்பு நமக்குச் சொல்கிறது. நாம் எவ்வளவு ஆழ்ந்து தேடுகிறோமோ, பார்க்கிறோமோ, அந்த அளவுக்கு நமது மூதாதை விலங்குகள் பற்றிய பதில்கள் நமக்குக் கிடைக்கும்," என்று பார்டோ கூறுகிறார்.