வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : சனி, 9 ஆகஸ்ட் 2014 (06:24 IST)

எபோலா தொற்றுக்குள்ளான பயணி ஒருவர் புதுடில்லியில்

புதுடில்லி வந்துள்ள பயணி ஒருவர் எபோலா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் இந்திய மத்திய சுகாதாரத்துறையை உஷார் படுத்தியுள்ளது.

முன்னெடுக்கப்படவுள்ள எபோலா வைரஸ் தோற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
புதுடில்லியில் உள்ள துவாரகா பகுதியை சேர்ந்த இவர் இதுவரை ஆரோக்கியமாக உள்ளதாகவும், இந்த நோய் தொடர்பாக அவரே தன்னை கண்காணித்துக் கொள்ள வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எபோலா நோய் தொடர்பான சிகிச்சைகளை வழங்க டில்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய சுகாதரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளதாகவும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு துரிதப்படுத்தி வருவதாகவும் அந்த செய்திக் குறிப்பு கூறுகின்றது.
 
எபோலா வைரஸ் தொற்று நோய்க்கான 24 மணிநேர அவசரகால சிறப்பு மையம் நாளை சனிக்கிழமை முதல் இயங்கும் என்று இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
 
இந்திய அரசின் நடவடிக்கைகள், சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதாகவும், இந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் நுழையும் பயணிகளிடம் முறையான மருத்துவ பரிசோதனைகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நோயின் பாதிப்பு அதிகம் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள நாடுகளில், சுமார் 47,000 இந்தியர்கள் வாழ்ந்துவருவதாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தொடர்புகொண்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
மேற்கு ஆப்பிரிக்காவில் பரவிவரும் அபாயகரமான எபோலா வைரஸ் தொற்று காரணமாக உலக சுகாதார நிறுவனம் 'உலகளாவிய அவசர நிலையை' பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.