வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 22 மார்ச் 2021 (13:09 IST)

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சிஏஏ உடனடி அமல் - தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதிகள்

இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் இன்று (22.03.2021) திங்கட்கிழமை வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

மேற்கு வங்கத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி அதன் தேர்தல் அறிக்கையை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டது. அதன் அம்சங்களை விளக்கிப்பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா `சங்கல்ப பத்திரா` என்கிற பெயரிலான பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசினார். அதில் பாஜக ஆட்சிக்கு வந்த உடனேயே சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் என கூறியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பெண்கள் திருமணத்துக்கு ரூ. 1 லட்சம், பெண்களுக்கு முதுகலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி, சில சாதிகளை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது, வடக்கு வங்கம், ஜங்கல் மஹால், சுந்தர்பன் ஆகிய பகுதிகளில் மூன்று புதிய எய்ம்ஸ் மருத்துவமனை என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது போக நோபல் பரிசுக்கு இணையாக தாகூர் பரிசு, ஆஸ்கர் விருதுக்கு இனையாக சத்யஜித் ரே விருது போன்றவைகள் வழங்கப்படும். கொல்கத்தா நகரம் யுனெஸ்கோவின் பாரம்பரிய நகரம் என்கிற அடையாளத்தைப் பெற 500 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதரவு கேட்டு மேற்கு வங்கத்தில் குடியேறிய அகதிகள் 1970-ம் ஆண்டு முதல் வாழ்ந்து வருகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் சிஏஏ சட்டத்தை முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அமல்படுத்தி அவர்களுக்கு குடியுரிமையை வழங்குவோம் எனக் கூறியிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

அதோடு ஒரு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு, அவர்கள்கு குடியுரிமை பெற்ற பின், அவர்களுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். ஊடுருவலை முழுமையாகத் தடுப்போம் எனவும் அமித் ஷா கூறியுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மூன்றாவது நாளாக 1000-ஐ தாண்டிய தினசரி பாதிப்பு : தமிழகத்தில் ஒரேநாளில் 1,289 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தொடா்ந்து மூன்றாவது நாளாக தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, 1000-ஐ தாண்டியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலை குறிப்பிட்டுள்ள அந்த நாளிதழ், கடந்த 24 மணி நேரத்தில் 75,258 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் புதிதாக 1,289 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,66,982ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 668 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8,46,480-ஆக உள்ளது என தெரிவித்துள்ளது.

தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 7,903 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே, தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 9 போ் பலியானதை அடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,599-ஆக உயா்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 466 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத் துறையின் தரவுகள் கூறுவதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

என் தலையில் மமதாஜி மிதிக்கலாம்; வங்காள மக்களின் கனவை மிதிக்க விடமாட்டேன்: பிரதமர் மோதி

294 இடங்களை கொண்ட மேற்கு வங்க சட்டசபைக்கு வரும் 27-ம் தேதி முதல் அடுத்த மாதம் 29-ம் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடக்கவிருக்கிறது. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்றன.

மேற்கு வங்காளத்தின் பாங்குராவில் நடைபெற்ற தேர்தல் பொது கூட்டத்தில் கலந்து கொண்டார் பிரதமர் நரேந்திர மோதி. பிரதமரின் வருகையையொட்டி மேற்கு வங்காளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

பிரதமர் மோதி கூட்டத்தினரின் முன் உரையாற்றிய போது, என்னால் பார்க்க முடிந்த வரை மக்களை மட்டுமே காண முடிகிறது. கடந்த 10 ஆண்டுகளாக வெற்று அறிவிப்புகளையே தீதி வழங்கியுள்ளார். வங்காள தெருக்களில் எனது தலை மீது தீதி கால் வைத்து கால்பந்து விளையாடுவது போன்று அவருடைய தொண்டர்கள் தெருக்களில் படங்களை வரைகின்றனர்.

தீதி, வங்காளத்தின் கலாசாரம் மற்றும் மரபுகளை நீங்கள் ஏன் புண்படுத்துகிறீர்கள்? மம்தாஜி, நீங்கள் விரும்பினால் என் தலையில் மிதிக்கலாம். ஆனால் வங்காளத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் கனவை மிதிக்க உங்களை நான் விடமாட்டேன் என பிரதமர் மோதி பேசியுள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகி உள்ளது.