வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2020 (14:25 IST)

பிரிட்டன் - ஏர்டெல் குழுமம் இணைந்து செலுத்திய 36 செயற்கை கோள்கள்: அதிவேக இணைய சேவைக்கு உதவும்

ஒன்வெப் நிறுவனம் தன் 36 செயற்கைக் கோள்களை, சோயுஸ் விண்கலம் மூலம், கடந்த டிசம்பர் 18 வெள்ளிக்கிழமையன்று விண்ணில் ஏவியது.

இந்த 36 செயற்கைக் கோள்களும், ரஷ்யாவில் இருக்கும் வோஸ்டாச்னி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டன.

ஒன்வெப் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 648 செயற்கைக் கோள்களை ஏவ திட்டம் வைத்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஏவப்பட்ட 36 செயற்கைக்கோள்களுடன் சேர்த்து, மொத்தம் 110 செயற்கைக் கோள்களை இதுவரை விண்ணில் ஏவி இருக்கிறது இந்த நிறுவனம்.

இது எல்லாமே தாழ் புவி வட்டப்பாதை (Lower Earth Orbit) செயற்கைக் கோள்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயற்கைக்கோள்களின் உதவியுடன், உலக நாடுகளுக்கு அதிவேக இன்டர்நெட் சேவையைக் கொடுப்பது தான் இந்த நிறுவனத்தின் இலக்கு.

2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் தனது சேவையை உலக நாடுகளுக்குத் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்தியாவுக்கு 2022ஆம் ஆண்டு மத்தியில் இருந்து அதிவேக இன்டர்நெட் கிடைக்கலாம் என்றும் ஒன்வெப் கூறியிருக்கிறது.

ஒன்வெப் நிறுவனம், உலக அளவில் முதன்மை தொலைத்தொடர்பு அலைக்கற்றை உரிமைகளை (Global Priority Spectrum) பெற்று இருக்கிறது.

இந்த நிறுவனத்தை இந்தியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி (ஏர்டெல்) குழுமம், பிரிட்டன் அரசுடன் இணைந்து நடத்திக் கொண்டிருக்கிறது.

பார்தி (ஏர்டெல்) குழும நிறுவனங்களில், பார்தி குளோபல் என்கிற நிறுவனமும் ஒன்று. தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம் தான் இந்த நிறுவனத்துக்கு முதன்மையான தொழில். இந்த ஒன்வெப் நிறுவனம் சமீபத்தில் திவாலாகும் நிலையில் தத்தளித்தது.

அப்போது தான், பார்தி குளோபல் மற்றும் பிரிட்டன் அரசு இணைந்து ஒன்வெப் நிறுவனத்தை எடுத்து நடத்த முன்வந்தன. அதன் விளைவாக ஒன்வெப் திவாலாகாமல் தப்பித்தது.

தற்போது ஒன்வெப் நிறுவனத்தின் செயல் தலைவராக சுனில் மித்தல் பதவியேற்று வழிநடத்தி வருகிறார். இவர் தான் பார்தி குழுமத்தின் தலைவராகவும் இருக்கிறார்.