வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2024 (23:40 IST)

ஆழ்கடல் சுரங்கம்: கனிமங்களை கைப்பற்றி வல்லரசு நாடுகளை முந்த முயலும் இந்தியா

sea
தூய ஆற்றலுக்கான எதிர்காலத்தை நோக்கி உலக நாடுகள் அனைத்தும் பயணித்துக் கொண்டிருக்கின்றன. அதில் முக்கிய அங்கமாக இருக்கும் ஆழ்கடல் கனிமங்களைக் கண்டறியும் முயற்சியில் இந்தியா மற்றொரு படியை எடுத்து வைத்துள்ளது.
 
கடலுக்கு அடியில் உள்ள முக்கியமான தாதுப் பொருட்களைப் பாதுகாப்பதில் உலக வல்லரசுகளுக்கு இடையே போட்டி அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் ஏற்கெனவே இரண்டு ஆழ்கடல் ஆய்வுக்கான உரிமங்களைக் கொண்டுள்ள இந்தியா, மேலும் இரண்டுக்கு விண்ணப்பித்துள்ளது.
 
சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடலின் மேற்பரப்பில் இருந்து ஆயிரக்கணக்கான மீட்டர்கள் கீழே உள்ள கோபால்ட், நிக்கல், தாமிரம், மாங்கனீசு போன்ற கனிம வளங்களின் மிகப்பெரிய இருப்பை அடைய போட்டியிட்டு வருகின்றன.
 
காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராட புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களான சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம், மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி தொழில்நுட்பம் ஆகியவற்றை உற்பத்தி செய்ய இவை பயன்படுத்தப்படுகின்றன.
 
ஐக்கிய நாடுகள் சபையோடு இணைந்த சர்வதேச கடற்பரப்பு ஆணையம் (ISA) இதுவரை 31 ஆய்வு உரிமங்களை வழங்கியுள்ளது, அவற்றில் தற்போது 30 ஆய்வுகள் செயலில் உள்ளன. இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் இந்த வாரம் ஜமைக்காவில் கூடி சுரங்க உரிமம் வழங்குவது தொடர்பான விதிமுறைகள் குறித்து விவாதிக்க உள்ளன.
 
 
கடல்களின் அடிப்பகுதியில் உள்ள முக்கியமான கனிமங்களைப் பாதுகாக்கும் போட்டியில் இந்தியா பின்வாங்க விரும்பவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது.
 
இந்தியாவின் புதிய விண்ணப்பங்களை ஐஎஸ்ஏ அங்கீகரிக்கும் பட்சத்தில், அதன் உரிம எண்ணிக்கை ரஷ்யாவுக்கு இணையாகவும், சீனாவைவிட ஒன்று குறைவாகவும் இருக்கும்.
 
இந்தியாவின் விண்ணப்பங்களில் ஒன்று, மத்திய இந்தியப் பெருங்கடலின் கார்ல்ஸ்பெர்க் ரிட்ஜ் பகுதியில் உள்ள செம்பு, துத்தநாகம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றைக் கொண்ட நீர்வெப்ப துவாரங்களுக்கு அருகில் உள்ள பாலிமெட்டாலிக் சல்பைடுகளை ஆராய முயற்சி செய்வதாகும்.
 
பிபிசி பார்த்த ஆவணங்களின்படி, ஐஎஸ்ஏவின் சட்ட மற்றும் தொழில்நுட்ப ஆணையம் இதுகுறித்த கருத்துகள் மற்றும் கேள்விகளின் பட்டியலை இந்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.
 
மத்திய இந்தியப் பெருங்கடலில் உள்ள அஃபனசி-நிகிடின் கடல் பகுதியில் கோபால்ட் நிறைந்த ஃபெரோமாங்கனீசு மேலோடுகளை ஆராய்வதற்காக அளிக்கப்பட்ட மற்றொரு விண்ணப்பத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, பெயர் குறிப்பிடப்படாத மற்றொரு நாடு ஒன்று இந்தியா விண்ணப்பித்த அதே கடற்பரப்பை உரிமை கோரியுள்ளது என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், இதற்கு இந்தியாவிடம் பதில் கேட்டுள்ளது.
 
விண்ணப்பங்களுக்குக் கிடைக்கும் முடிவு எதுவாக இருந்தாலும், கடல்களின் அடிப்பகுதியில் உள்ள முக்கியமான கனிமங்களைப் பாதுகாக்கும் போட்டியில் இந்தியா பின்வாங்க விரும்பவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது.
 
