ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 ஜூலை 2024 (22:22 IST)

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

Bodhichitta Trees
நேபாளத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரம் அழிக்கப்பட்டது, அங்குள்ள சிறிய சமூகத்தினருக்கு அச்சத்தையும் வலியையும் ஏற்படுத்தியுள்ளது.



அப்பகுதியில் வாழும் பெரும்பாலானோருக்கு மதிப்பு மிகுந்த போதிச்சிட்டா (அல்லது போதி) மரங்களில் இருந்து வரும் வருமானம் அவர்களின் வாழ்க்கையை மாற்றி, களைப்பூட்டும் உடல் உழைப்பு தேவையான வேலைகளில் இருந்து விடுவிக்கிறது.

நேபாளத்தின் கவ்ரேபலன்சோக் மாவட்டத்தில் வளரும் இந்த மரங்கள், புத்த மதத்தின் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. இந்த மரங்கள் தங்கத்தைவிட மதிப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன் கவ்ரேவில் உள்ள ரோஷி கிராம நகராட்சியில் போதி மரம் கொள்ளையடிக்கப்பட்டதால், தாங்கள் அனைத்தையும் இழந்துவிடுவோமோ என அங்குள்ள உள்ளூர் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

தங்கச் சுரங்கமாக மாறிய மரங்கள்

“அவர்களுக்கு ஏதாவது பிரச்னை இருந்தால் என்னிடம் கேட்டிருக்கலாம். ஏன் அந்த மரத்தை வெட்ட வேண்டும்?”

தில் பஹதூர் தமாங், தான் வளர்த்த போதிச்சிட்டா மரத்தை நினைத்துக் கண்ணீர் சிந்துகிறார். 42 வயதான தில் பஹதூர் ரோஷி கிராம நகராட்சியில் உள்ள நாக்பெலி எனும் இடத்தில் பிறந்தார். தன் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அவர் சந்தித்துள்ளார்.

கூட்டுக் குடும்பத்தில் உள்ள அவர் தன்னுடைய மூன்று குழந்தைகள், உடன்பிறந்தவர்கள், பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்ற, வெப்பமான கத்தாரில் கட்டுமான தொழிலாளியாக வேலை செய்தது உட்பட அதிகமான உடல் உழைப்பைக் கோரும் பல வேலைகளைச் செய்துள்ளார்.

ஆனால், முன்னர் அவ்வளவு மதிப்பில்லாத போதிச்சிட்டா மரங்கள், 15 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் மதிப்பு மிக்கவையாக மாறியதையடுத்து தில் பஹதூரின் விதி மாறியது.
போதிச்சிட்டா மரங்களின் விதைகள் புத்த மத ஜெபமாலைகளைச் செய்வதற்குப் பயன்படுகின்றன. நேபாளின் இந்தப் பகுதிகளில் உள்ள போதிச்சிட்டா மரங்கள் அதிக தரம் வாய்ந்தவையாகவும் மதிப்பு மிக்கவையாகவும் கருதப்படுகின்றன.

போதிச்சிட்டா விதைகளின் மதிப்பு உயர்ந்ததன் பின்னணியில் அதன்மீது சீன வணிகர்கள் செலுத்திய ஆர்வம் இருப்பதாகவும், முன்னர் இந்த அளவுக்கு அந்த மரங்கள் விற்பனையாகவில்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

சில ஆண்டுகளாக இவற்றை வாங்குவதற்காக சீன வணிகர்கள் தங்களின் கிராமங்களுக்கு வருவதாக, உள்ளூர் விவசாயிகள் கூறுகின்றனர்.

அதிகம் படித்திராத தில் பஹதூரால் தன்னுடைய போதிச்சிட்டா மரம் மூலம், தம்பி ஷேர் பஹதூர் தமாங் மற்றும் மற்ற குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் பல லட்சக்கணக்கில் வருமானம் ஈட்ட முடிந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஒரே மரத்தில் இருந்து போதிச்சிட்டா விதைகளை விற்று வருவதாகவும் அதன்மூலம் ஆண்டுக்கு சுமார் 90 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்ததாகவும் ஷேர் பஹதூர் தமாங் தெரிவித்தார்.

“எங்கள் குடும்பத்தில் சுமார் 20-22 பேர் உள்ளனர்,” என்கிறார் ஷேர் பஹதூர் தமாங். “இந்த மரத்தில் இருந்து வரும் வருமானம்தான் முழு குடும்பத்திற்கும் துணை புரிந்து வந்தது. இந்த மரம் வெட்டப்படவில்லையென்றால், இன்னும் பல ஆண்டுகளுக்கு அந்த மரம் லட்சக்கணக்கில் வருமானம் தந்திருக்கும் என நாங்கள் நினைக்கிறோம்.”

தமாங்கின் குடும்பத்திடம் இருந்து அம்மரத்தின் விதைகளை வாங்கி வந்த சமிப் திரிபாதி என்ற வணிகர், அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு விதைகளை வாங்குவதற்கு ஒப்புக்கொண்டிருந்ததாகக் கூறினார்.

அந்த ஒரு மரத்திலிருந்து விதைகளை வாங்குவதற்காக ஆண்டொன்றுக்கு அவர் 90 லட்சம் ரூபாய் செலுத்தியிருப்பார், அதைப் பதப்படுத்தி சீன வணிகர்களுக்கு சுமார் 3 கோடிக்கு விற்றிருப்பார்.

தமாங் குடும்பத்தின் மரம் கவ்ரே மாவட்டத்தில் “மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக இருக்கலாம்” என அவர் தெரிவித்தார். ஏப்ரல் 11 அன்று நடந்த சம்பவம், தமாங் குடும்பத்தின் நிதிப் போராட்டத்தின் பின்னணியில் இருந்த நம்பிக்கையைச் சிதைத்தது.

