1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 25 ஏப்ரல் 2018 (16:22 IST)

பின் லேடனின் முன்னாள் மெய்க்காவலருக்கு உதவித்தொகை..

ஒசாமா பின் லேடனின் முன்னாள் மெய்க்காவலர் என்று குற்றம்சாட்டப்படும் துனீசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், 1997ஆம் ஆண்டு முதல் ஜெர்மனியில் வசித்து வருவதாகவும் அவர் மாதந்தோறும் 1,168 யூரோக்களை உதவித்தொகையாகப் பெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
சமி ஏ' என்று அடையாளப்படுத்தப்படும் அந்த நபர் குறித்த விவரங்களை வெளியிடுமாறு தீவிர வலதுசாரி அமைப்பான அல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி கோரியதை அடுத்து இந்தத் தகவலை அந்தப் பிராந்தியத்தின் அரசு வெளியிட்டுள்ளது.
 
அவரது அந்தரங்க உரிமை கருதி அவரது முழுப் பெயரையும் ஜெர்மன் ஊடகங்கள் வெளியிடவில்லை. அவர் தனது சொந்த நாடான துனீசியாவுக்கு அனுப்பப்பட்டால் அங்கு அவர் சித்திரவதைக்கு ஆளாக நேரிடும் என்பதால் அவர் ஜெர்மனியில் இருந்து நாடுகடத்தப்படவில்லை.
 
சமி 2000ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் பின் லேடனின் மெய்க்காவலர்களில் ஒருவராக இருந்ததாக, 2005இல் நடைபெற்ற ஒரு பயங்கரவாத எதிர்ப்பு வழக்கு விசாரணையின்போது ஒருவர் சாட்சியம் அளித்தார்.
 
தனக்கு எந்த ஜிஹாதி அமைப்புடனும் தொடர்பில்லை என்று சமி மறுத்துள்ளார். எனினும், சாட்சியம் அளித்த நபர்களின் கூற்றையே நீதிபதிகள் நம்பினர். 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்துக்கு காரணமான அல்-கய்தா ஜிஹாதி குழுவின் தலைவர் ஒசாமா பின் லேடன், 2011இல் அமெரிக்க சிறப்பு படையினரால் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
 
செப்டம்பர் 11 சம்பவத்தில் ஈடுபட்ட தற்கொலைப் படை விமானிகளின் குறைந்தது மூன்று பேர் வடக்கு ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரில் இருந்து இயங்கிய அல்-கய்தா குழுவைச் சேர்ந்தவர்கள்.
 
2006இல் அல்-கய்தா அமைப்புடனான தொடர்பு குறித்து சமியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவர் மீது வழக்கு எதுவும் பதியப்படவில்லை. ஜெர்மனைச் சேர்ந்த அவரது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் அவர் மேற்கு ஜெர்மனியில் உள்ள போச்சும் நகரில் சமி வசித்து வருகிறார்.
 
ஜெர்மனியில் வசிப்பதற்கான தற்காலிக அனுமதியை 1999இல் பெற்ற அவர் பல தொழில்நுட்ப படிப்புகளை முடித்தபின் 2005இல் போச்சும் நகரில் குடியேறினார். அவர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்பதால் அவரது தஞ்சக் கோரிக்கை 2007இல் நிராகரிக்கப்பட்டது. சமி தினமும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.
 
வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஜிஹாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் சித்திரவதைக்கு உள்ளாகக்கூடும் ஜெர்மனி அரசு கருதுவதால், துனீசியா மற்றும் அதன் அரபு அண்டை நாடுகளைச் சேர்ந்த குடியேறிகளை ஜெர்மனி அரசு நாடு கடத்துவதில்லை.