திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (20:44 IST)

பொறியியல் படிப்பு: கணினி பாடப்பிரிவில் சேர்வது ஆபத்தா? எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது?

வேலூரைச் சேர்ந்த குகன், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறையை(Computer Science Engineering) தேர்வு செய்து படிக்க விரும்புகிறார்.
 
பொறியியல் படிப்புகளில் சேர 186 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ள குகன், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்கத் திட்டமிட்டுள்ளார்.
 
ஆனால் அண்மைக்காலமாக செய்திகளில் இடம்பெறும் பொருளாதார நெருக்கடி, ஐ.டி. நிறுவனங்களில் வேலை நீக்கம் உள்ளிட்ட செய்திகளால் கணினி அறிவியல் துறையை தேர்வு செய்து படிக்க விரும்பும் தன் மகனின் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலையில் குகனின் தந்தை இருக்கிறார்.
 
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கைக்கு 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், பாடப் பிரிவுகளையும், கல்லூரிகளையும் தேர்வு செய்யும்போது குறிப்பிட்ட சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
 
தமிழ்நாட்டில் பறிபோகும் மருத்துவ இடங்கள், அங்கீகாரத்தை இழந்த கல்லூரிகள் - யார் காரணம்?
 
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பொறியியல் கல்லூரிகள் சேர்ந்து படிப்பதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் அனுப்பி வருகின்றனர்.
 
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை அனுப்ப ஜூன் 4ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
இதுவரை 2 லட்சத்து நான்காயிரம் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துள்ளனர்.
 
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 278 இடங்கள் இருந்த நிலையில், அவற்றில் 60 ஆயிரம் இடங்கள் வரை காலியாக இருந்தன.
 
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 50 ஆயிரம் இடங்கள் வரை காலியாக இருக்கக்கூடும் என கல்வியாளர்கள் ஊகிக்கின்றனர்.
 
அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் படிப்புகள், மாணவர்கள், கம்ப்யூட்டர்
 
பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.
 
இந்த 3 பாடங்களிலும் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு கட் ஆஃப் மதிப்பெண் 200 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும். இதன் அடிப்படையிலேயே பொறியியல் படிஜபுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
 
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 5 மதிப்பெண் வரை கட் ஆஃப் மதிப்பெண் குறையும் என பொறியியல் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
 
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய பேராசிரியரும், கல்வியாளருமான மாறன், “இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கட் ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. எந்த பாடப் பிரிவுகளுக்கு எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண் குறையும் என்ற விவரம், மருத்துவ சேர்க்கை, ஐஐடி மாணவர் சேர்க்கை, தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு தெரியவரும்,” என்று தெரிவித்தார்.
 
இந்த ஆண்டு வெளியான 12ஆம் வகுப்பு முடிவுகள் அடிப்படையில் கணிதத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
 
அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் படிப்புகள், மாணவர்கள், கம்ப்யூட்டர்
 
மேலும் இயற்பியல், வேதியியல் பாடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விகிதமும் குறைந்துள்ளதால் கட் ஆஃப் மதிப்பெண் 5 மார்க் வரை குறையும் என அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் தெரிவித்தார்.
 
அரசுக் கல்லூரிகளில் 0.5 முதல் 1.5 மதிப்பெண் வரை குறையும் என்றும் அவர் தெரிவித்தார். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு மதிப்பெண் குறைவாக வந்துள்ளதும், கட் ஆஃப் மார்க் குறைவதற்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது.
 
கம்ப்யூட்டர் பிரிவுக்கு கூடும் மவுசு
 
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கணினி அறிவியல்(கம்ப்யூட்டர் சயின்ஸ்) பாடப்பிரிவில் சேர அதிக மாணவர்கள் விரும்புவதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
 
கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பொறியியல் மாணவர் சேர்க்கையில் கணினி சார்ந்த பாடப்பிரிவுகளையே அதிக மாணவர்கள் தேர்வு செய்ததாகத் தரவுகள் கூறுகின்றன.
 
