வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 5 மார்ச் 2018 (17:18 IST)

எப்படி பா.ஜ.க-வால் தொடர்ந்து வெல்ல முடிகிறது? - விடை சொல்லும் புத்தகம்

எப்படி பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வெற்றி பெறுகிறது அல்லது பெரும்பான்மை இல்லாமலும் ஆட்சி அமைத்து கொண்டிருக்கிறது? பணமதிப்பு நீக்கத்தால் மிக மோசமாக நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் கூட, நரேந்திர மோதியை தொடர்ந்து ஆதரிக்க (வட இந்தியாவில்) என்ன காரணம்? காஷ்மீரில் ஆட்சியில் பங்கு, வட கிழக்கு மாநிலங்களில் ஆட்சி எப்படி சாத்தியமானது பா.ஜ.கவுக்கு?



இந்தக் கேள்விகளை அலசுகிறது பிரசாந்த் ஜா எழுதிய `How BJP Wins?' புத்தகம்.

இக்கட்சி அசாம் மாநிலத்தில் வெல்ல மற்றும் மணிப்பூரில் ஆட்சி அமைக்க என்ன செய்தது என்று விளக்கும் இப்புத்தகத்தின் ஒரு பகுதி, தொடர்ந்து 25 ஆண்டுகள் இடதுசாரிகள் ஆட்சி செய்த திரிபுராவில் இப்போது பா.ஜ.க அடைந்துள்ள வெற்றியைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது.

ஒற்றை தேசியத்தை பா.ஜ.க கட்சியின் தீவிர தொண்டர்கள் அழுத்தமாக பேசினாலும், தேர்தல் என்று வரும் போது இந்த இறுக்கத்தை தளர்த்தி எப்போதும் உள்ளூர் முகமூடியை அணிந்துக் கொள்வதில் மிகத் தெளிவாக இருக்கிறது அந்தக் கட்சி. அதனால்தான், தேசிய அளவில் கெளரக்‌ஷா என்று பேசும் அவர்கள், வட கிழக்கு மாநில தேர்தல்கள் என்று வரும் போது நாங்கள் மாட்டுக்கறி உணவிற்கு எதிரானவர்கள் இல்லை என்கிறார்கள்.

அசாம் தேர்தலின் போதும் சரி, மணிப்பூர் தேர்தலின் போதும் சரி, அவர்கள் விரிவாக ஆய்வு செய்து, அம்மக்களுக்கு என்ன பிரச்சனை என்பதை கண்டறிந்து, அம்மக்களின் மனநிலை என்ன என்பதைப் புரிந்துகொண்டு அதைத்தான் தேர்தல் பிரச்சாரங்களில் பா.ஜ.க பிரதிபலித்துள்ளது என்று பிரசாந்த் ஜா, `How BJP Wins' புத்தகத்தில் விளக்குகிறார்.



மணிப்பூர் தேர்தலில், மாநில அரசுக்கு எதிரான மனநிலை மற்றும் உள்ளூர் பிரச்சனைகள் ஆகியவற்றை முன்னிறுத்திதான் வாக்கு கோரியது பா.ஜ.க. ஆயுதப்படை சிறப்பு சட்டம் அங்கு ஆதிக்கம் செலுத்தும், மக்கள் எல்லோரும் அதற்கு எதிரான மனநிலையில் இருப்பார்கள். அது தேர்தலில் பிரச்சனையாக உருவெடுக்கும் என்று அஞ்சியது பா.ஜ.க. இதற்காக, விரிவான ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின் மூலமாக, மணிப்பூர் மக்கள், அப்போது அம்மாநிலத்தில் நடந்து வந்த என்கவுண்டர் சம்பவங்கள் மீதுதான் கோபமாக இருக்கிறார்கள், ஆயுதப்படை சிறப்பு சட்டம் பெரிதாக தேர்தலில் எதிரொலிக்காது என்பதை கண்டறிந்தது. அதனால், என்கவுண்டர் பிரச்சனையை தேர்தலில் பிரதானமாக்க முடிவு செய்தது, அங்குள்ள மனித உரிமை குழுக்களுடன் இணைந்து, தன்னையே ஒரு மனித உரிமை இயக்கமாக மக்கள் முன்பாக முன்னிறுத்தி வாக்கு கோரியது அக்கட்சி என்கிறார் பிரசாந்த் ஜா.

பா.ஜ.க வெற்றியை புரிந்துகொள்ள 3 எளிய கேள்வி பதில்!

திரிபுரா: 25 ஆண்டு கம்யூனிஸ்ட் ஆட்சியை பா.ஜ.க. வீழ்த்தியது எப்படி?

இதனைவிட எல்லாம் உச்சம், அது கிறிஸ்துவ பழங்குடி மக்களிடம் வாக்கு கேட்ட விதம் தான் என்கிறது `ஹவ் தி பி.ஜே.பி வின்ஸ்` புத்தகம். பா.ஜ.க கட்சியால் முன்னிறுத்தப்பட்ட கிறிஸ்துவ பழங்குடி வேட்பாளர்கள், மலைகளில் வாழும் கிறிஸ்துவ மக்களிடம் சென்று BJP என்றால் 'Bharatiya Jesus Party' என்று கூறி வாக்கு கேட்டார்களாம்.

ஏறத்தாழ இதே பாணியைதான் திரிபுராவிலும் பின் பற்றியது பா.ஜ.க. தன்னை கிறிஸ்துவர்களுக்கு நெருக்கமான கட்சியாக காட்டிக் கொண்டது. மற்ற விஷயங்களை எல்லாம் விட அம்மாநிலத்தில் பிரதானமாக இருந்த வேலைவாய்ப்பின்மையை முன்னிறுத்தி வாக்கு கேட்டது; வென்றது.

