1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 டிசம்பர் 2022 (13:45 IST)

ஆர்ட்டெமிஸ்-1: நிலவில் இருந்து பூமிக்கு திரும்பிய ஓரியான் விண்கலம் - அடுத்த இலக்கு செவ்வாய்

Artemis-1
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது ஓரியான் விண்கலத்தை நிலவில் இருந்து மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து தரையிறக்கியுள்ளது.

சந்திரனைச் சுற்றி மூன்று வார பயணத்தை மேற்கொண்ட ஓரியான் விண்கலம், கலிஃபோர்னியாவிற்கு அருகே உள்ள பசிஃபிக் பெருங்கடலின் ஒரு பகுதியில் இறங்கியது.
சந்திரனைச் சுற்றி 26 நாள் பயணத்திற்குப் பிறகு, ஓரியான் விண்கலம் பூமிக்குத் திரும்பியுள்ளது.

சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தின் ஓரியா விண்கலம் நவம்பர் 16ஆம் தேதி நாசாவால் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

நாசாவின் ஸ்பேஸ் லான்ச் வெஹிகில் (NASA SLS) ராக்கெட் மூலம் ஓரியான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு நடத்தப்பட்ட சோதனை வெற்றிகரமாக அமைந்தது.

இது சோதனை முயற்சி என்பதால், இந்த விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் யாரும் பயணிக்கவில்லை.

நாசா ஓரியனுடன் மிகவும் சிக்கலான பயணங்களைத் திட்டமிடுகிறது. 2024இன் பிற்பகுதியில் அந்தப் பயணங்கள் தொடங்கும். மேலும், 2025 அல்லது 2026இல், மனிதர்களை மீண்டும் சந்திர மேற்பரப்பிற்குக் கொண்டு செல்லும் முயற்சியும் இதில் அடங்கும்.

ஆர்ட்டெமிஸ் திட்டம் மூலம் 50 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்பு, நிலவுக்கு விண்வெளி வீரர்களைக் கொண்டு செல்ல நாசா திட்டமிடுகிறது. அதாவது 1972ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக நிலவில் மனிதர்களைத் தரையிறக்கும் நாசாவின் திட்டம் இந்த ஆர்ட்டெமிஸ்.

நாசாவின் இந்தப் புதிய திட்டத்திற்கு கிரேக்க புராணங்களில் அப்பல்லோவின் சகோதரியாக அறியப்படும் ஆர்ட்டெமிஸ் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

"[அப்பல்லோவின் போது] சாத்தியமில்லாததை நாங்கள் சாத்தியமாக்கினோம்," என்று நாசா நிர்வாகி பில் நெல்சன் குறிப்பிட்டார்.

அப்போலோ 17 திட்டம் மூலம் நாசா 1972ஆம் ஆண்டு கடைசியாக மனிதர்களை பூமிக்கு அனுப்பியது. 1972 டிசம்பர் 11ஆம் தேதி அப்போலோ 17 திட்டத்தின் மூலம் நிலவுக்குச் சென்ற விண்வெளி வீரர்கள் பூமிக்கு வந்தனர்.

இப்போது சரியாக 50 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் நிலவுக்குச் சென்ற ஓரியான் விண்கலம் பூமிக்குத் திரும்பியது.

“இப்போது நாங்கள் அதை மீண்டும் செய்துள்ளோம். ஆனால் வேறொரு நோக்கத்திற்காக. ஏனெனில், இந்த நேரத்தில் நாம் நிலவுக்குத் திரும்பி வாழ, வேலை செய்ய, கண்டுபிடிக்க, மேன்மேல்ம் ஆராய்வதற்காக என்று பிரபஞ்சத்திற்குள் மேலும் செல்வதற்காகக் கற்றுக் கொள்கிறோம். 2030களின் பிற்பகுதியில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களுடன் செல்லத் தயாராகிவிட வேண்டும். அதன்பிறகு, அதற்கும் மேல் செல்வதே திட்டம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஓரியான் பூமிக்கு வந்த வேகம்?

ஓரியான் விண்கலம் பூமிக்கு வரும் திசை வேகம் மிகவும் வேகமாக இருக்கும். இது மணிக்கு 40,000 கி.மீ வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தைத் தொடும். இது ஒலியின் வேகத்தை விட 32 மடங்கு அதிகம்.

ஓரியான் விண்கலத்தின் பூமியை நோக்கிய மேற்பரப்பில் உண்டாகும் உராய்வு மற்றும் அழுத்தம் காரணமாக, அதன் வெப்பம் 3,000 டிகிரி செல்சியஸ் வரை வரும்.

இவ்வளவு வெப்பத்தை ஓரியானின் மேற்பரப்பை மூடும் கவசம் தங்குவதும் மிகவும் அவசியம். அப்போதுதான் இந்த விண்கலம் மூலம் வருங்காலங்களில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப முடியும்.

2014ஆம் ஆண்டிலேயே மனிதர்கள் இல்லாமல் ஓரியான் விண்கலத்தை ஏவி நாசா ஒரு முறை சோதனை செய்துள்ளது. ஆனால், அந்த சோதனையின்போது விண்கலம் பூமிக்குத் திரும்பிய நேரத்தில் அதன் திசைவேகம் மற்றும் வெப்பம் இப்போதைய அளவைவிடவும் மிகவும் குறைவாகவே இருந்தது.