புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2019 (18:10 IST)

தலித் சிறுவர்கள் தூய்மை இந்தியா கிராமத்தில் திறந்த வெளியில் மலம் கழித்ததால் அடித்துக் கொலை

திறந்த வெளியில் மலம் கழித்துக் கொண்டிருந்த இரு தலித் சிறுவர்களை அடித்துக் கொன்றதாக மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த மாநில காவல்துறை இன்று, வெள்ளிக்கிழமை, தெரிவித்துள்ளது.


 
தங்கள் வீட்டில் கழிவறை வசதி இல்லை என்று 12 வயதாகும் ரோஷினி மற்றும் 10 வயதாகும் அவினாஷ் ஆகிய இருவரின் குடும்பத்தினர் பிபிசி இந்தி சேவையிடம் தெரிவித்துள்ளனர்.
 
"தினக்கூலித் தொழிலாளியான என்னால் வீட்டில் கழிவறை கட்ட இயலவில்லை. ஏழைகளுக்கு கழிவறை கட்ட அரசு வழங்கும் மானியத்தையும் என்னால் பெற இயலவில்லை," என்று அவினாஷின் தந்தை மனோஜ் கூறியுள்ளார்.
 
"கிராம பஞ்சாயத்துக்கு நான் கழிவறை கட்டுவதற்கான நிதி வந்தது. ஆனால் அவர்கள் யாரும் என்னை கழிவறை கட்ட விடவில்லை," என்று வால்மிகி சமுதாயத்தைச் சேர்ந்த மனோஜ் கூறியுள்ளார்.
 
மனோஜ் வசிக்கும் பாவ்கேடி கிராமம் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் திறந்த வெளியில் மலம் கழிப்பது இல்லாத கிராமம் என்று அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது.


 
ரோஷினி, அவினாஷ் ஆகிய இருவரின் குடும்பத்தினரும் நெருங்கிய உறவினர்கள். அவினாஷின் குடும்பத்தினரால் ரோஷினி வளர்க்கப்பட்டு வந்தார்.
 
"குச்சிகளால் அந்த இரு குழந்தைகளும் தாக்கப்பட்டனர். கைதான இருவருக்கும் எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, " என்று சிவ்புரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் சாண்டேல் பிபிசி இந்தியின் சூரே நியாசியிடம் தெரிவித்துள்ளார்.
 
இரண்டு ஆண்டுகளுக்கு முன், தாம் குடிசை கட்ட சாலையோரம் இருந்த மரத்தில் இருந்து குச்சிகளை வெட்டியது முதல் கைது செய்யப்பட்ட இருவரும் தன் மீது வெறுப்பில் இருந்ததாக மனோஜ் குற்றம் சாட்டியுள்ளார்.