ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 20 பிப்ரவரி 2021 (11:55 IST)

பதஞ்சலி ஆயுர்வேத மருந்து: 'கொரோனில் கிட்' அறிமுகம் செய்தார் ராம்தேவ்!

கொரோனாவுக்கு பதஞ்சலி ஆயுர்வேத மருந்தான 'கொரோனில் கிட்டை' பாபா ராம்தேவ் அறிமுகம் செய்துள்ளதாக செய்தி.
 
"'கோவிட் 19' எனப்படும் கொரோனா வைரஸ், உலக நாடுகளை ஸ்தம்பிக்க வைத்தது. இந்த நோய்த்தொற்றுக்கு 'கொரோனில்' என்ற ஆயுர்வேத மருந்தை பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்தது.
 
இந்த மருந்துக்கான அறிவியல் ஆதாரங்கள் மீது சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால் சர்ச்சை உருவானது. இதையடுத்து மத்திய ஆயுஷ் அமைச்சகம், கொரோனில் மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது என்று மட்டும் கூறியது.
 
இந்நிலையில் தொடர் ஆய்வுகளுக்குப் பிறகு அந்த மருந்து மேம்படுத்தப்பட்டு 'கொரோனில் கிட்' என்ற பெயரில் அறிவியல் ஆதாரங்களுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
கொரோனில் கிட்டில் 2 வகை மாத்திரைகள் மற்றும் மூக்கு சொட்டு மருந்துகள் உள்ளன. இந்த மருந்துக்கு இந்த முறை உலக சுகாதார நிறுவனத்தை பின்பற்றி மத்திய ஆயுஷ் அமைச்சகமும் அங்கீகாரம் அளித்துள்ளது. மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு நிறுவனத்தின் அங்கீகார சான்றிதழுக்கான நகலும் நேற்று பத்திரிகையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
 
டெல்லியில் நடைபெற்ற இதன் அறிமுக விழாவில் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம் தேவுடன் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷவர்தன், நிதின் கட்கரி ஆகியோரும் கலந்துகொண்டனர். விழாவில் பாபா ராம்தேவ் பேசும்போது, "இந்த இயற்கை மருந்து 3 முதல் 7 நாட்களுக்குள் கொரோனா தொற்று உள்ளவர்களை 100 சதவீதம் குணப்படுத்தும். இது நம் நாட்டின் ஆதாரப்பூர்வமான முதல் மருந்து" என்றார்.
 
சோதனை அடிப்படையில் நூறு பேருக்கு அளிக்கப்பட்டு இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இது, உலகின் 158 நாடுகளுக்கு ஏற்றுமதியாக உள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவு தலைவர் டாக்டர் அனுராக் வார்ஷ்னே தலைமையிலான தயாரிப்பு குழுவுக்கு பேராசிரியர் பல்பீர்சிங் தோமர், ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் உதவியுள்ளனர்" என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.