"இந்தியப் பெருங்கடல் மிகப்பெரிய அளவில் வளங்களின் இருப்புகளை உறுதியாகக் கொண்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தின் விரிவு இந்திய அரசை அறிவியல் பூர்வமாக கடலின் ஆழத்தை ஆராய்வதற்கு ஊக்கமளித்துள்ளது" என்று அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் புவிசார் அரசியல் மற்றும் விநியோகச் சங்கிலி நுண்ணறிவு வழங்கும் நிறுவனமான ஹொரைசோன் அட்வைசரியின் இணை நிறுவனர் நாதன் பிகார்சிக் கூறுகிறார்.
 
 
இந்தியா சில பாலிமெட்டாலிக் பாறைகளை (மாங்கனீசு, கோபால்ட், நிக்கல் மற்றும் தாமிரம் நிறைந்த கடற்பரப்பில் காணப்படும் உருளைக்கிழங்கு வடிவ பாறைகள்) சேகரித்தது.
 
இந்தியா, சீனா, ஜெர்மனி, தென் கொரியா ஆகிய நாடுகள் ஏற்கெனவே இந்தியப் பெருங்கடல் முகடு பகுதியில் பாலிமெட்டாலிக் சல்பைடுகளை ஆய்வு செய்ய உரிமம் பெற்றுள்ளன.
 
கடந்த 2022ஆம் ஆண்டில், இந்தியாவின் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், மத்திய இந்தியப் பெருங்கடல் படுகையில் 5,270 மீட்டர் ஆழத்தில் அதன் சுரங்க சோதனைகளை நடத்தியது.
 
அதில் சில பாலிமெட்டாலிக் பாறைகளை (மாங்கனீசு, கோபால்ட், நிக்கல் மற்றும் தாமிரம் நிறைந்த கடற்பரப்பில் காணப்படும் உருளைக்கிழங்கு வடிவ பாறைகள்) சேகரித்தது.
 
இந்தியாவின் ஆழ்கடல் சுரங்கத் திட்டங்கள் தொடர்பான பிபிசியின் கேள்விகளுக்கு புவி அறிவியல் அமைச்சகம் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
 
"உச்சகட்டமாக இந்தியா தன்னை அதிகார மையமாக காட்டிக்கொள்ள நினைத்தாலும், தனது எல்லைகளைத் தாண்டி அது மேலோங்கி நிற்காமலும், அதேநேரம் ஆழ்கடல் என்று வரும்போது சீனாவைவிட பின்தங்கவில்லை என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தவும் முயலக்கூடும்," என்கிறார் ஜெர்மனியின் போட்ஸ்டாமில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் கடல் நிர்வாகத்தில் பணிபுரியும் பிரதீப் சிங்.
 
ஐ.எஸ்.ஏ உருவாகக் காரணமாக இருந்த ஐ.நா. கடல் சட்டத்தின் உடன்படிக்கைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளிக்காததால், சர்வதேச கடல் பகுதியில் நிலவும் சுரங்கப் போட்டியில் அந்நாடு பங்கேற்கவில்லை. அதற்குப் பதிலாக, அதன் உள்நாட்டு கடற்பரப்பில் இருந்து கனிமங்களைப் பெறுவதையும், அதன் கூட்டாளிகளால் சர்வதேச கடலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டவற்றைச் செயலாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
 
 
2030ஆம் ஆண்டிற்குள் தனது புதுப்பிக்கத்தக்க திறன்களை 500 ஜிகாவாட்டாக அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா குறுகிய கால இலக்கைக் கொண்டுள்ளது
 
ஆழ்கடல் ஆய்வுக்கான ஆதரவாளர்கள் இதுகுறித்துக் கூறுகையில், நிலத்தில் சுரங்கம் தோண்டுவது ஏறக்குறைய போதுமான அளவை எட்டியுள்ளது. இதன் விளைவாக குறைந்த தரமுள்ள உற்பத்தியே நடைபெறுகிறது. மேலும் பல கனிம வளப் பகுதிகள், மோதல் அல்லது சுற்றுச்சூழல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறுகின்றனர்.
 
ஆனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், பூமியின் கடைசி எல்லையான ஆழமான கடற்பரப்பு பெரும்பாலும் ஆய்வு செய்யப்படாத மற்றும் மனிதர்களால் தீண்டப்படாத இடமாகவே உள்ளது. மேலும் தேவை எவ்வளவு தீவிரமானதாக இருந்தாலும், அங்கு சுரங்கங்களைத் தோண்டுவது மீண்டும் சரிசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என்கின்றனர்.
 
இங்கிலாந்து , ஜெர்மனி, பிரேசில், கனடா உட்பட சுமார் இரண்டு டஜன் நாடுகள் ஆழ்கடல் சுரங்கப் பணிகளை நிறுத்த வேண்டும் அல்லது தற்காலிக இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோருகின்றன.
 
