வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 13 மே 2020 (14:58 IST)

கொரோனா தடுப்பூசி கிடைக்க இரண்டரை வருடங்கள் ஆகும்

கொரோனா வைரஸ் தடுப்பூசி உலக மக்களை சென்றடைய இரண்டரை வருடங்கள் ஆகும் என கொரோனா வைரஸுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நபரோ தெரிவித்துள்ளார்.
 
’’பாதுகாப்பான மற்றும் நன்கு பலன் தரக்கூடிய தடுப்பூசியை உருவாக்கக் குறைந்தது பதினெட்டு மாதங்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. பின்னர் அதை அதிகளவில் உற்பத்தி செய்து, 7.8 பில்லியன் உலக மக்களுக்கு கொண்டு செல்ல மேலும் ஒரு வருடம் ஆகும்’’ என அவர் கூறியுள்ளார்.
 
லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில், உலக சுகாதார பேராசிரியராகவும் பணியாற்றி வரும் டேவிட் நபரோ, சில வைரஸுக்கான பாதுகாப்பான தடுப்பூசி பல வருடங்களாகியும் உருவாக்க முடியவில்லை என்பதை மக்கள் நினைவில் வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
 
நாடு முழுக்க பொது முடக்கத்தை அறிவித்து இந்தியா தைரியமான முடிவை எடுத்துள்ளது என கூறும் அவர், அதிகளவில் மக்கள் நெருக்கடி உள்ள மும்பை, சென்னை, டெல்லி போன்ற நகரங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக காலத்திற்கு சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.
 
இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மார்ச் 24-ம் தேதி நாடு முழுக்க பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அப்போது இந்தியாவில் 550 பேருக்குத் தொற்று இருந்தது.
 
அப்போது முதல் இந்தியாவில் மூன்று முறை நாடு தழுவிய பொது முடக்கம் நீட்டிக்கப்பட்ட நிலையில், இப்போது வரை 70,756 பேருக்கு தொற்றும், 2,293 மரணங்களும் பதிவாகியுள்ளது.
 
’ பரிசோதனை நடத்தினால் மட்டுமே நோயை கண்டறிய முடியும். இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுவதில்லை. நமது தடுப்பு நடவடிக்கைகளை மீறி இந்த வைரஸ் வேகமாக முன்னேறிவருகிறது. மருத்துவ பணியாளர்களுடனும், மருத்துவ காப்பீட்டுச் சேவைகளுடனும் மக்கள் தொடர்பில் இருப்பது உதவக்கூடும்’’ என டேவிட் நபரோ கூறுகிறார்.
 
இந்திய அரசு அறிவித்த திடீர் பொது முடக்கத்தால் மில்லியன் கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு மற்றும் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகின்றனர். இதற்கு உலகளவில் விமர்சனங்கள் எழுந்த நிலையில் இது குறித்து கருத்து கூடிய டேவிட் நபரோ,’’ மனிதர்கள் பாதிப்பு மற்றும் பொருளாதார இழப்பீடு ஏற்படுத்தக்கூடும் பொது முடக்கம் இந்திய அரசுக்கு ஒரு கடுமையான அரசியல் முடிவாக இருந்திருக்கும்’’ என கூறுகிறார்.
 
மேலும் அவர்,’’கொரோனா குறித்த எச்சரிக்கையை முன்பே ஏன் தெரிவிக்கவில்லை என உலக மக்கள் தங்கள் நாட்டு அரசையும், உலக சுகாதார நிறுவனத்தையும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் மற்றும் அமெரிக்க மக்கள் நாம் இன்னும் விரைவாக செயல்பட்டுருக்க முடியாதா என கேட்கின்றனர். 
 
முன்பே முடிவுகளை எடுத்திருந்தால் நல்ல பலன் கிடைத்திருக்கும் என இப்போது நாம் உணர்ந்திருக்கிறோம். ஆனால், இந்தியாவில் முதல் தொற்று கண்டறியப்பட்டபோதே, முடக்கத்தை அறிவித்திருந்தால், மில்லியன் கணக்கான மக்கள் உடனடியாக பாதிக்கப்பட்டிருப்பார்கள்.’’ என்கிறார்
 
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் உயர்ந்து வரும் நிலையில், அதில் 50 முதல் 70 சதவீதம் பேருக்கு கொரோனா அறிகுறியே இல்லை என அரசு தரவுகள் கூறுகின்றன. வலுவான நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கும் நபருக்கு, கொரோனா அறிகுறியே தெரியாது. ஆனால், அவரால் மற்றவர்களுக்கு நோய் பரவும் என நிபுணர்கள் நம்புகின்றனர். 
 
‘’இந்தியா கொரோனா கண்டறியப்பட்டவர்களின் பெரும்பாலோனோருக்கு மெல்லிய அறிகுறி அல்லது எவ்வித அறிகுறியும் தெரிவதில்லை. இது மிகப்பெரிய சவால் என்பதால், இதற்கான சிறப்பு தடுப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். எவ்வித அறிகுறியும் இல்லாதவர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களது வருமானத்தை இழக்க செய்வது கடுமையானதாக இருக்கும். ’’ என்கிறார் டேவிட் நபரோ.