'வெல் அல்லது வெல்பவர்களை உள்வாங்கு'

'வெல். வெல்லாத முடியாத பட்சத்தில் யார் வெல்வார்களோ அவர்களை உன் பக்கம் கொண்டு வா` என்ற சூத்திரத்தை பா.ஜ.க தலைவர் அமித் ஷா வலுவாக நம்பினார் என்கிறார் பிரசாந்த் ஜா.

இந்த சூத்திரத்தின் அடிப்படையில்தான் காங்கிரஸ் அமைச்சராக இருந்த ஹிமாண்தா பிஸ்வா சர்மாவை அஸ்ஸாமில் உள்ளிழுத்தது பா.ஜ.க. அவருக்கு மக்கள் மத்தியில் இருந்த ஆதரவை பயன்படுத்திதான் வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் தமக்கு இருந்த தடைகள் அனைத்தையும் தகர்த்து எறிந்தது என்று இந்த புத்தகம் தரவுகளுடன் விளக்குகிறது.

இந்தப் புத்தகம் பேசும் இதே உத்தியைதான் திரிபுராவில் பின்பற்றியது பாஜக. திரிபுராவில் பாஜக சார்பாக போட்டி இட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் காங்கிரஸ்காரர்கள்தான்.



வார்த்தைகளில் கவனம்

எதைப் பேச வேண்டும் என்பதைவிட எதைப் பேசக் கூடாது என்பதில் கவனமாக இரு என்பது பீகார் தேர்தல் பா.ஜ.க-வுக்கு கற்றுக் கொடுத்த பாடம் என்கிறது இப்புத்தகம்.

பீகார் தேர்தல் சமயத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், ஆர்கனைசர் இதழில் ஒரு பேட்டி அளித்து இருந்தார். அந்த பேட்டி, இடஒதுக்கீடு ஒழிக்கப்பட வேண்டும் என்ற தொனியில் இருந்தது. இது பீகார் தேர்தலில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு ஒழிக்கப்பட்டுவிடும் என்று பீகார் மாநிலத்தில் மக்கள் முணுமுணுக்கத் தொடங்கினார்கள்.

பா.ஜ.க நாங்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் இல்லை என்று விளக்கம் கொடுத்தது. பேட்டி தவறான பொருளில் புரிந்துக் கொள்ளப்பட்டு விட்டது என்றது ஆர்.எஸ்.எஸ். ஆனால், இது எதுவும் பலன் தரவில்லை. லாலு அமைத்த மகா கூட்டணியிடம் பா.ஜ.க தோற்றது (நித்திஷ் லாலுவுடனான கூட்டணியை முறித்த பின், அவருக்கு பாஜக ஆதரவு அளித்து ஆட்சியில் பங்கேற்றது பின்னர் நடந்தது).

இதனால் தேர்தல் சமயங்களில் என்ன பேச வேண்டும் என்பதில் மிகவும் கவனம் கொள்ளத் தொடங்கியது பா.ஜ.க. என்று பீகார் சூழலின் ஊடாக விளக்குகிறது இப்புத்தகம்.

இராக்கில் கிறிஸ்துவ செவிலியர்கள் பயங்கரவாதிகளிடம் சிக்கிக் கொண்ட போது நாங்கள்தான் காப்பாற்றினோம் என்று மேகாலயா பிரச்சாரத்தின் போது மோதி கூறியதை இதனுடன் பொருத்திப்புரிந்துக் கொள்ள முடியும்.

சங் - பா.ஜ.க உறவு

பா.ஜ.கவுக்கும் அதன் தத்துவ தந்தையான சங் அமைப்புகளுக்கும் உள்ள உறவு நாடறிந்தது. ஆனால், வாஜ்பாய் ஆட்சியில் இருந்த காலத்தில் இந்த உறவில் மனக்கசப்பு இருந்ததாகவும், வாஜ்பாய் அரசு தங்கள் கையை மீறி செயல்படுவதாக ஆர்.எஸ்.எஸ் நம்பியதாகவும் கூறுகிறார் பிரசாந்த் ஜா.

ஆனால், மோதி ஆட்சியில் அப்படியான விரிசல் மெலிதாகக் கூட இல்லை என்று விளக்கும் பிரசாந்த், இந்த இணக்கம் தேர்தல்களை கையாள்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்கிறார்.

தேர்தல் சமயத்தில் எங்கெல்லாம் பா.ஜ.க வலுவாக இல்லையோ அங்கெல்லாம் பெரும் எண்ணிக்கையில் சங் தன்னார்வலர்கள் இறங்கிப் பணி செய்கிறார்கள் என்று விளக்குகிறார் அவர்.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா தேர்தல்களில் மட்டும் ஏறத்தாழ 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பா.ஜ.கவுக்குப் பணியாற்றி இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் என்று மூத்த பத்திரிகையாளர் கிஷாலாய் பட்டாச்சாரியா கூறுவது பிரசாந்த் ஜாவின் கூற்றை உறுதிப்படுத்துகிறது.

இப்படி சரியான திட்டமிடல் மற்றும் தந்திரம், மாநிலத்திற்கு ஏற்ற முகம், சங் தொண்டர்களின் உழைப்பு என இது அனைத்தும் சேர்ந்துதான் பா.ஜ.கவுக்கு தொடர் வெற்றியைத் தருகிறது என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறது இப்புத்தகம்.