வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (09:54 IST)

பருவநிலை மாற்றம்: "உலகத்துக்கு கெட்ட சேதி" - ஐபிசிசி அறிக்கை இன்று பிற்பகல் வெளியாகிறது

உலகத்துக்கு கெட்ட சேதியைத் தரப்போகும் பருவநிலை மாற்றம் தொடர்பான மிக முக்கியமான அறிக்கையில் உள்ள விவரங்களை ஐக்கிய நாடுகள் அவை இன்று வெளியிடுகிறது.

IPCC எனப்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான நாடுகளுக்கு இடையேயான குழுவால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. சுமார் 1400 ஆய்வுகளைப் பரிசீலித்து அதன் முடிவுகளை தனது அறிக்கையில் இந்தக் குழு சேர்த்திருக்கிறது.
 
வரவிருக்கும் தசாப்தங்களில் வெப்பமயமாதல் உலகை எவ்வாறு மாற்றும் என்பதற்கான மிக மதிப்பீடாக இது இருக்கும். விஞ்ஞானிகள் உலகத்துக்கு இது மோசமான சேதி என்று கூறுகிறார்கள். ஆயினும் அதில் சில நம்பிக்கைக்கான கூறுகளும் இருக்கின்றன.
 
கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கு நாடுகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய எச்சரிக்கையாக இது இருக்கும் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
 
பருவநிலை மாற்றம் தொடர்பான அறிக்கை கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிசிசியால் கடைசியாக வெளியிடப்பட்டது. அதில் இருந்து உலகம் ஏராளமான அம்சங்களைக் கற்றுக் கொண்டது.
 
சமீபத்திய ஆண்டுகளில், உலகம் வரலாறு காணாத வெப்பநிலை உயர்வைக் கண்டிருக்கிறது. காட்டுத் தீ அதிகரித்திருக்கிறது. வெள்ளத்தால் பேரழிவுகள் நடந்திருக்கின்றன. பருவமழைகள் தவறி வேளாண்மை பாதிக்கப்பட்டிருக்கிறது.
 
இயற்கைக்கு மனிதர்கள் இழைத்திருக்கும் தீங்குகளால் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குச் சரி செய்ய முடியாது என ஐபிசிசி பரிசீலித்திருக்கும் சில ஆய்வுகள் கூறுகின்றன.
 
இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஐபிசிசி அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வெளியிடப்படுகின்றன. வரும் நவம்பரில் பிரிட்டனில் நடக்க இருக்கும் உச்சி மாநாட்டிலும் இந்த அறிக்கை விவாதிக்கப்படும்.
 
COP26 என்ற ஐ.நா.வில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் 196 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சந்தித்து,உலகளாவிய நடவடிக்கைகள் குறித்துப் பேசுவார்கள்.
 
"உலகம் பேரழிவைத் தவிர்ப்பதற்கான நேரம் முடிந்துவிட்டது" என இந்த உச்சிமாநாட்டை முன்னின்று நடத்தும் பிரிட்டன் அமைச்சர் அலோக் சர்மா கூறியுள்ளார்.
 
ஐபிசிசி அறிக்கையில் என்ன எதிர்பார்க்கலாம்?
 
பல சுற்றுச்சூழல் நிபுணர்களின் கருத்துப்படி கடந்த சில ஆண்டுகளில் அறிவியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
 
"எங்கள் மாதிரிகள் சிறப்பாக மேம்பட்டுள்ளன, இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பற்றி எங்களுக்கு நன்கு புரிந்துள்ளது, எதிர்கால வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் மழைப்பொழிவு மாற்றங்களை ஏற்கெனவே இருந்ததைவிட சிறப்பாக கணிக்க முடியும்" ஐபிசிசி அமைப்பின் பார்வையாளர்களில் ஒருவரான ஸ்டீபன் கார்னிலியஸ் கூறுகிறார்.
 
"மற்றொரு மாற்றம் என்னவென்றால், கடந்த சில ஆண்டுகளில் பண்புக்கூறு அறிவியல் வளர்ச்சியடைந்திருக்கிறது. பருவநிலை மாற்றம் மற்றும் தீவிரமான வானிலை நிகழ்வுகளுக்கு இடையே உள்ள பெரிய அளவினா தொடர்பை நாம் புரிந்து கொள்ள முடிகிறது"
 
நெருக்கடியை உருவாக்குவதில் மனிதகுலத்தின் பங்கு பற்றிய கேள்வி பற்றி கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்
 
கடந்த 2013 ஆம் ஆண்டு அறிக்கையில், ஐபிசிசி 1950 களில் இருந்து புவி வெப்பமடைதலுக்கு "மனிதர்களின் ஆதிக்கமே" காரணம் என்று கூறியது.
 
சமீபத்திய அறிக்கையில் உள்ள செய்தி இன்னும் காரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
 
கடல் நீர்மட்டம் உயர்வு, கடல்களில் மனிதர்களின் ஆதிக்கத்தால் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் போன்றவற்றையும் இந்த அறிக்கை ஆராயும்.
 
ஐபிசிசி என்றால் என்ன?
 
1988ல் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. பருவநிலை மாற்றம் பற்றிய மதிப்பீட்டை, அதன் தாக்கத்தை, தீர்வுகளைப் பற்றி 6-7 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசுகளுக்கு அறிக்கை அளிப்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
 
பருவநிலை மாற்றம் மற்றும் அதன் ஆபத்துகள் குறித்த ஆதாரங்கள் அதிகரிக்க அதிகரிக்க இந்த அமைப்பின் அறிக்கைகள் கடுமையாக மாறின.
 