தூய எரிசக்தி தொழில்நுட்பங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய 2050ஆம் ஆண்டுக்குள் முக்கியமான கனிமங்களைப் பிரித்தெடுக்கும் பணியை ஐந்து மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று உலக வங்கி கணித்துள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் தனது புதுப்பிக்கத்தக்க திறன்களை 500 ஜிகாவாட்டாக அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா குறுகிய கால இலக்கைக் கொண்டுள்ளது. மேலும் 2070ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைய வேண்டும் என்ற நீண்டகால இலக்குடன், அதன் ஆற்றல் தேவைகளில் 50% புதுப்பிக்கத் தக்கவற்றில் இருந்து பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளது.
 
இந்தியா இந்த இலக்குகளை அடைய, ஆழ்கடலின் அடிப்பகுதி உட்பட அனைத்து சாத்தியமான மூலங்களில் இருந்தும் கிடைக்கும் முக்கியமான கனிமங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
தற்போது, ஒரு சில நாடுகள் மட்டுமே நிலத்தில் இருந்து எடுக்கப்படும் முக்கியமான கனிமங்களின் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அந்த வரிசையில் ஆஸ்திரேலியா முக்கியமான லித்தியம் உற்பத்தியாளராக உள்ளது. அதேநேரம் தாமிரம் வழங்குவதில் சிலி நாடு முதலிடத்தில் உள்ளது.
 
சீனா பல தசாப்தங்களாகவே தன்னுடைய செயலாக்க தொழில்நுட்பங்கள் மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்தி வந்துள்ளது.
 
சீனா முக்கியமாக ஸ்மார்ட்போன்கள், கணினிகளில் பயன்படுத்தப்படும் கிராஃபைட் மற்றும் பூமியின் அரிய தனிமங்களை (rare earths) உற்பத்தி செய்கிறது.
 
ஆனால், இந்த கனிமங்கள் விநியோகச் சங்கிலியில் நுழைவதற்கு முன்பு அவற்றைச் செயலாக்கம்(Processing) செய்வதில் நிலவும் சீனாவின் ஆதிக்கம் குறித்து புவிசார் அரசியல் கவலைகள் உள்ளன. சீனா பல தசாப்தங்களாகவே தன்னுடைய செயலாக்க தொழில்நுட்பங்கள் மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்தி வந்துள்ளது.
 
சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்தின் தகவல்படி, சீனா தங்களது தொழில்நுட்பம் மூலம் தற்போது 100% இயற்கையான கிராஃபைட் மற்றும் டிஸ்ப்ரோசியம், 70% கோபால்ட் மற்றும் கிட்டத்தட்ட 60% அனைத்து லித்தியம் மற்றும் மாங்கனீசு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது, அதுமட்டுமின்றி பெய்ஜிங் அதன் சில செயலாக்க தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்துள்ளது.
 
ஆகஸ்ட் 2023இல் முக்கியமான கனிமங்கள் மற்றும் தூய எரிசக்திக்கான உச்சி மாநாட்டில் பேசிய அமெரிக்க எரிசக்தி செயலாளர் ஜெனிபர் கிரான்ஹோம், "அரசியல் ஆதாயத்திற்காக சந்தை அதிகாரத்தை ஆயுதமாக்கத் தயாராக இருக்கும் ஒரு மேலாதிக்க விநியோகஸ்தருக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம்," என்று தெரிவித்தார்.
 
கடந்த 2022ஆம் ஆண்டில் சீனாவை எதிர்க்கவும், "பொறுப்பான மற்றும் முக்கியமான கனிம விநியோகச் சங்கிலிகளில் முதலீட்டை" ஊக்குவிப்பதற்காகவும், அமெரிக்காவும் பல மேற்கத்திய நாடுகளும் இணைந்து கனிம பாதுகாப்புக் கூட்டாண்மையைத் தொடங்கியுள்ளன. இதில் இந்தியாவும் தற்போது உறுப்பினராக உள்ளது.
 
அதேபோல், ஆழ்கடல் சுரங்க தொழில்நுட்பத்தை உருவாக்க ரஷ்யாவுடனும் இந்தியாவும் ஒப்பந்தம் செய்துள்ளது.
 
"அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் ஆற்றல் பறிமாற்றம் ஆகியவை முக்கியமான தாதுக்களைப் பிரித்தெடுக்க, செயலாக்க மற்றும் பயன்படுத்துவதற்கான தேவையை வேகப்படுத்துகின்றது" என்று பிகார்சிக் கூறுகிறார்.