1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 15 மே 2020 (22:50 IST)

கொரோனா வைரஸ்: உள்ளூர் முதல் உலகம் வரை - 15 முக்கிய தகவல்கள்

  • உலகிலேயே முதன்முறையாக தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக ஸ்லோவேனியா அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள இந்த நாட்டின் மக்கள் தொகை 20 லட்சம் மட்டுமே. அந்த நாட்டில் தற்போது வரை 1464 கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. 103 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
  •  
  • கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவத் தொடங்கிய இடமாக கருதப்படும் சீனாவின் வூஹான் நகரில் உள்ள 1.10 கோடி மக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததையடுத்து சில வாரங்கள் முன்னர் அங்கு பொது முடக்க நிலை தளர்த்தப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக அந்த நகரில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதால் சீன அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
  • நியூசிலாந்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக புதிதாக ஒரு கொரோனா தொற்றுகூட கண்டறியப்படாத நிலையில், இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • பெல்ஜியத்தில் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது இந்த ஆண்டுதான் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கோவிட்-19 தொற்றால் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் மற்றும் மோன்ஸ் ஆகிய நகரங்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
  • பால்டிக் பிராந்திய நாடுகளாக லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா ஆகியவை இணைந்து பால்டிக் குமிழி என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இதன் மூலம் இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த மக்கள் சாலை, கடல் மற்றும் வான் மார்க்கமாக இந்த பால்டிக் குமிழியில் உள்ள மூன்று நாடுகளுக்குள் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி சென்று வரலாம்.
  • ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,598 பேருக்கு கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 113 பேர் பலியாகியுள்ளனர். தற்போது வரை இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோருக்கு அங்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, அதிக கோவிட்-19 தொற்றாளர்கள் கொண்ட நாடாக ரஷ்யா மாறியுள்ளது.
  • ஆஸ்திரியாவில் உணவகங்கள் மற்றும் காஃபி ஷாப்புகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒவ்வொரு மேஜைகளுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் மற்றும் ஒரு மேஜையில் அதிகபட்சம் நான்கு பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை மட்டுமே இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
  • பொது முடக்க நிலை உள்ளிட்ட கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இலங்கையில் மது அருந்தும் பழக்கம் 80% விழுக்காடும், புகை பிடிக்கும் பழக்கம் 68 % விழுக்காடும் குறைந்துள்ளதாக அந்நாட்டின் மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையம் நடத்திய சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளது.
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3967 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 81,970-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,920-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரானா தொற்றால் 2649 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • கொரோனா காரணமாக 31 நாடுகளில் சிக்கியுள்ள முப்பதாயிரம் இந்தியர்களை மீட்க, 140க்கும் மேற்பட்ட விமானங்களை இந்திய விமானப்போக்குவரத்துதுறை அனுப்பி உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியர்கள் தாயகம் திரும்ப உள்ளனர்.
  • சென்னையில் அதிக கொரோனா தொற்றுகளை கொண்ட மண்டலமாக ராயபுரம் பகுதி உள்ளது. அந்த பகுதியில் மட்டும் 971 கொரோனா தொற்றாளர்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 895 தொற்றாளர்கள் உள்ளனர்.தேனாம் பேட்டை, திரு.வி.க. நகர் ஆகிய இரு இடங்களிலுமே 600க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருக்கின்றனர்.
  • தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை ஊரடங்கு முடியும் வரை திறக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு இன்று (மே 15) உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
  • சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிரமான பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனாவாலும் பாதிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டிருப்பதாக அந்த மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • தமிழ்நாட்டில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 4,73,606 பேர் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது 4,46,633 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அபராதமாக மட்டும் 5.59 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
  • ஊரடங்கிற்குப் பிறகு டெல்லியிலிருந்து முதல் முறையாக பயணிகள் ரயில் வியாழக்கிழமை இரவில் சென்னை மத்திய ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதில் வந்த பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்