1950ல் இருந்து புவி வெப்பமடைவதற்கு மனிதர்களே முக்கியக் காரணம் என்று 2013ல் வெளியிடப்பட்ட இந்த அமைப்பின் அறிக்கை கூறியது முக்கியத்துவம் பெற்றது. 2015ம் ஆண்டு பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் ஏற்படுவதற்கும் இதுவே அடிப்படையாக அமைந்தது.
 
6-7 ஆண்டுகளுக்கு ஒரு முறை அளிக்கும் வழக்கமான அறிக்கைகள் தவிர பருவநிலை மாற்றம் தொடர்பான குறிப்பான அறிவியல் கேள்விகளைப் பற்றி சிறப்பு அறிக்கைகளையும் இந்த அமைப்பு வழங்கியது.
 
தொழிற் புரட்சிக்கு முந்திய காலத்தை ஒப்பிட புவியின் வெப்ப நிலை 1.5 டிகிரிக்கு மேல் உயரக்கூடாது என்ற மிக முக்கியமான அறிக்கையை 2018ல் வெளியிட்டது ஐபிசிசி. அரசியல் தலைவர்கள் பருவநிலை மாற்றத்துக்கு உரிய முறையில் முகம் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி உலகம் முழுவதும் இளைஞர்கள் வீதிக்கு வருவதற்கு இந்த அறிக்கை மிகமுக்கியமான உந்துவிசையாக இருந்தது.
 
"காரணம், இந்த அறிக்கை எல்லோரைம் ஆச்சரியப்படுத்தி, சிந்திக்கவைத்தது. இது எதிர்காலப் பிரச்னை அல்ல. இப்போதைய பிரச்னை என்ற எண்ணத்தை இந்த அறிக்கை தந்தது" என்கிறார் ஐபிசிசி துணைத் தலைவரும் அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவருமான கோ பாரெட்.
 
ஐபிசிசி வெறும் விஞ்ஞானிகள் அமைப்பா?
 
ஐபிசிசி என்பது வெறும் விஞ்ஞானிகள் அமைப்பு என்று பலரும் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. 195 நாடுகளின் பிரதிதிநிகள் இதில் இருக்கிறார்கள். பல கல்விப் புல ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து இவர்கள் அறிக்கைகளை கோரிப் பெறுகிறார்கள் என்கிறார் ரிச்சர்ட் பிளாக்.
 
ஏதோ சில விஞ்ஞானிகள் எழுதுகிற அறிக்கை அல்ல ஐபிசிசி அறிக்கை. மாறாக இது அரசுகள் கோரிப் பெறுகிற அறிக்கை. அரசுகளுக்கு உரிமையான அறிக்கை. இது மிகவும் தனித்துவமானது என்கிறார் அவர்.
 
ஐபிசிசி எப்படி செயல்படுகிறது?
 
ஐபிசிசி-க்கு மிகப் பெரிய செல்வாக்கு இருக்கிறது. ஆனால், இது தாமாக ஆராய்ச்சியெல்லாம் செய்வதில்லை.
 
மூன்று வெவ்வேறு பிரிவுகளில் ஐபிசிசி அறிக்கை தயாரிக்கிறது. முதல் அறிக்கை இயல் அறிவியல் அறிக்கை. இரண்டாவது தாக்கம் தொடர்பான அறிக்கை. மூன்றாவது அறிக்கை, தீர்வுகள் தொடர்பான அறிக்கை. தாக்கம், தீர்வுகள் தொடர்பான அறிக்கைகள் அடுத்த ஆண்டு வெளியாகும். மூன்று அறிக்கைகளையும் இணைத்து அளிக்கப்படும் அறிக்கையும் அடுத்த ஆண்டு வெளியாகும்.
 
ஆகஸ்ட்டில் வெளியாகப்போகும் இயல் அறிவியல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் 200 விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் ஏற்கெனவே எழுதப்பட்டு, கடந்த நான்கு ஆண்டுகளில் புகழ்பெற்ற அறிவியல் சஞ்சிகைகளில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்து அதில் இருந்து அறிக்கையை உருவாக்குகிறார்கள்.
 
வரைவு அறிக்கை குறித்து விவாதிக்கலாம், அரசுகள் கருத்து கூறலாம். இதைப் போல இந்த வரைவு அறிக்கை தொடர்பாக 75 ஆயிரம் கருத்துகள் வந்தன. அடுத்த இரண்டு வாரங்களில் இந்த கருத்துகளை எல்லாம் கணக்கில் கொண்டு இறுதி அறிக்கை 40 பக்கங்களில் தயாராகும்.
 
தொழிற்புரட்சிக்கு முந்திய நிலையை ஒப்பிடும்போது புவியின் சராசரி வெப்ப நிலை 1.5 டிகிரியை தாண்டக்கூடாது அது மிக முக்கியம் என்று ஐபிசிசி வாதிட்டுவருகிறது.
 
கடந்த ஆண்டு புவியின் சராசரி வெப்பநிலை 1.2 டிகிரி அதிகமாக இருந்தது. அதற்கு ஏற்பவே, இந்த ஆண்டு தீவிர இயற்கைப் பேரிடர்கள் பதிவாகி வருகின்றன. இந்நிலையில், இந்த அமைப்பின் அறிக்கை கடுமையான உண்மைகளைப் பேசுவதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அது அரசுகளுக்கு உண்மையில் களத்தில் செயல்படவேண்டியதன் அவசியம் குறித்த அழுத்தத்தை உண்டாக்கும்.