1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 9 அக்டோபர் 2020 (14:33 IST)

67 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடுகள்: 3.18 கோடி டாலர்களுக்கு ஏலம்

டைரனோசோரஸ் ரெக்ஸ் டைனசோரின் எலும்புக்கூடுகள் 3 கோடியே 18 லட்சம் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது.
 
இந்த டைனசோரின் பெயர் 'ஸ்டான்'. நியூயார்க்கில் கிறிஸ்டீஸ் என்ற அமைப்பால் ஏலம் விடப்பட்ட இந்த 67 மில்லியன் ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளை, பெயர் வெளியிடாத நபர் ஒருவர் வாங்கியுள்ளார்.
 
இதற்காக எதிர்பார்க்கப்பட்ட தொகை 6-8 மில்லியன் டாலர்களாக இருந்தது. ஆனால், ஆன்லைனில் ஏலம் விடப்பட்ட பின்னர், இதன் தொகை வேகமாக உயர்ந்தது. 1997ஆம் ஆண்டு "சூ" என்று பெயரிடப்பட்ட டி.ரெக்ஸ் டைனசோர் எலும்புக்கூடு 8.4 மில்லியன் டாலர்கள் என்ற விலையை விட தற்போது விற்கப்பட்டதன் விலை மிக அதிகமாகும்.
 
சூ டைனோசர் எலும்புக்கூடுகள் சிகாகோவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஸ்டான் டைனோசர் எங்கு வைக்கப்படும் என்பது குறித்த தகவல் இல்லை. ஆனால், தனிப்பட்டவர்கள் இதனை காட்சிப்படுத்தாமல் இதனை இனி பார்க்க முடியாதோ என்ற அச்சம் இருக்கிறதோ.
 
இது உண்மையாகவே ஏலம் எடுக்கப்பட்ட விலை 27.5 மில்லியன் டாலர்கள் ஆகும். கமிஷன் உள்ளிட்ட மற்ற கூடுதல் செலவுகளை சேர்க்க இறுதி விலை 31.8 மில்லியன் டாலர்களானது. புதைப்படிம ஆய்வாளரான ஸ்டான் சாக்ரிசன் இந்த எலும்புக்கூடுகளை கண்டுபிடித்ததால், இதற்கு ஸ்டான் என்று பெயரிடப்பட்டது.
 
சௌத் டகோடாவில் 1987ஆம் ஆண்டு இந்த டைனோசர் எலும்புக்கட்டின் எச்சங்களை அவர் கண்டறிந்தார். தற்போது இருக்கும் சிறப்பான டி.ரெக்ஸ் எலும்புக்கூடுகளில் ஸ்டானின் எலும்புக்கூடும் ஒன்று.
 
இதில் இருந்த 188 எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அது தன் வாழ்வில் சந்தித்த போராட்டங்களால் சில எலும்புகள் சேதம் அடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.