1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 5 மார்ச் 2020 (21:59 IST)

கொரோனா வைரஸ் பரவும் முன்பே எச்சரித்த மருத்துவரை மரணத்துக்கு பின் கௌரவித்த சீனா

கொரோனா வைரஸ் பரவும் முன்பே எச்சரித்த மருத்துவரை மரணத்துக்கு பின் கௌரவித்த சீனா
கொரோனா வைரஸ் பரவும் முன்பே அது குறித்து எச்சரித்த மருத்துவர் லீ வெண்லியாங், அவரது மரணத்துக்கு பிறகு சீன அரசால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
 
சீன அரசால் கௌரவிக்கப்பட்ட, கொரோனாவுக்கு தடுப்பு நடவடிக்கைகளின்போது மரணமடைந்த 34 மருத்துவ ஊழியர்களில் லீயும் ஒருவர் என்று சீன அரசின் குளோபல் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தபோது அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். இது சீன மக்களை அரசு மீது கோபமடைய வைத்தது.
 
யார் இந்த லீ வெண்லியாங்?
 
லீ வெண்லியாங் என்ற அந்த கண் மருத்துவர் வுஹான் சென்ட்ரல் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். சென்ற டிசம்பர் மாதமே அவர் சக மருத்துவர்களிடம் புதிய வைரஸ் பரவல் குறித்த அச்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
 
ஆனால், இவ்வாறு போலியான தகவல்களை பகிர்வதை நிறுத்தும்படி அவரை விசாரணை செய்த சீன போலீஸார் கூறியுள்ளனர்.
 
சீன மக்களின் கோபத்தை தூண்டிய மருத்துவரின் மரணம் - சமாளிக்க முயலும் அரசு
கொரோனா வைரஸ் குறித்து முன்பே எச்சரித்த மருத்துவர் மரணம்
பின்னர் வுஹான் நகரத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில், ஜனவரி மாத தொடக்கத்தில் தீவிரமாக இறங்கிய சீன அதிகாரிகள் அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.
 
சீன சமூக ஊடகமான வெய்போவில் இதுகுறித்த தகவலை அவர் காணொளியாக வெளியிட்டிருந்தார்.
 
"அனைவருக்கும் வணக்கம், நான் கண் மருத்துவர் லீ, வுஹான் சென்ட்ரல் மருத்துவமனையில் பணியாற்றுகிறேன்," என தொடங்கும் அந்த பதிவை மருத்துவமனை படுக்கையில் இருந்தபடி பகிர்ந்திருக்கிறார்.
 
டிசம்பர் இறுதியில் வைரஸால் தாக்கப்பட்ட பல நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். இது சார்ஸ் வைரஸாக இருக்கலாம் என சந்தேகித்து இருக்கிறார் லீ. சார்ஸ் நோயும் ஒரு வகை கொரோனா வைரஸால் பரவக்கூடியதே. ஆனால், இது புதிய வகை கொரோனா வைரஸ் (2019 - nCoV) என அவருக்கு தெரியவில்லை.
 
2003இல் உலக நாடுகளில் பரவிய சார்ஸ் நோயால் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர்.
 
உலக நாடுகளில் என்ன நிலவரம்?
 
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் பத்து நாட்களுக்கு விடுமுறை அளித்துள்ளது இத்தாலி.
 
அனைத்து விளையாட்டுகளும், ஏன் கால்பந்து கூட உள்விளையாட்டு அரங்கத்தில் மட்டுமே விளையாட வேண்டுமென இத்தாலி வலியுறுத்தி உள்ளது.
 
இத்தாலியில் மட்டும் 107 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
 
ஐரோப்பிய ஒன்றியத்திலேயே அதிகமான பலி எண்ணிக்கை இத்தாலியில்தான் பதிவாகி உள்ளது.
 
இத்தாலியின் வடக்கு பகுதியில் மட்டும் 3000 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 
இப்படியான சூழலில், நேற்று இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு டெல்லி தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதுரி, "காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கொரோனா வைரஸ் பாதிப்பு நிறைந்த இத்தாலிக்குப் போய்விட்டு வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டதா என்று தெரியவில்லை. அதை அவர்தான் சொல்ல வேண்டும்," என்று கூறினார்.
 
ஐரோப்பிய நாடுகள்
 
கொரோனா வைரஸ் தொற்று உண்டாக்கும் பாதிப்புகள் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகிறது.
 
கொரோனா வைரஸ் தொற்றால் பிரான்ஸ் நாட்டில் இறந்துள்ளவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
 
நெதர்லாந்திலும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 38இல் இருந்து 82ஆக உயர்ந்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
 
பிரிட்டனில் கைகளை தூய்மையாக வைத்திருக்க உதவும் சானிடைசர் ஜெல் பாட்டில்களை ஒரு நாளுக்கு ஒரு வாடிக்கையாளர் இரண்டை மட்டுமே வாங்க முடியும் என்று சில சில்லறை விற்பனை நிறுவனங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளன.
 
கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை அமெரிக்காவில் 11 பேர் உயிழந்துள்ள நிலையில், தனது மாகாணத்தில்  முதல் மரணம் பதிவாகியுள்ள சூழலில், கலிஃபோர்னியா மாகாண அரசு அவசரநிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.