வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 14 பிப்ரவரி 2016 (19:21 IST)

ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கிறிஸ்தவ திருச்சபை தலைவர்கள்

சுமார் ஆயிரம் ஆண்டுகள் பிளவுபட்டிருந்த, கிறிஸ்த மதத்தின் மேலைத்தேய மற்றும் கீழைத்தேய கிளைகளின் தலைவர்களின் சரித்திர முக்கியத்தும் வாய்ந்த சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
 

 
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிராஸிஸ், மற்றும் ரஷ்யாவின் மிகப்பழைய ஆர்த்தாடக்ஸ் (பழமைவாத கிறிஸ்தவ பிரிவு) திருச்சபையின் தலைவரான பாட்ரியார்க் கிரில் ஆகியோருக்கிடையே, முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறப்படும் இந்த சந்திப்பு கியுபாவில் இடம்பெற்றது.
 
ஹவானா விமான நிலையத்தில், இவர்களிடையோன சந்திப்பு இரண்டு மணி நேரம் நீடித்தது. இச்சந்திப்பின் ஆரம்பத்தில், இரண்டு தலைவர்களும் ஆரத்தழுவி முத்தமிட்டுக் கொண்டனர்.
 
மேற்கத்தேய மற்றும் கீழைத்தேய கிறிஸ்தவ கிளைகள், 11 ஆம் நூற்றாண்டில் பிரிந்துபோனது முதல், போப்பிற்கும் ரஷ்ய திருச்சபையின் தலைவர் ஒருவருக்கும் இடையே நடைபெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும்.
 
மத்திய கிழக்கு நாடுகளில் இன்னல்களை எதிர்கொள்ளும் கிறிஸ்தவர்களை பாதுகாக்குமாறு, இரண்டு தலைவர்களும் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டனர்.
 
உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களையும் ஒன்றுபடுமாறும், இவர்கள் அறைகூவலும் விடுத்துள்ளனர்.
 
போப் பிரான்ஸிஸை சகோதரன் எனக் கூறிய ரஷ்யத் திருச்சபையின் தலைவர் பாட்ரியார்க் கிரில், போப்பை சந்தித்தது பெரும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
 
கலந்துரையாடல்கள் வெளிப்படையானதும் சகோதரத்துவமானதாகவும் இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
சகோதரத்துவத்துடன் இப்பேச்சுக்கள் நடைபெற்றதாக போப் பிரான்சிஸ் தெரிவித்தார். அனைவரும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஆயர்களே எனவும் கூறினார்.