1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வெள்ளி, 23 மே 2014 (07:31 IST)

இலங்கையில் டெங்கு பரவில் அதிகரிப்பு

இலங்கையில் அண்மையில் பெய்த மழை காரணமாக கொழும்பு மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மீண்டும் கொசுவினால்(நுளம்பு) பரவும் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
 
இரத்தினபுரி நகர பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் டெங்கு காய்ச்சல் பரவியதையடுத்து அந்த பிரதேசத்திலுள்ள 14 பாடசாலைகளையும் இன்றும் நாளையும் மூடிவிடுமாறு மாகாண கல்வி அமைச்சினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
 
சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு காரணமாக இரத்தினபுரி தமிழ் வித்தியாலயம் மற்றும் அல் – மஹ்ஹியா முஸ்லிம் வித்தியாலயம் உட்பட 14 பாடசாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளது.
 
இரத்தினபுரி நகர பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 40 பேர் அடையாளம் காணப்பட்டு, தற்போது அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
 
இவர்களில் புனித அலோசியஸ் கல்லூரி மாணவர்கள் 30 பேர் உட்பட 32 பேர் பாடசாலை மாணவர்கள் என இரத்தினபுரி பொது மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
புனித அலோசியஸ் பாடசாலை அதிபரும் மாணவர்களும் டெங்கு காய்சலினால் பீடிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்ததையடுத்தே நகர பிரதேசத்திலுள்ள பாடசாலைகளை இரு நாட்களுக்கு மூடுமாறு உத்தரவிடப்பட்டதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய கூறுகின்றார்.
 
நாளை வெள்ளிக்கிழமை பாடசாலைகளில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு டெங்கு பரவும் சூழல் இல்லாமல் செய்து, பாடசாலைகள் வழமை நிலைக்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்
 
கிழக்கு மாகாண நிலைமை
 
அதேவேளை கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் டெங்கு நோய் ஆபத்து தொடர்ந்தும் இருப்பதாக மாகாண சமூக வைத்திய நிபுணர் டாக்டர். எஸ் . அருள்குமரன் தெரிவிக்கின்றார்.
 
இந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலே கூடுதலானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
 
கிழக்கு மாகாணத்தில் மழை பெய்யாத போதிலும் நீர் தாங்கிகளிலும் குளிர் சாதன பெட்டிகளில் தேங்கும் நீரிலும் டெங்கு நுளம்புகள் பெருகுவதை தங்களால் கண்டு பிடிக்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
 
பாடசாலை மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னேற்றகரமானதாக இருந்தாலும் சமூக மட்டத்தில் அது எதிர்பார்த்த பலனை தருவதாக இல்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
 
இலங்கையிலிருந்து மலேரியா காய்ச்சால் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதை உலக சுகாதார ஸ்தாபனம் கூட தற்போது ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் நுளம்பினால் பரவும் டெங்கு காய்ச்சலை முற்றாக ஒழிப்பதற்கான போராட்டத்தை சுகாதார துறையினர் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியவர்களாவே உள்ளனர் என்று எமது செய்தியாளர் கூறுகிறார்.