1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: வியாழன், 13 நவம்பர் 2014 (20:35 IST)

முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் சுட்டுக் கொலை

மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆட்களினால் புதன்கிழமை இரவு அவருடைய வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகக் காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
 
விடுதலைப்புலிகளின் காவல் துறையில் பணியாற்றி, யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், புனர்வாழ்வு பயிற்சி பெற்றிருந்த நாற்பது வயதுடைய கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்.
 
எந்தவிதமான அரசியல் ஈடுபாடுகளும் அற்றிருந்த இவர், மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அந்தப் பிரதேசத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
 
சம்பவம் நடைபெற்ற இடத்தில் காவல் துறையினரும் இராணுவத்தினரும் பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்திருந்து, விசாரணைகளை நடத்தி வருவதாகவும் வெளியார் எவரையும் இறந்தவரின் வீட்டிற்குச் செல்லவிடாமல் தடுத்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
வடமேற்குக் கரையோரத்தில் மன்னார் மாவட்டத்தின் கடைசிக் கிராமப் பகுதியாகிய கணேசபுரத்தில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் இலுப்பைக்கடவை காவல் துறையினர் புலன் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
 
மேசன் தொழிலாளியாக தனது வாழ்வாதாரத்திற்குத் தொழில் செய்து வந்த இவர், புதன்கிழமை இரவு வீட்டிலிருந்தபோது, வீட்டை நோக்கி யாரோ கல்லெறிந்தபோது யார், என்ன நடக்கின்றது என பார்ப்பதற்காக வெளியில் வந்தபோதே, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் அவருடைய தலையில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து, அவரைக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
இவரைக் கொலை செய்தவர்கள் யார், என்ன காரணத்திற்காக, இவர் கொலை செய்யப்பட்டார் என்பதைக் கண்டறிய பல முனைகளிலும் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாகக் காவல் துறையினர் கூறியிருக்கின்றனர்.