வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: ஞாயிறு, 14 டிசம்பர் 2014 (19:59 IST)

நீக்கப்பட்ட ரகசிய ஆவணங்களை கேட்கிறது பிரிட்டன் நாடாளுமன்றம்

அமெரிக்க உளவு அமைப்பால் செய்யப்பட்ட சித்ரவதைகள் தொடர்பான ஆவணங்களில், ஐக்கிய ராஜ்ஜியத்தின் பங்கு பற்றி குறிப்பிடப்பட்டுள்ள ரகசிய ஆவணங்களை அமெரிக்கா தமக்கு அளிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றக் குழு கோரவுள்ளது.



அமெரிக்காவின் மீது 2001ஆம் ஆண்டு செப்டம்பர் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்நாட்டின் புலனாய்வு அமைப்பான சி ஐ ஏ, அல் குவைதா சந்தேக நபர்களை மிகவும் கொடூரமாக சித்ரவதை செய்ததாக அமெரிக்க செனட் அறிக்கை கூறியுள்ளது.
 
தேசியப் பாதுகாப்புக் காரணங்களால், தாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, சில தகவல்கள் அந்த அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டதாக பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
அதே நேரம் கைதிகள் தவறாக நடத்தப்பட்டமை தொடர்பில் பிரிட்டனின் ஈடுபாடு குறித்து ஏதும் அதில் நீக்கப்படவில்லை என்றும் பிரதமர் அலுவலகம் கூறுகிறது.
 
பிரிட்டனின் நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினர்களடங்கிய, பாதுகாப்பு மற்றும் உளவு நிறுவனங்களுக்கான குழு, 2001ஆம் ஆண்டு செப்டம்பர் தாக்குதலுக்குப் பிறகு கைதிகள் நடத்தப்பட்ட விதம் குறித்து ஆராய்ந்து வருகிறது.
 
இது குறித்து அமெரிக்க செனட்டில் அளிக்கப்பட்ட அறிக்கையில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளில், ஐக்கிய ராஜ்ஜியத்தின் பங்கு பற்றி ஏதேனும் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காக நீக்கப்பட்ட பகுதிகளை அளிக்குமாறு அமெரிக்காவிடம் கேட்கப்போவதாக, பாதுகாப்பு மற்றும் புலனாய்வு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவர் மால்கம் ரிவ்கைண்ட் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
சித்ரவதைகள் நடக்கும் சமயத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகள் இருந்திருந்தால், சித்ரவதை செய்த குற்றத்திற்கு அவர்களும் உடந்தையாக இருந்ததாகத்தான் கருத வேண்டும் என்றும் மால்கம் ரிவ்கைண்ட் மேலும் தெரிவித்தார்.
 
இதனிடையே, சித்ரவதை குறித்து தங்களுக்குத் தெரிந்த தகவல்களை முன்னாள் பிரதமர் டோனி பிளேரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக் ஸ்டிராவும் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் மைக்கெல் பாலன் கேட்டுள்ளார்.
 
இது குறித்த விசாரணைகளில் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாய்த் தெரிவித்துள்ள ஜாக் ஸ்டிரா, சித்ரவதை முறைகள் பயனற்றவை என்றும் அதை தான் ஒருபோதும ஏற்றுக் கொண்டதில்லை என்றும் தெரிவித்துள்ளார்,