1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: சனி, 11 மார்ச் 2023 (23:55 IST)

ஆர்ஆர்ஆர் படத்தை பணம் வாங்கிகொண்டு பாராட்டினாரா ஜேம்ஸ் கேமரூன்? தெலுங்கு திரையுலகை உலுக்கும் சர்ச்சை

'ஆஸ்கர்' வாயில் கதவைத் தட்டி நிற்கும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் விருதை வெல்வதற்காகப் பெரும் பணம் செலவழிக்கப்படுவதாக தெலுங்கு திரையுலகில் சர்ச்சை எழுந்துள்ளது.
 
அதன் ஒரு பகுதியாக, புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர்களான ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஆகியோரும்கூட பணம் பெற்றுக் கொண்டு ஆர்.ஆர்.ஆர். படத்தைப் பாராட்டினார்களா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது.
 
தெலுங்கில் புகழ் பெற்ற இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான தம்மாரெட்டி பரத்வாஜ் ஆர்ஆர்ஆர் படம் குறித்து தெரிவித்துள்ள விமர்சனம் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. ஆஸ்கர் விருதுக்காக ஆர்ஆர்ஆர் படத்தைப் பிரபலப்படுத்த ரூ.80 கோடி செலவிடப்பட்டிருப்பதாகவும் அதைக் கொண்டு 8 படங்களை உருவாக்கி இருக்கலாம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
 
"விமான டிக்கெட்டிற்காக மட்டுமே இந்தப் பணத்தைச் செலவழித்துள்ளனர், இதன் மூலம் அவர்கள் ரூ.80 கோடியை முதலீடு செய்துள்ளனர்," என்று அவர் குறை கூறியுள்ளார். பரத்வாஜின் விமர்சனத்திற்கு பிரபல தெலுங்கு நடிகர்கள், இயக்குநர்கள் பலரும் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
 
ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கரில் ஒரிஜினல் பாடல் பிரிவில் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி நாளை மறுநாள் (மார்ச் 13) காலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் நடைபெறுகிறது.