அந்த நாள் இரவில் 10-15 ஆயுததாரிகள் தங்கள் வீட்டைத் தாக்கியதாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தி, வெடிகுண்டுகளை வீசியதாகவும் தில் பஹதூர் தெரிவிக்கிறார்.

முன்னதாக, தங்களின் போதிச்சிட்டா மரம் குறிவைக்கப்படுவதை அறிந்த தமாங் குடும்பத்தினர், அந்த மரத்தைச் சுற்றி இரும்புவேலி அமைத்து, சிசிடிவியும் பொருத்தினர். இதனால் அம்மரத்தைப் பூட்டியுள்ள இரும்புக் கதவின் வாயிலாக மட்டுமே அணுக முடியும்.
பிபிசியிடம் ஷேர் பஹதூர் பிபிசியிடம் வழங்கிய சிசிடிவி காட்சிகளில் துப்பாக்கி வைத்திருப்பவர்களைக் காண முடிந்தது.

துப்பாக்கிச் சூட்டைத் தவிர்க்க தங்கள் குடும்பத்தினர் வீட்டுக்குள் தஞ்சம் புகுந்த நிலையில், ஆயுததாரிகள் இரும்புக் கதவின் பூட்டை உடைத்து, அந்தக் குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தும் செயலைச் செய்ததாக, தில் பஹதூர் தெரிவிக்கிறார்.

“ஒரு மணிநேரத்திற்கும் மேலாக, அவர்கள் பூட்டை உடைத்து அந்த மரத்தை ரம்பம் கொண்டு அறுத்தனர்,” என்கிறார் அவர். “அதை ஏன் செய்தார்கள் என எங்களுக்கு இன்னும் தெரியவில்லை.”

மரத்தைப் பெயர்த்து நட முடியாது, ஆனால் தமாங்கின் குடும்பம் இனியும் அம்மரத்தால் லாபம் பெறக்கூடாது என்பதே, அவர்கள் கையாண்ட முறையின் அர்த்தமாக உள்ளது.

பிபிசியிடம் பேசிய கிராமத்தினர் சிலர், தொழில் போட்டி காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என ஊகித்தனர். அதேநேரம் அவர்கள் அந்த மரத்திலிருந்து விதைகளை வாங்க விரும்பி அவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கலாம் என மற்றவர்கள் கூறுகின்றனர். இது குறித்த காவல்துறை விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.

மரம் தொடர்பான குற்றங்கள்

தேமல் கிராம நகராட்சி மற்றும் ரோஷி கிராம நகராட்சிகளில் காணப்படும் போதிச்சிட்டா மரங்களால், அதன் விற்பனை தொடர்பாகp பல பிரச்னைகள் நிலவுவதாக அங்குள்ள அதிகாரிகள் கூறுகின்றனர்.

“இந்த கிராம நகராட்சியில் உள்ள நீதிக் குழுவில் (judicial committee) பதிவாகியுள்ள மூன்றில் ஒரு பங்கு பிரச்னைகள், போதிச்சிட்டா மரங்கள் தொடர்பானவை” என்கிறார், ரோஹி நகராட்சியின் துணைத் தலைவர் மிம் பஹதூர் வைபா.

தமாங்கின் வீட்டில் நிகழ்ந்த சம்பவம், சுற்றியுள்ள கிராமங்களிலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தமாங்கின் வீட்டிலிருந்து சில மீட்டர்களில் வசிக்கும் நாராயண் ஹுமாகாய் குடும்பம் இன்னும் அதிர்ச்சியில் உள்ளனர்.

“என்னுடைய வீட்டில் தில் பஹதூர் தமாங்தான் இந்த மரத்தை நட்டார்,” என்கிறார் அவர். “நடந்தது குறித்து நாங்கள் மிகவும் அச்சத்தில் உள்ளோம்.”

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நநாராயண், மரத்தைப் பாதுகாக்க தங்கள் வீட்டைச் சுற்றி எட்டு சிசிடிவி கேமராக்களையும் மரத்தைச் சுற்றி இரும்பு வேலியையும் அமைத்துள்ளார்.
“அண்டைப் பகுதிகளில் மரங்கள் வெட்டப்படுவதைப் பார்த்த பிறகு, எங்களுக்கும் இந்த நிலை ஏற்படலாம் என நாங்கள் அச்சப்படுகிறோம்,” என்கிறார் அவர். “மற்றவர்கள் எங்களைப் பார்த்து பொறாமை கொள்கின்றனர்.”

மதிப்புமிக்க இம்மரங்களைக் காக்க உள்ளூர் அதிகாரிகள், காவல்துறை ரோந்து வாகனங்களையும் ஏற்பாடு செய்துள்ளனர். குறிப்பிட்ட கிராமத்தில் வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று நாட்களுக்குத் தொடர்ச்சியாக போலீஸ் ரோந்து வாகனம் வரும் என, தேமல் நகராட்சியின் துணைத் தலைவர் தல்மான் தோக்கர் கூறினார்.

இந்த மரத்தின் விதைகளைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல முன்பெல்லாம் வணிகர்கள் ஹெலிகாப்டர்களை கொண்டு வந்ததாக கிராமத்தினர் கூறுகின்றனர்.

கவ்ரே மாவட்ட காவல்துறை அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளரும் டி.எஸ்.பியுமான ராஜ்குமார் ஷ்ரேஸ்தா, தேவைக்கு ஏற்ப, குறிப்பாக அறுவடைக் காலத்தில் காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவர் எனத் தெரிவித்தார்.

ஆனாலும், அந்த மரத்தை ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க வரும்போது அத்தகைய ஏற்பாடுகள் வேலை செய்யாது என விவசாயிகள் கவலைப்படுகின்றனர்