கொரோனா வைரஸ்: ஒரே நாளில் 168 மரணங்கள், தவிக்கும் இத்தாலி!
கொரோனா வைரசை கட்டுப்படுத்த என்ன செய்வதென்று தெரியாமல் இத்தாலி தவித்து வருகிறது. நேற்று மட்டும் கொரோனா காரணமாக அந்நாட்டில் 168 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 10,149 பேர் இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தென்கொரியா இருந்து வந்த நிலையில், தற்போது தென்கொரியாவை இத்தாலி பின்னுக்கு தள்ளியுள்ளது. இதுவரை இத்தாலியில் 631 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தனது முதல் கொரோனா நோயாளியை இத்தாலியை உறுதி செய்தது. அதன் பின்னர் அடுத்த மூன்று வாரங்களில் மேலும் இருவருக்கு மட்டுமே அந்நாட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால் அடுத்த 20 நாட்களில் இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டியுள்ளது.
இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் முதியவர்கள் அதிகமாக உள்ளனர். நேற்று இத்தாலியில் பலியான 168 பேரில் 77 பேர் 70 முதல் 89 வயதுக்கு உட்பட்டவர்கள். 16 பேர் மட்டுமே 50 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள். உலகில் அதிகம் முதியவர்களை கொண்ட நாடாக இத்தாலி இருப்பதால், அந்த நாட்டில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. உயிரிழந்த அனைவரும் கொரோனாவால் மட்டும் இறக்கவில்லை எனவும் அவர்கள் ஏற்கனவே வேறு சில நோய்களால் அவதிப்பட்டு வந்தவர்கள் எனவும் இத்தாலி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் இந்த அளவுக்கு தீவிரமடைவதற்கு அரசின் மெத்தனப்போக்கே காரணம் என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒரு நாள் இத்தாலி மோசமான நிலையில் இருப்பதாகவும், மற்றொரு நாள் கவலைப்படும் அளவுக்கு மோசமான நிலைமை இல்லை எனவும் அரசு தங்களை குழப்புவதாக இத்தாலி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு தழுவிய தனிமைப்படுத்தும் வேலைகளை இத்தாலி துவங்கியுள்ளது.
அத்தியாவசியம் இல்லாமல் யாரும் பயணம் செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்கள் காலை 6 மணி முதல் மாலை ஆறு மணி வரை திறந்திருக்கும். ஆனால் வாடிக்கையாளருக்கான இருக்கைகளின் இடைவெளி குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகளுக்கு ஏப்ரல் 3-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வீட்டிலிருந்தே பணிபுரியுமாறும், இல்லை என்றாலும் விடுமுறை எடுத்துக்கொள்ளுமாறும் இத்தாலி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை கேட்டுக்கொண்டுள்ளன. இதன் காரணமாக இத்தாலி முழுவதும் ஒரு மயான அமைதி நிலவுவதாக மக்கள் கூறுகின்றனர். கொரோனா அச்சத்தோடு, இந்த ஆள் அரவமற்ற மயான அமைதி தங்களுக்கு கூடுதல் மன அழுத்தத்தை அளிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸினால் நான்காயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
ஒரு பக்கம் தனியார் விமானங்கள் சார்ட்டர்ட் பயணங்கள் மூலம் கொரோனாவால் லாபம் ஈட்டின என்றால், இன்னொரு பக்கம் மொத்த விமானத் துறையும் கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ரயான் ஏர் நிறுவனம் ஏப்ரல் 8ஆம் தேதி வரை அனைத்து இத்தாலிக்கு செல்லும் மற்றும் இத்தாலியிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஏப்ரல் 4 வரை அனைத்து இத்தாலி செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது.