1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : புதன், 20 செப்டம்பர் 2023 (20:50 IST)

சந்திரயான்-3: விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டும் மீண்டும் இயங்குமா? இஸ்ரோ திட்டம் என்ன?

chandrayaan 3
செப்டம்பர் 22 ஆம் தேதி சூரிய உதயத்துக்காக இந்தியா காத்துக்கொண்டிருக்கிறது. சூரிய உதயம் என்றால் பூமியில் அல்ல- நிலாவில் சூரிய உதயம் தொடர்பான எதிர்பார்ப்பு அது.
 
நிலாவில் உறங்கிக் கொண்டிருக்கும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை அந்த நாளில் எழுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) முயற்சி மேற்கொள்ளும்.
 
விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் பத்திரமாக தரையிறங்கியது. விக்ரம் லேண்டர் மற்றும் அதில் உள்ள பிரக்யான் ரோவர் ஆகியவை 14 நாட்கள் ஆயுட்காலம் கொண்டவை.
 
சந்திரனின் மேற்பரப்பில் ஒரு நாள் (சந்திர நாள்) என்பது பூமியில் சுமார் 28 நாட்களுக்கு சமம். அதாவது சந்திரனில் சுமார் 14 நாட்கள் பகல் மற்றும் 14 நாட்கள் இரவாக இருக்கும்.
 
ஆகஸ்ட் 23 அன்று, சந்திரனில் விடியத் தொடங்கியது. அதனால்தான் லேண்டரை இஸ்ரோ அன்று தரையிறக்கியது. செப்டம்பர் 4 ஆம் தேதி நிலவில் பகல் முடிவடைந்ததால், லேண்டர் மற்றும் ரோவரை ஸ்லீப் மோடுக்கு இஸ்ரோ மாற்றியது.
 
ரோவர் செயல்பட மின்சாரம் தேவை. சந்திரயான் லேண்டர் மற்றும் ரோவரில் உள்ள சோலார் பேனல்கள் சூரிய ஒளியால் இயங்குகின்றன. ஆனால் இரவு துவங்கியதால் அவற்றால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிந்திருக்காது.
 
இரவில் நிலவின் வெப்பநிலை வெகுவாகக் குறைகிறது. அப்போது மைனஸ் 130 டிகிரியாக வெப்பம் குறையும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (நாசா) தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 253 டிகிரியை எட்டும்.
 
இத்தகைய குறைந்த வெப்பநிலையில், ரோவர் மற்றும் லேண்டர்கள் இரண்டுமே உறைந்துவிடும். சூரியன் மீண்டும் சந்திரனின் மேல் உதிக்கும் வரை அவை அப்படியே இருக்கும். செப்டம்பர் 22 ஆம் தேதியன்று மீண்டும் அங்கே சூரிய ஒளி படரும். எனவே அவற்றை மீண்டும் வேலை செய்யவைப்பது சவால் மிகுந்த பணியாக இருக்கும்.
 
"இரவில், சந்திரனில் வெப்பநிலை மைனஸ் 200 டிகிரிக்கு கீழே குறையும். இத்தகைய சூழலில் பேட்டரிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் சேதமடையாது என்று உறுதியாக கூற முடியாது. ஆனால் நாங்கள் சில சோதனைகளை நடத்தினோம். எனவே விக்ரமும், பிரக்யானும் கடுமையான வானிலையில் இருந்து தப்பித்து மீண்டும் இயங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஊடகங்களிடம் பேசிய போது தெரிவித்தார்.
 
சூரியன் உதிக்கும் போது விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் மீண்டும் செயல்படுமா என்பதை அறிய இஸ்ரோ மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளது.
 
நிலவில் ஸ்லீப் மோடில் இருக்கும் ரோவரை செப்டம்பர் 22ம் தேதி செயல்படுத்த இஸ்ரோ முயற்சித்து வருகிறது. அதன் பேட்டரியில் சார்ஜ் முழுமையாக இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. லேண்டர் மற்றும் ரோவரின் ரிசீவர்கள் நல்ல இயக்கத்தில் உள்ளன.
 
ஸ்லீப் மோடியில் உள்ள லேண்டரும், ரோவரும் மீண்டும் இயங்கினால் நிலவு குறித்த கூடுதல் தகவல்களை சேகரித்து, ஏற்கெனவே நடந்துகொண்டிருந்ததைப் போலவே, அவற்றை பூமிக்கு அனுப்பும் பணி தொடரும். அப்படியில்லை என்றால்,'இந்தியாவின் தூதுவராக' அவை இரண்டும் நிரந்தரமாக அங்கேயே இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், அவை மீண்டும் செயல்படாவிட்டால் அவற்றின் நிலை என்னவாகும், எதிர்காலத்தில் மீண்டும் அவை செயல்படும் வாய்ப்பு இருக்கிறதா, நிலவுக்கு செல்லும் பிற நாடுகளின் ரோவர்கள் 'பிரக்யானிடம்' இருந்து ஏதேனும் ரகசிய தகவல்களை சேகரிக்க முடியுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
 
இவற்றுக்கான விடைகளை அறிய ஆந்திரப் பல்கலைக்கழக விண்வெளி இயற்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் பி. ஸ்ரீநிவாஸிடம் பிபிசி பேசியது.
 
இஸ்ரோ திட்டமான 'ஜியோஸ்பியர் - பயோஸ்பியர்' திட்டத்திற்காக ஆந்திரா பல்கலைக்கழகம் சார்பில் பி.ஸ்ரீனிவாஸ் ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். சந்திரயான்-3 இன் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய இஸ்ரோ அணுகிய இயற்பியல் நிபுணர்கள் குழுவில் ஸ்ரீனிவாஸும் ஒருவர். அவர் பிபிசியிடம் பேசிய போது பின்வரும் பதில்களை வழங்கினார்.
 
