1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Ashok
Last Updated : ஞாயிறு, 14 பிப்ரவரி 2016 (16:21 IST)

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்கேலியா காலமானார்- அடுத்த நீதிபதி தமிழரா?

நீண்டகாலமாகப் பதவியிலிருந்த அமெரிக்க உச்சநீதிமன்ற பழமைவாத நீதிபதி, ஆண்டொனின் ஸ்கேலியா, மரணமடைந்ததை அடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும், எதிர்வரும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாகப் போட்டியிட கட்சித் தேர்தலில் போட்டியிடும் ஆறு வேட்பாளர்களுக்கும் இடையே ஒரு மோதல் வெடித்திருக்கிறது.


 
 
நீதிபதி ஸ்கேலியா மேற்கு டெக்ஸாஸில் வேட்டையாடச் சென்றிருந்தபோது, சனிக்கிழமை காலை உறக்கத்திலேயே இறந்தார். 79 வயதான ஸ்கேலியா முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன் ஆட்சியில் 1986ல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.(அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் இறக்கும் வரை பதவியில் இருக்கலாம் என்பது அமெரிக்க சட்டம்).
 
இறந்த நீதிபதிக்கு அஞ்சலி செலுத்திய அதிபர் ஒபாமா, அவருக்கு பதிலாக புதிய நீதிபதியை நியமிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். இது அவரது எதிர்க்கட்சியான, குடியரசுக் கட்சியின் எதிர்ப்பைத் தூண்டியிருக்கிறது.
 
புதிய நீதிபதியை நியமிக்க தனக்கும், அவரை விசாரித்து , அவரது நியமனத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த செனட்டுக்கும் ஏராளமான கால அவகாசம் இருப்பதாக ஒபாமா கூறினார்.
 
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னோட்டமான பிரதான கட்சிகளின் அதிபர் பதவிக்கான வேட்பாளர் தேர்வுக்கான கட்சி 'பிரைமரிகள்' நடந்து கொண்டிருக்கும் தற்போதைய சூழலில், இந்த நீதிபதியின் மறைவு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 
தனது பதவிக்காலம் முடிவடைய இன்னும் 11 மாதங்களுக்குக் குறைவான காலத்தையே கொண்டிருக்கும் அதிபர் ஒபாமா , உச்சநீதிமன்ற நீதிபதியை நியமிப்பதை எப்பாடுபட்டாவது தடுக்க அமெரிக்க செனட்டில் உள்ள குடியரசுக் கட்சியினர் திட்டமிடுவார்கள்.
 
உச்சநீதிமன்றத்தில் இருக்கும் மொத்தம் ஒன்பது நீதிபதிகளில் தற்போது நான்குபேர் தாராளவாதக் கொள்கைகளை உடையவர்கள். நான்கு பேர் பழமைவாதக் கொள்கைகளைக் கொண்டிருப்பவர்கள். ( ஐந்தாவது பழமைவாத நீதிபதி, தற்போது இறந்த ஸ்கேலியா). எனவே தற்போது காலியாகும் ஒரு இடத்தை ஒரு தாராளவாதக் கொள்கையுடையவரை நியமித்து நிரப்பினால், உச்சநீதிமன்றம், அமெரிக்காவின் பெரும் சமூகப் பிரச்சனைகளில் சற்று மிதவாதப் போக்கைக் கடைப்பிடிக்கும் என்று கருதப்படுகிறது.
 
ஒபாமாவின் தேர்வு ஒரு தமிழரா?



 
 
அடுத்த நீதிபதி நியமனம் குறித்து வாஷிங்டனில் வரும் வாரங்களில் பெரும் முயற்சிகள் நடக்கலாம்.
உச்சநீதிமன்றத்துக்கு அடுத்த மட்டத்தில் இருக்கும் மாகாண சர்க்கியூட் நீதிமன்ற நீதிபதிகளிலிருந்தே பெரும்பாலும் உச்சநீதிமன்றத்துக்கு நீதிபதிகள் பிரேரிக்கப்படுவது வழக்கம்.
 
இந்த முறையை ஒபாமா இப்போதும் பின் பற்றினால், நீதிபதியாக பிரேரிக்கப்படவிருக்கும் பெயர்களில் இந்தியாவில் பிறந்த தமிழரான, ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசனின் பெயரும் ஒன்று.
 
ஸ்ரீகாந்த் அல்லது ஸ்ரீ ஸ்ரீநிவாசன் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றுகிறார். கடந்த 2013ம் ஆண்டில் அவர் கொலம்பியா நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் இவர்.