வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2020 (22:33 IST)

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏப்ரல் மத்தியில் உச்சத்தை தொடும்: மலேசியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஏப்ரல் மாத மத்தியில் உச்சத்தை தொடக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதே வேளையில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் பலனாக நோய்த் தொற்றியோரின் எண்ணிக்கை குறைவதற்கான தொடக்க நிலை அறிகுறிகள் தென்படுவதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது மலேசியா. சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஒரே நாளில் ஐந்து பேர் பலியானதை அடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது. எனினும் சிகிச்சைக்குப் பின் முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மலேசியாவில் சீராக அதிகரித்து வருகிறது.
"இன்று ஒரே நாளில் புதிதாக 208 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,116ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த 122 பேர் இன்று வீடு திரும்பினர். மலேசியாவில் குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 767ஆக அதிகரித்துள்ளது," என்று மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

கவலைக்கிடமாக உள்ளோரின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் உச்சம் தொடும்

இந்நிலையில் இதுவரை கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றியோரின் எண்ணிக்கை ஏப்ரல் மாத மத்தியில் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கலாம் என்கிறார் மலேசியா, புரூனே மற்றும் சிங்கப்பூருக்கான உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதியான யிங் ரூ லோ.