லேண்டரும், ரோவரும் தயாரிக்கப்பட்ட போதே 14 நாட்கள் ஆயுட்காலத்துடன் தயாரிக்கப்பட்டன.
 
இது போன்ற ரோவர்களை எந்த ஒரு விண்வெளி ஆய்வு நிலையம் அனுப்பினாலும், அது 'ஒரு வழி பயணமாகவே' இருக்கும்.
 
அவற்றை மீண்டும் பூமிக்குக் கொண்டு வரும் முயற்சியின் போது, அதற்கான செலவில் மற்றொரு விண்கலத்தைத் தயாரித்து விண்ணுக்கு ஏவி விட முடியும்.
 
 
விண்வெளி ஆய்வில் கிடைக்கும் தகவல்களை அனைத்து நாடுகளும், பிற அனைத்து நாடுகளுடனும் பகிர்ந்துகொள்கின்றன.
 
செப்டம்பர் 22 அன்று சூரிய ஒளி மீண்டும் வரும்போது, ரோவரும், லேண்டரும் வேலை செய்யவில்லை என்றால், அவை எப்போதும் செயல்படாது.
 
ஏனெனில் அவை தயாரிக்கப்பட்ட போது, ​​அவற்றின் ஆயுட்காலம் 14 நாட்களுக்கு வடிவமைக்கப்பட்டது.
 
செயல்படாத விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரால் நிலவின் மேற்பரப்பில் கழிவுகளாக மாறமுடியுமே தவிர வேறு எந்தப் பயனும் இல்லை.
 
ஒருவேளை லேண்டரும், ரோவரும் செயல்படாமல் போனால் அவற்றை மீண்டும் செயல்படுத்த முடியாது.
 
எதிர்காலத்தில் மீண்டும் இயங்கும் வாய்ப்புகளே இல்லையா?
அவற்றை மீண்டும் இயக்க முடியாது. அது குறித்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், அத்தகைய தொழில்நுட்பம் இதுவரை உருவாக்கப்படவில்லை.
 
அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் மற்றொரு ரோவர் அல்லது ஏதேனும் ஒரு யூனிட்டை அனுப்புவதன் மூலம் ஏற்கனவே உள்ள ரோவர்களைச் செயல்படுத்த நடத்தப்படும் சோதனைகள் இன்னும் கோட்பாட்டு அளவிலேயே உள்ளன.
 
அப்படி முடியுமென்றால், ஒரு வேளை நாம் ஏற்கெனவே அனுப்பிய ரோவர் பழுதடைந்திருந்தாலும், அதை பழுது பார்த்து, மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால் அந்த நிலையை நாம் எட்ட இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்.
 
சந்திரனின் மேற்பரப்பில் வேலை செய்யாத ரோவர்கள் மற்றும் லேண்டர்கள் சந்திரனின் குப்பைகளாகக் கணக்கிடப்படுகின்றன.
 
அவை அங்கு தொடர்ந்து செயல்படுவது மிகவும் கடினம். வேலை செய்யாதவற்றிடமிருந்து எந்த தகவலையும் சேகரிக்க முடியாது.
 
ஏனென்றால், நிலவில் ஏதாவது ஒன்று ஒருமுறை செயலிழந்தால், அது நிரந்தரமாகச் செயலிழந்துவிடும்.
 
சந்திரயான் - 3: தூங்கும் விக்ரம் லேண்டர் உயிர்த்தெழப் போவது எப்போது?
 
விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்படும் சாதனங்கள் செயல்படாமல் போகும் போது, அவை வெறும் குப்பைகளாக மாறுகின்றன.
 
வெளிநாட்டு ரோவர்கள் பிரக்யானிடம் தகவல்களை சேகரிக்க முடியுமா?
எதிர்காலத்தில் வேறு எந்த நாடும் நிலவில் சோதனைக்காக லேண்டர்கள் மற்றும் ரோவர்களை அனுப்புகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த வழியில் செல்லும் வெளிநாட்டு ரோவர்களுக்கு தற்போது இருக்கும் பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் ஆகியவற்றால் எந்த தடையும் இருக்காது. மேலும், அவற்றால் பிரக்யான் ரோவரை பயன்படுத்தவும் முடியாது.
 
நிலவுக்குச் சென்ற வெளிநாட்டு ரோவர்களும் பிற யூனிட்டுகளும் தற்போது நிலவின் மேற்பரப்பில் இருக்கும் பிரக்யான் ரோவரிடமிருந்து ரகசிய தகவல்களை சேகரிக்க வாய்ப்பில்லை.
 
ஏனென்றால், எந்தவொரு நாடும் தங்கள் நாட்டின் சார்பாக ரோவர் மற்றும் பிற யூனிட்டுகளை விண்வெளிக்கு அனுப்பும் போது, ​​அந்நாடுகள் தங்கள் விவரங்களை கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுடனும் பகிர்ந்து கொள்கின்றன. எனவே, அவற்றிடம் இருந்து புதிய தகவல்கள் எவையும் சேகரிக்கப்பட வாய்ப்பில்லை.
 
ரோவர்கள் சேகரித்து நமக்குத் திருப்பி அனுப்பும் தகவல்கள் மதிப்புமிக்க தகவல்களாக இருக்கும். ஆனால் அந்த சாதனங்களில் எந்த ரகசியமும் இல்லை. இது போன்ற சாதனங்களை உற்பத்தி செய்யும் போதே அவற்றின் வாழ்நாள் நிர்ணயிக்கப்படுவதால், பின்னர் அவற்றிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடியாது.