திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 4 டிசம்பர் 2020 (14:34 IST)

மாடுகளுக்கு கோட்: உத்தரப்பிரதேச பாஜக அரசு உத்தரவு

இன்று இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகள்:

வட இந்தியாவில் நடுங்கும் குளிர்காலம் தொடங்கிவிட்டது. இந்நிலையில், குளிரிலிருந்து பசுக்களை பாதுகாக்க அவற்றுக்கு கோட் வழங்க வேண்டும் என உத்தரப்பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக பல நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியான பாஜகவின் அரசியல் கோஷத்தில் முக்கியப் புள்ளி பசுப் பாதுகாப்பு. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இதில் மிகுந்த ஆர்வம் மிக்கவர்.

அதாவது, இந்துக்களின் புனித விலங்கான பசுக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது தனது அரசின் கடமை என்பது அவரது நிலைப்பாடு.

அந்த வகையில், உத்தரப்பிரதேச அரசு நடத்தும் பசு முகாம்களில் உள்ள பசுக்களை இந்த ஆண்டு குளிர் காலத்தில் இருந்து பாதுகாக்க அவற்றுக்கு மேல் கோட், திரைச் சீலைகள் போன்றவற்றை வழங்க வேண்டும் என மாநில கால்நடை பராமரிப்புத்துறை மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

சணல் பைகளை கொண்டு பசுக்களுக்கான மேல் கோட்டுகள், திரைச்சீலைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுமட்டுமின்றி, அயோத்தி உள்ளிட்ட சில பகுதிகளில் பசுக்களை குளிரிலிருந்து காக்கும் வகையில், நெருப்பு மூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி: மார்ச் முதல் இந்தியாவில் விற்பனை?

கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தினை வரும் மார்ச் முதல் வெளிச்சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.


இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் - அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இறுதிக்கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருந்தின் மீது உலகளவில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து முழு அளவில் பயன்பாட்டிற்கு தயாராகிவிடும் என்று தயாரிப்பு மற்றும் விநியோக உரிமம் பெற்றுள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பல பெரு நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்காக அதிக அளவில் தடுப்பு மருந்தை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக சீரம் கூறியுள்ளது. தடுப்பு மருந்துக்கு இந்திய அரசின் அனுமதி கிடைத்ததும் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் முதல் அதனை வெளிச்சந்தையிலும் விற்பனைக்கு கொண்டுவர சீரம் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
இதனிடையே மூன்றாம் கட்ட சோதனையின் இறுதிப் பகுதியில் இருப்பதால் கோவிஷீல்டு மருந்துக்கு அவசர பயன்பாட்டு அனுமதி தரக்கோரி சீரம் நிறுவனம் இந்திய அரசிடம் முறையிட உள்ளது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.