வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 24 பிப்ரவரி 2015 (20:12 IST)

நாஜி வதை முகாம் மரணங்களுக்கு உடந்தையாக இருந்ததாக 94 வயது நபர் மீது குற்றச்சாட்டு

இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் யூதர்களைக் கொல்வதற்கான மரண வதை முகாமாகச் செயல்பட்ட அவுஷ்விட்சில் பணியாற்றிய 94 வயது நபர் மீது கொலைகளுக்கு உடந்தையாக இருந்ததாக, 3,681 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
எஸ்எஸ் என்று அழைக்கப்பட்ட நாஜி பாதுகாப்புப் படையில் சார்ஜெண்ட்டாக பணியாற்றிய அந்த நபர், 1944ல் நாஜி வதை முகாமில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றியிருக்கிறார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 3 வருடம் முதல் 15 வருடம் வரையிலான சிறை தண்டனை வழங்கப்படலாம்.
 
அந்தரங்க உரிமை காப்புச் சட்டங்களின் காரணமாக அவரது பெயரை வெளியிட முடியாது என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அவர் வயது முதிர்ந்தவராக இருந்தாலும் வழக்கு விசாரணைக்கு உகந்தவர்தான் என அவர்கள் கூறியுள்ளனர்.
 
மருத்துவ அதிகாரியாக அந்த முகாம் செயல்பட அவர் உதவினார் என அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதனால், அவர் அந்த முகாமில் பணியாற்றிய 1944 ஆகஸட் 15 முதல் செப்டம்பர் 14 வரையிலான காலகட்டத்தில் அங்கு நிகழ்ந்த மரணங்களோடு அவரைத் தொடர்பு படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.
 
அவுஷ்விட்ச் - பிர்கேனாவ் முகாம்களில் 1940 முதல் 1945 ஜனவரி 27ல் அந்த முகாம் விடுவிக்கப்படும்வரை, சுமார் 11 லட்சம் பேர், பெரும்பாலும் ஐரோப்பிய யூதர்கள் அங்கே கொல்லப்பட்டனர்.
 
இம்மாதத் துவக்கத்தில் 93 வயது நபர் ஒருவர் இதே போன்ற குற்றச்சாட்டிற்காக ஜெர்மானிய நீதிமன்றம் ஒன்றால் தண்டிக்கப்பட்டார். ஒரு மரணவதை முகாமில் எஸ்எஸ் பாதுகாவலாராக பணியாற்றியதன் மூலம் 1,70,000 மரணங்களுக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.
 
இந்த நபர் அவுஷ்விட்சில் 1942 ஜனவரியிலிருந்து 1944 ஜூன் மாதம் வரை பணியாற்றினார் என்று கூறப்படுகிறது. மற்றொரு நாஜி பாதுகாவலர் வரும் ஏப்ரல் மாதம் விசாரணையைச் சந்திக்கவிருக்கிறார். இவர் மீது 3,00,000 மரணங்களுக்குக் காரணமாக இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.