நான்கு சுற்று கலந்தாய்வுக்கு பிறகு 93 ஆயிரத்து 571 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்திருந்த நிலையில், கணினி சார்ந்த பாடப்பிரிவுகளில் ஏறத்தாழ 52% மாணவர்கள் சேர்ந்தனர்.
 
அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் படிப்புகள், மாணவர்கள், கம்ப்யூட்டர்
 
2022 - 23ஆம் ஆண்டில் அதிகம் தேர்வு செய்யப்பட்ட பாடப்பிரிவுகள்
 
“பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 70% பேர் கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளில் சேர விரும்புகின்றனர். சமீபத்திய AI வளர்ச்சி, அதிக சம்பளம், கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு வீட்டிலிருந்தபடியே வேலை செய்வது உள்ளிட்ட வசதிகளால் பெற்றோர்களும், மாணவர்களும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிய விரும்புகின்றனர்,” என்று கல்வியாளர் மாறன் தெரிவித்தார்.
 
கம்ப்யூட்டர் துறையைத் தேர்வு செய்ய முடியாத மாணவர்கள் டாப் கல்லூரிகளில் ECE பாடப்பிரிவைத் தேர்வு செய்து படிக்க விரும்புகின்றனர் என்று பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
 
“சில ஆண்டுகளுக்கு முன்புவரை மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கு இருந்த ஈர்ப்பு தற்போது இல்லை. இதனால் பல கல்லூரிகளில் உள்ள இந்தப் பாடப்பிரிவுகள் மூடப்படுகின்றன,” என்று மாறன் கூறினார்.
 
வேலூரைச் சேர்ந்த மாணவர் குகனின் தந்தை வேல்முருகனுக்குத் தனது மகன் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையைத் தேர்வு செய்து படிக்க விரும்புவதில் உடன்பாடில்லை. ஐடி நிறுவனங்களில் நடக்கும் அதிரடி வேலைநீக்கம்தான் தனது பயத்தின் காரணம் என்று பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.
 
“இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பொருளாதார மந்தநிலை காரணமாக பலரை வேலையிலிருந்து நீக்குகின்றனர். இதனால் எதிர்காலத்தில் ஐடி துறையில் வேலைக்கு உத்தரவாதம் இருக்காது. அதனால் என்னுடைய மகன் சிவில் பாடப்பிரிவைத் தேர்வு செய்து படித்தால் நல்லது."
 
வேல்முருகனின் மகன் குகனோ தந்தையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சேர்வது குறித்த தன் முடிவில் உறுதியாக இருக்கிறார்.
 
“இப்போது வளர்ச்சியில் இருக்கும் செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு போன்ற துறைகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அதனால் B.E. CSE படித்த பிறகு ஐஐடி அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழத்தில் சேர்ந்து இந்தத் துறையில் MS படிக்கலாம் என்று நினைக்கிறேன்."
 
இதுகுறித்துப் பேசிய கல்வியாளர் மாறன், “ஒரு பாடப்பிரிவைத் தேர்வு செய்யும்போது எதிர்காலத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க வேண்டும். கம்ப்யூட்டர் துறை வேகமாக வளர்ந்தாலும், 4 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தையில் கம்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியர்கள்தான் அதிகம் இருப்பார்கள்.
 
தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் வரை கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை சார்ந்து பொறியியல் படிப்புகளைப் படிக்கின்றனர். இதுமட்டுமின்றி ஆர்ட்ஸ் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர்களும் இருப்பதால் சந்தையின் தேவையைவிட அதிகமாக மாணவர்கள் கல்லூரிகளில் இருந்து வெளிவருகின்றனர்.
 
அதனால் எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் படிப்புகள் படிக்கும் அனைவருக்கும் வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். இதற்கு மாற்றாக சமீபத்திய வளர்ச்சியான மின்சார வாகன உற்பத்தித் துறைக்குப் பயனளிக்கும் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறைகளையும் மாணவர்கள் தேர்வு செய்யலாம்,“ என்றார்.