சீனாவில் வுஹானில் உள்ள ஒரு வைரஸ் ஆய்வு நிலையத்தின் உயிரி பாதுகாப்புத் தன்மை குறித்து அமெரிக்காவின் ரகசியத் தகவல் பரிமாற்ற ஆவணங்களில் கவலை தெரிவிக்கப் பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவி உலகின் கவனத்தை ஈர்த்த அதே வுஹானில் தான் இந்த ஆய்வகம் அமைந்துள்ளது.
வுஹான் பரிசோதனை நிலையத்திலிருந்து தான் இந்த வைரஸ் வெளியாகியுள்ளது என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அமெரிக்கா ஆய்வு செய்து வருகிறது என்று அதன் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அப்படி ஏதும் இருந்தால் என்ன, இப்போதைய நோய்த் தொற்று பற்றி நாம் புரிந்து கொள்ள இதில் ஏதாவது இருக்கிறதா?
ரகசியத் தகவல்கள் என்ன சொல்கின்றன?
தூதரக அளவில் இருந்து பெறப்பட்ட ரகசியத் தகவல்கள் குறித்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் அமெரிக்க விஞ்ஞானிகளிகள் சீனாவின் ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட திரும்பத் திரும்ப அனுப்பப் பட்டதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த ஆய்வகத்தில் பாதுகாப்பு அம்சங்கள் போதுமான அளவுக்கு இல்லை என்று வாஷிங்டனுக்கு இரண்டு எச்சரிக்கைகளை அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.
வுஹான் நச்சுயிரியல் மையத்தின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தில் உள்ள பலவீனங்கள் குறித்து அதிகாரிகள் தீவிர கவலை தெரிவித்ததுடன், கூடுதல் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வவ்வால் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வக ஆராய்ச்சி சார்ஸ் போன்ற புதிய நோய்த் தொற்று அபாயத்தை ஏற்படுத்தும் என்று தூதரக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்திருந்தனர். இப்போதைய நோய்த் தொற்றுக்கு வுஹான் நச்சுயிரியல் மையமோ அல்லது வுஹானில் உள்ள வேறொரு ஆய்வகமோ காரணமாக இருக்குமா என்பது குறித்து அமெரிக்க அரசு சமீபத்தில் நடத்திய ஆய்வில், இந்த ரகசியத் தகவல்கள் முக்கிய இடம் பெற்றதாகவும் அந்தப் பத்திரிகை கூறியுள்ளது.
மேலும், ஆய்வகத்திலிருந்து வைரஸ் பரவியிருக்கும் என்ற வாதத்தை முன்வைத்து Fox News செய்தியும் வெளியானது.
வுஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் உருவானது என்ற தகவல் குறித்து அமெரிக்கா ஆய்வு செய்து வருவதாக டிரம்ப் கூறியுள்ளார்.
வுஹானில் உணவு அங்காடியில் தொடர்புடையதாக இந்த வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல் வெளியானது. ஆனால், இணையதளங்களில் தீவிரமாக அனுமானங்கள் குறித்த செய்திகள் வந்தாலும், பரிசோதனை நிலையத்திலிருந்து (கோவிட்-19 நோய் தாக்குதலை உருவாக்கும்) சார்ஸ்-சி.ஓ.வி.-2 வைரஸ் தற்செயலாக வெளியாகியிருக்கும் என்ற வாதத்திற்கு ஆதாரம் எதுவும் இல்லை.
ஆய்வகங்களில் எந்த மாதிரியான பாதுகாப்பு அம்சங்கள் பயன்படுத்தப் படுகின்றன?
வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் குறித்து ஆராயும் பரிசோதனை நிலையங்கள் பி.எஸ்.எல். தரநிலைகள் என்ற நடைமுறையைப் பின்பற்றுகின்றன. பி.எஸ்.எல். என்பது உயிரி பாதுகாப்பு நிலையைக் குறிப்பதாகும்.
இதில் 4 நிலைகள் உள்ளன. எந்த மாதிரியான உயிரியல் ஏஜென்ட்கள் பற்றி ஆய்வு நடைபெறுகிறது என்பதைப் பொருத்தும், அவற்றைப் பிரிப்பதில் எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதைப் பொருத்தும் இது மாறுபடும்.
உயிரிப் பாதுகாப்பு நிலை 1 என்பது தான் குறைந்தபட்ச அளவு. மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாக நன்கு அறியப்பட்ட உயிரியல் ஏஜென்ட்களை ஆய்வு செய்யும் ஆய்வகங்களில் பின்பற்றப்படுகிறது.
