புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha
Last Updated : திங்கள், 21 அக்டோபர் 2019 (15:23 IST)

தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக அணித்திரளும் ஆஸ்திரேலிய பத்திரிகைகள்

ஆஸ்திரேலியாவில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து அந்நாட்டின் பெரும் செய்தித்தாள்கள் தங்களுக்குள் உள்ள போட்டிகளை மறந்து ஒரேகுரலில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.


 
இன்று (திங்கள்கிழமை) காலையில் வெளிவந்த நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா மற்றும் நைன் மாஸ்ட்ஹெட்ஸ் ஆகிய இரண்டு பெரும் செய்திதாள்களும் தங்களின் முதல் பக்கத்தில் செய்தியை கருப்பு மையால் மறைத்து அதற்கு மேலே 'ரகசியம்' என்ற வாசகத்துடன்கூடிய சிவப்பு நிற முத்திரையுடன் வெளிவந்தன.
 
இந்த நூதன போராட்டமுறை அந்நாட்டில் உள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக நடத்தப்படுகிறது.
 
ஆஸ்திரேலியாவில் உள்ள தேசிய பாதுகாப்பு சட்டம் தங்களின் செய்தி சேகரிப்பு மற்றும் தயாரிப்புகளை பாதிப்பதாகவும், அந்நாட்டில் ரகசிய கலாசாரம் ஒன்றை உண்டாக்க முயல்வதாகவும் பத்திரிகைகள் குற்றம்சாட்டுகின்றன.
 
இது குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய அரசு தாங்கள் ஊடக தர்மத்தை மதிப்பதாகவும், அதேவேளையில் நாட்டில் யாரும் சட்டத்தை விட பெரியவர்கள் இல்லை என்பதை வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளது.
 
கடந்த ஜூன் மாதத்தில் ஆஸ்திரேலியன் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (ஏபிசி) வளாகத்திலும், நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா செய்தி முகமையை சேர்ந்த ஒரு பத்திரிகையாளரின் வீட்டிலும் நடந்த போலீஸ் சோதனைகள் ஊடகங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை எழுப்பின.
 
தங்கள் ஊடகங்களில் வெளிவந்த கட்டுரைகள் தொடர்பாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக இந்த ஊடகங்கள் குற்றம்சாட்டின.
 
போர் குற்றங்கள் தொடர்பாக ஒரு கட்டுரை வெளிவந்தநிலையில், மற்றொரு ஊடகத்தில் வெளிவந்த கட்டுரையில் ஆஸ்திரேலிய நாட்டு மக்களை உளவு பார்க்க அரசு முகமை ஒன்று முயல்வதாக குற்றம்சாட்டப்பட்டது.
 
இந்நிலையில் பத்திரிகைகளில் இன்று வெளியான இருட்டடிப்பு படம் குறித்து பல்வேறு பத்திரிகைகளும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
 
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசன் இது குறித்து கூறுகையில், பத்திரிகை சுதந்திரம் ஆஸ்திரேலிய ஜனநாயகத்துக்கு மிகவும் முக்கியமான ஒன்று, அதேவேளையில் நாட்டின் சட்டமும் காக்கப்படவேண்டியதாகும் என்று குறிப்பிட்டார்.
 
''அது நானாக இருந்தாலும் அல்லது பத்திரிகையாளராக இருந்தாலும் அல்லது வேறு யாராவது ஒருவராக இருந்தாலும் அனைவரும் சட்டத்தின் முன் சமமே'' என்று அவர் தெரிவித்தார்.