1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (13:19 IST)

கனடா தேர்தல் 'சூதாட்டத்தில்' ட்ரூடோவுக்கு பின்னடைவு; பிரதமர் பதவிக்கு ஆபத்தில்லை

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
 
கனடாவில் கடந்த இரண்டாண்டுகளில் நடக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும்.
 
கடந்த தேர்தலில் பெரும்பான்மை இல்லாததால், ஜஸ்டின் ட்ரூடோவால் முக்கியச் சட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனது. அதனால் பெரும்பான்மை பெரும் நோக்கத்துடன், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்னரே தேர்தலை நடத்த உத்தரவிட்டார். ஆனால் இந்த முறையும் அவர் நினைத்தபடி பெரும்பான்மை கிடைக்கவில்லை.
 
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 338 இடங்களில் பெரும்பான்மை பெற 170 இடங்கள் தேவைப்படும். 2019இல் நடந்த தேர்தலில் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 155 இடங்களே கிடைத்தன. இந்த முறை கூடுதலாக இரண்டு இடங்களில் முன்னிலையில் இருப்பதாக ஏபி செய்தி நிறுவனம் கூறியுள்ளது. எனினும் பெரும்பான்மைக்கு இது போதுமானதல்ல.
முக்கிய எதிர்க் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்திய வம்சாவளியைச் ஜக்மீத் சிங் தலைவராக இருக்கும் நியூ டெமாக்ரெட் கட்சி 27 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
 
மேலும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும்போது தேவையற்ற வகையில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதாக ஜஸ்டின் ட்ரூடோ மீது எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன.
 
மூன்றாவது முறையாகப் பிரதமராகும் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவியுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
 
"கடந்த காலத்தின் நாம் இணைந்து கடந்து வந்த கறுப்பு நாள்களை மறந்துவிடக்கூடாது. இனி வருங்காலத்தை இணைந்து கட்டமைக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
 
"அரசுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெளிவான பாதையை மக்கள் காட்டியிருக்கிறார்கள்" என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.
 
தெளிவான முன்னணி நிலவரங்கள் வெளியிடப்பட்டிருந்தாலும், தபால் வாக்குகளை உள்ளடக்கிய முழுமையான அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாவதற்கு இன்னும் சில நாள்கள் ஆகும் என எதிர்பார்கப்படுகிறது.
 
கூடுதல் இடங்களைப் பெறும் நியூ டெமாக்ரட்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத்சிங் தலைவராக இருக்கும் நியூ டெமாக்ரட் கட்சி இந்த முறை குறைந்தது 27 இடங்களில் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
2011-ஆம் ஆண்டு அதிகபட்சமாக 103 இடங்களை இந்தக் கட்சி பெற்றிருந்தது. ஆனால் அதன் பிறகு அடுத்தடுத்த தேர்தல்களில் இடங்களைப் பறிகொடுத்து வந்தது. 2019-ஆம் ஆண்டு கடைசியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு 24 இடங்கள் கிடைத்தன.
 
தற்போது நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் 27 இடங்களில் நியூ டெமாக்ரட் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அந்தக்கட்சி ஏறுமுகம் கண்டிருக்கிறது.
 
"உங்களுக்காகப் போராடுவதை நிறுத்திக் கொள்ள மாட்டோம்" என்று முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், ஜக்மீத் சிங் உரையாற்றினார். பணக்காரர்களுக்கு கூடுதல் வரி உள்ளிட்ட இடதுசாரி கொள்கைகளை நியூ டெமாக்ரட் கட்சி வலியுறுத்தி வருகிறது.
 
தேர்தல் பரப்புரையில் கொரோனா பாதிப்பு முக்கிய அம்சமாகப் பேசப்பட்டது. பெருந்தொற்று ஏற்பட்டிருக்கும் காலத்தில் தேர்தல் நடத்துவதற்கு அழைப்பு விடுத்ததற்காக ட்ரூடோவை எதிர்க் கட்சிகள் விமர்சித்தன.
 
கொரோனாவால் கனடாவில் 27 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கின்றனர். எனினும் அதிக அளவில் கொரோனா தடுப்பூசி போட்ட நாடுகளின் வரிசையிலும் கனடா இடம்பிடித்திருக்கிறது.
 
கனடாவில் இப்போது நடந்திருக்கும் தேர்தல் குறித்து அமெரிக்க, ஜரோப்பிய நாடுகள் பெரிய அளவில் அக்கறை காட்டாது எனத் தெரிகிறது. இருப்பினும் சர்வதேச அளவில் தாக்கம் இருக்காது எனக் கூறுவதற்கில்லை என்கிறார் பிபிசி செய்தியாளர் ஜெசிக்கா மர்பி.
 
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் அண்மையில் செய்து கொண்டிருக்கும் ஆக்கஸ் உடன்பாட்டில் சேர வேண்டும் கன்சர்வேட்டிவ் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.
 
அதே நேரத்தில் ஆசிய பசிஃபிக் பிராந்தியத்தில் ஆழமான வர்த்தக, பொருளாதார, பாதுகாப்பு உடன்பாடுகளை மேற்கொள்ள ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி உறுதியளித்திருந்தது.