வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2023 (21:25 IST)

தனது 4 குழந்தைகளை கொன்றதாக சிறையில் அடைக்கப்பட்ட ஆஸ்திரேலிய பெண் விடுவிக்கப்பட்டது ஏன்?

தனது நான்கு குழந்தைகளைக் கொன்றதற்காக 'ஆஸ்திரேலியாவின் மோசமான தாய்' என்று முத்திரை குத்தப்பட்ட ஒரு பெண்ணின் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றம் வியாழன் அன்று, கேத்லீன் ஃபோல்பிக் (Kathleen Folbigg) என்ற அந்தப் பெண் சிறையில் அடைக்கப் பயன்படுத்தப்பட்ட ஆதாரங்கள் "நம்பகமானவை அல்ல" என்று தீர்ப்பளித்தது.
 
56 வயதான அவர் 20 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் ஜூன் மாதம் மாநில அரசால் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
 
திருமதி ஃபோல்பிக் இந்த சமீபத்திய தீர்ப்பை வரவேற்றுள்ளார். தான் குற்றமற்றவர் என்பதற்கான ஆதாரம் பல தசாப்தங்களாக 'புறக்கணிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டது' என்று அவர் கண்ணீருடன் கூறினார்.
 
ஆஸ்திரேலியா, நீதித்துறை, வழக்கு, குற்றம்பட மூலாதாரம்,EPA
,
தான் குற்றமற்றவர் என்பதை தொடர்ந்து கூறிவந்தார் கேத்லீன்
 
"நமது குழந்தைகள் திடீரென்று, யாரும் எதிர்பாராத விதமாக, மிகப்பெரிய மனவலியை உருவாக்கிவிட்டு நம்மை நிரந்தரமாக பிரிய வாய்ப்புகள் உண்டு. இதை ஏற்றுக்கொள்ளாமல் நீதித்துறை என்னைக் குறை கூற விரும்புகிறது," என்று அவர் வியாழக்கிழமை நீதிமன்றத்திற்கு வெளியே கூறினார்.
 
திருமதி ஃபோல்பிக்கின் வழக்கு ஆஸ்திரேலிய நீதித்துறை வரலாற்றில் மிகப்பெரும் கரும்புள்ளி என வர்ணிக்கப்படுகிறது.
 
 
திருமதி ஃபோல்பிக்கின் குழந்தைகள் லாரா மற்றும் பேட்ரிக்
 
2003-ஆம் ஆண்டில், தனது குழந்தைகளான சாரா, பேட்ரிக், லாரா மற்றும் முதல் மகன் காலேபின் படுகொலைகளுக்காக கேத்லீனுக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
 
நான்கு குழந்தைகளும் (1989-1999) பத்தாண்டு கால இடைவெளியில், 19 நாட்கள் முதல் 18 மாதங்களுக்கு இடைப்பட்ட வயதில் திடீரென இறந்து போனார்கள். திருமதி ஃபோல்பிக் அவர்களைக் கொன்றதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர்.
 
லாரிங்கோமலாசியா எனும் சுவாசத்தை பாதிக்கும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த காலேப் 1989-இல் தூக்கத்தில் இறந்தார். கார்டிகல் குருட்டுத்தன்மை மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பேட்ரிக், வலிப்பு ஏற்பட்டதன் விளைவாக இறந்து போனார். சாரா மற்றும் லாரா, இருவரும் சுவாச நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டு தூக்கத்தில் இறந்தனர்.
 
இந்த வழக்கு சூழ்நிலை ஆதாரங்களை மட்டுமே நம்பியிருந்தது, அதாவது திருமதி ஃபோல்பிக்கின் டைரிக் குறிப்புகளை மட்டுமே பயன்படுத்தினர். அவரை ஒரு மனநிலை சரியில்லாத தாயாகச் சித்தரித்து, கோபப்படுத்தி குற்றவாளி என முத்திரை குத்தினார்கள். உளவியலாளர்கள் அல்லது மனநல மருத்துவர்களால் ஒருபோதும் அவர் பரிசோதிக்கப்படவில்லை.
 
திருமதி ஃபோல்பிக்கின் தண்டனை பின்னர் மேல்முறையீட்டில் 30 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை பொய் என நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் இருந்தும் அவர் அந்த வழக்கில் தோல்வியடைந்தார்.
 
 
கேத்லீன் ஃபோல்பிக், 2004இல் நீதிமன்ற விசாரணையின் போது
 
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவரது வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்றது. அவரது குழந்தைகள் அரிதான மரபணு மாற்றங்களால், இயற்கையான காரணங்களால் இறந்திருக்கலாம் என்று அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம் உறுதி செய்யப்பட்டது. அவரது தரப்பில் இருந்த நியாயம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.
 
புதிய ஆதாரங்களின் அடிப்படையில் வியாழன் அன்று திருமதி ஃபோல்பிக் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக தலைமை நீதிபதி ஆண்ட்ரூ பெல் கூறினார்.
 
இப்போது திருமதி ஃபோல்பிக்கின் சட்டக் குழு அவர் சார்பாக இழப்பீடு கோரப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால் எவ்வளவு தொகை என்று கூறவில்லை.
 
உலகளாவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வழக்கு, மேம்பட்ட அறிவியலுக்கு பதிலளிப்பதில் ஆஸ்திரேலியாவின் சட்ட அமைப்பு ஆமை வேகத்தில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழ வழிவகுத்தது.
 
"எனது குழந்தைகள் எப்படி இறந்தார்கள் என்ற கேள்விக்கான பதிலை உலகிற்கு வழங்கியதற்கு அறிவியல் மற்றும் மரபியல் துறைக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன்," என்று திருமதி ஃபோல்பிக் கூறினார்.
 
"இருப்பினும், 1999-இல் கூட, நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்க எங்களிடம் சட்டப்பூர்வ ஆதாரங்கள் இருந்தன.
 
"வழக்கறிஞர்கள் என் வார்த்தைகளை வேறு மாதிரியாக திரித்து, அவற்றை எனக்கு எதிராக திருப்பி விட்டார்கள். நான் அனுபவித்த துன்பத்தை வேறு யாரும் இனிமேல் அனுபவிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்," என்று கண்ணீருடன் கூறினார் கேத்லீன் ஃபோல்பிக்.