அடுத்தடுத்த நிலைகளில், வைரஸ்களைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமடையும். உயிரி பாதுகாப்பு நிலை 4-ல் அதிகபட்ச முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் இடம் பெற்றிருக்கும். குறைந்த அளவே தடுப்பு மருந்துகள் அல்லது சிகிச்சைகள் உள்ள மிகவும் அபாயகரமான நோய்க்கிருமிகளைக் கையாளும் ஆய்வகங்களில் 4வது நிலைக்கான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். எபோலா, மார்பர்க் வைரஸ் போன்றவை இந்த வகையில் வரும். அமெரிக்கா மற்றும் ரஷியாவில் இவை உள்ளன. தட்டம்மை ஆய்வும் இந்த வகைப்பாட்டில் சேரும்.
சர்வதேச அளவில் பி.எஸ்.எல். தரநிலைகள் பின்பற்றப்படுகின்றன, ஆனால் அதில் சில வேறுபாடுகள் இருக்கும்.
``உதாரணமாக, ரஷியாவில் அதிகபட்ச எச்சரிக்கைக்கானது 1வது நிலை என்றும், குறைந்தபட்ச எச்சரிக்கைக்கு உரியது 4வது நிலை என்றும் குறிப்பிடப்படும். ஆனால் நடைமுறைகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் எல்லாம் சர்வதேச அளவில் ஒரே மாதிரிதான் பின்பற்றப்படும்'' என்று லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் உயிரி பாதுகாப்பு நிபுணர் டாக்டர் பிலிப்பா லென்ட்ஜோஸ் கூறுகிறார்.
ஹங்கேரியில் உள்ள இதைப் போன்ற ஆய்வகங்களில் நான்கு நிலைகளிலுமான தரநிலைகள் பின்பற்றப்படுகின்றன. வெவ்வேறு நோய்க் கிருமிகளைக் கையாள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பொருத்து இதற்கான நிலைகள் மாறுபடும்.
உலக சுகாதார நிறுவனம் இந்த வெவ்வேறு நிலைகளுக்கான வழிகாட்டிக் கையேடுகளை வெளியிட்டுள்ளது, அது எந்த ஒப்பந்தத்தின் கீழும் பின்பற்றத்தக்கதாக இல்லை.
``ஆய்வகங்களில் வேலை பார்ப்பவர்களின் பாதுகாப்பு கருதியும், தங்களுக்கு அல்லது தங்களைச் சார்ந்தவர்களுக்கு நோய்த் தொற்று பராமல் தடுக்கவும், தற்செயலாக அது வெளியாகி சுற்றுச்சூழலை பாதித்துவிடாமல் இருக்கவும் இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன'' என்று டாக்டர் லென்ட்ஜோஸ் குறிப்பிடுகிறார்.
ஆனால் ``இதற்கான `கண்டிப்பு' நிறைய நிபந்தனைகளுடன் வருகிறது. சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து நீங்கள் பரிசோதனைத் திட்டங்களை மேற்கொள்வதாக இருந்தால், குறிப்பிட்ட தர நிலைகளில் ஆய்வகங்கள் இருந்தாக வேண்டும். அல்லது சந்தையில் நீங்கள் பொருள் விற்பதாக அல்லது சில சேவைகளை அளிப்பதாக இருந்தால், உதாரணமாக பரிசோதனைகள் செய்வதாக இருந்தால், சர்வதேச தரநிலைகளின்படி செயல்பட்டாக வேண்டும்'' என்றும் அந்தப் பெண்மணி கூறுகிறார்.
சொல்லப்போனால், வுஹான் நச்சுயிரியல் மையத்துக்கு அமெரிக்காவிடம் இருந்தும், அமெரிக்க ஆராய்ச்சி நிலையங்களிடம் இருந்து நிதியுதவிகள் அளிக்கப்படுகிறது. அவற்றுக்கு இன்னும் அதிக நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் ரகசியத் தகவல் பரிமாற்றத்தில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
எந்த மாதிரியான பாதுகாப்புக் குறைபாடுகளை ரகசியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன?
வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் இருந்து இதற்கு நமக்கு எதுவும் தெரியவில்லை என்பது தான் குறுகிய பதிலாக இருக்கும். ஆனால், பொதுவாகக் கூறுவதாக இருந்தால், உயிரியல் ஏஜென்ட்களைக் கையாளும் ஆய்வகங்களில் பாதுகாப்பு அம்சங்கள் மீறப்படுவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிடலாம்.
``ஆய்வகத்துக்குச் செல்ல யாருக்கு அனுமதி உள்ளது, விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுணுக்க நிபுணர்களின் பயிற்சி மற்றும் புத்தாக்கப் பயிற்சி, பதிவுகள் பராமரிக்கும் நடைமுறைகள், சூழல் வரைபட வசதி, நோய்க் கிருமிகளின் பட்டியல், விபத்து அறிவிக்கை செய்யும் நடைமுறைகள், அவசர கால நடைமுறைகள்'' ஆகியவை இதில் அடங்கும் என்று டாக்டர் லென்ட்ஜோஸ் கூறுகிறார்.
ஆரம்ப கட்டத்தில் நோய்த் தொற்று தாக்கியவர்களில் பலரும் வுஹான் கடல் உணவு மார்க்கெட் செயல்பாட்டில் தொடர்பு உள்ளவர்களாக இருந்தனர்.
ஆனால் தூதரக அளவிலான ரகசியத் தகவல் பரிமாற்றங்களில், இடம் பெற்ற இந்த விஷயங்கள் எந்த அளவுக்கு அசாதாரணமானவையாக இருக்கும்?
விபத்துகள் நடப்பது உண்டு. 2014 ஆம் ஆண்டில், மறந்து வைக்கப்பட்ட தட்டம்மை வைரஸ்களின் சோதனைக் குழாய்கள் ஓர் அட்டைப் பெட்டியில் வாஷிங்டனின் ஆராய்ச்சி மையத்தில் இருந்தன. 2015 ஆம் ஆண்டில், இறந்து போன ஸ்போர்களுக்குப் பதிலாக உயிருடன் இருந்த ஆந்த்ராக்ஸ் சாம்பிள்களை அமெரிக்க ராணுவம் தற்செயலாக நாட்டில் 9 ஆய்வகங்களுக்கும், தென்கொரியாவில் ஒரு ராணுவ தளத்திற்கும் கொண்டு சென்று சேர்ப்பித்தது.
பி.எஸ்.எல். மதிப்பீட்டில் கீழ்நிலையில் உள்ள ஏராளமான ஆய்வகங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாறுபாடுகள் இருக்கும். குறைந்த அளவிலான விதிமீறல்கள் செய்திகளில் இடம் பெறுவதில்லை.
ஆனால் சில ஆய்வகங்கள் பி.எஸ்.எல்.-4 தரநிலை பெற்றவையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. உலகம் முழுக்க அதுமாதிரி 50 ஆய்வகங்கள் உள்ளதாக விக்கிபடியா கூறுகிறது. அவற்றில் வுஹான் நச்சுயிரியல் மையமும் ஒன்று. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ பட்டியல் எதுவும் கிடையாது.
அவை மிக கடுமையான விதிமுறைகளின்படி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அவர் அறிவியலில் மிக ஆபத்தானவையாகக் கருதப்படும் நோய்க் கிருமிகளைக் கையாளும் ஆய்வகங்களாக உள்ளன. அதன் காரணமாக, பொதுவாக அவற்றில் நல்ல பாதுகாப்பு செயல்பாடுகள் இருக்கும். எனவே இவற்றில் ஏதாவது ஒரு மையத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து ஏதும் சிக்கல் எழுந்தால் குறிப்பிடத்தக்கதாக இருந்துவிடும்.
பரிசோதனை நிலையத்தில் இருந்து வைரஸ் வெளியானதாக முன்பு ஏதும் தகவல்கள் இருந்ததா?
இருந்தது. புதிய கொரோனா வைரஸ் பற்றிய தகவல் வெளியில் வந்ததும், அது எங்கே உருவாகியிருக்கும் என்பது குறித்து அனுமானங்கள் எழுந்தன - அவற்றில் பெரும்பகுதியானவை தவறான தகவலின்பேரில் எழுந்தவை.
ஜனவரி மாதம் வைரலாக இருந்த ஒரு இணையவழி தகவலில், உயிரி ஆயுதமாக ஆய்வகத்தில் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. விஞ்ஞானிகள் இவற்றை திரும்பத் திரும்ப மறுத்தனர். இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து உருவானதாக - அநேகமாக வவ்வால்களில் இருந்து உருவானதாக விஞ்ஞானிகள் கருதினர்.
அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக்காகவும் வைரஸ்கள் உருவாக்கப்படுவது உண்டு. உதாரணமாக, நோய்க்கிருமிகள் எப்படி நோயை உருவாக்குகின்றன என்பதை ஆராயவும், எதிர்காலத்தில் வைரஸ்கள் எப்படி பரிணாம வளர்ச்சி பெறும் என்பதை ஆராயவும் இவ்வாறு செய்வது உண்டு.
ஆனால் கடந்த மார்ச் மாதம் வெளியான கொரோனா வைரஸ் மரபணு தொகுப்பு குறித்த ஆய்வில் அது உருவாக்கப்பட்ட வகையைச் சார்ந்தது என்பதற்கான அறிகுறி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ``கொரோனா வைரஸ் பற்றி இப்போதுள்ள மரபணுத் தொகுப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், சார்ஸ்-சி.ஓ.வி.-2 வைரஸ் இயற்கையான வழிமுறைகளில் தான் உருவாகியுள்ளது என்பதை நாம் உறுதியாகக் கூற முடியும்'' என்று ஆய்வின் இணை ஆசிரியரும் கலிப்ரோனியா ஸ்கிர்ப்ஸ் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்தவருமான கிறிஸ்டியன் ஆண்டர்சன் அப்போது கூறியிருந்தார்.
பிறகு, தற்செயலாக ஆய்வகத்தில் இருந்து அந்த வைரஸ் வெளியாகி இருக்கும் என்று கூறப்பட்டது. நோய்த் தொற்று ஆரம்பித்த வுஹான் கடல் உணவு மார்க்கெட்டும், இந்த இரு மையங்களும் குறுகிய தொலைவில் இருப்பதால் அவ்வாறு தொடர்புபடுத்தப் பட்டது.
வன விலங்குகளிடம் இருந்து - அநேகமாக வவ்வால்களிடம் இருந்து - இந்த வைரஸ் உருவாகியிருக்கும் என கருதப்பட்டது.
வவ்வால் கொரோனா வைரஸ் பற்றி வுஹான் நச்சுயிரியல் மையம் ஆராய்ச்சி மேற்கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அந்தப் பணி சட்டபூர்வமாக நடைபெறுகிறது, சர்வதேச இதழ்களில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 2000வது ஆண்டுகளின் தொடக்கத்தில் சார்ஸ் நோய்த் தாக்குதலை சந்தித்த அனுபவத்தை வைத்துப் பார்த்தால், இந்த ஆராய்ச்சியில் ஆச்சர்யம் எதுவும் இல்லை.
இது எங்கே தொடங்கியது என்பது ``மிகவும் கடினமான கேள்வி'' என்று டாக்டர் லென்ட்ஜோஸ் கூறுகிறார். ``திரைமறைவில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. கடல் உணவு மார்க்கெட்டில் இருந்து இது உருவானதா உயிரி பாதுகாப்பு நிபுணர்கள் மத்தியில் தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளது'' என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஆனால் சார்ஸ்-சி.ஓ.வி.-2 வைரஸ் வுஹான் நச்சுயிரியல் மையத்தில் இருந்து தான் தொடங்கின என்பதற்கு இப்போதைக்கு எந்த ஆதாரமும் இல்லை.
உலக சுகாதார நிறுவனம்``ஆய்வகம் ஒன்றில் தான் கொரோனா வைரஸ் உருவானது என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளது'' என்று சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜ்ஜியன் வியாழக்கிழமை செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
நோய்த் தொற்று கையாள்வது குறித்து கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ள அதிபர் டிரம்ப், ஆய்வகத்தில் இருந்து வைரஸ் வெளியானதா என்பது குறித்து அமெரிக்கா ஆய்வு செய்து வருவதாகக் கூறியுள்ளார்.
நோய் தாக்குதலின் ஆரம்பகட்டத்தில் வெளிப்படைத்தன்மையாக செயல்படவில்லை என்று சீனா மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இதுகுறித்து தங்களுக்குத் தெரிந்தவற்றை சீனா ``தெளிவாக வெளியில் கூற வேண்டும்'' என்று அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்ப்பியோ கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் வார்த்தை போர் நடந்து வரும் நிலையில், வைரஸ் தாக்குதலின் ஆரம்பம் எங்கே என்று தடமறிவதற்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்