1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: சனி, 26 ஜூலை 2014 (13:45 IST)

சி.பி.எம். மாநிலச் செயலர் மீது அவதூறு வழக்கு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் மீது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சார்பாக அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
 
மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற தலைமைக் காவலர் ஒருவர் டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்டது தொடர்பான அறிக்கையில் அவதூறன கருத்துகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
 
சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் ஆற்று மணலை ஏற்றிச் சென்ற டிராக்டரைத் தடுப்பதற்கு காவலர் ஒருவர் முயன்றபோது, அவர் டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷணன் ஜூலை 21ஆம் தேதியன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
 
இந்த அறிக்கையின் காரணமாக முதலமைச்சரின் நற்பெயருக்கும் தமிழக அரசுக்கும் களங்கம் ஏற்பட்டிருப்பதாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில சென்னை மாநகர அரசு வழக்கறிஞரால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவில், ஜி. ராமகிருஷ்ணன் மீது இ.பி.கோ. 499, 500ஆவது பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது.
 
இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய ஜி. ராமகிருஷ்ணன், அரசின் மீது ஒரு விமர்சனம் முன்வைக்கப்பட்டால், அந்த விமர்சனம் உண்மையா, பொய்யா என்று பார்த்து அதற்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக, அந்தக் கருத்தை முன்வைத்தவர் மீதே வழக்குப் போடுவது என்பது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்று குறிப்பிட்டார்.
 
நாளிதழ் மீதும் அவதூறு வழக்கு
 
இது தவிர, ஜூன் 22, ஜூலை 2 ஆகிய தேதிகளில் போக்குவரத்துத் துறை தொடர்பான செய்திகளை வெளியிட்ட தமிழ் நாளிதழ் ஒன்றின் மீது போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
 
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் விரைவில் கட்டணங்கள் உயர்த்தப்பட இருப்பதாகவும் 40 சதவீத வழித்தடங்கள் தனியாருக்கு அளிக்கப்பட இருப்பதாகவும் அந்த நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது.
 
இந்தச் செய்திகள் தொடர்பாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நாளிதழ் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
 
இப்படிப் பத்திரிகைகளின் மீது வழக்குத் தொடர்வது ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் முயற்சி என்று குறிப்பிடுகிறார் ஜி. ராமகிருஷ்ணன்.